முரசொலி தலையங்கம்

“வரைவு ஒளிப்பதிவு மசோதா; திரைத்துறையின் கருத்துரிமையை ஒழிப்பதற்கு சதி செய்யும் மோடி அரசு”: முரசொலி சாடல்!

“வரைவு ஒளிப்பதிவு திருத்த மசோதா - 2021” திரைத்துறையின் கருத்துரிமையை ஒழிப்பதற்கான சதியின் விளைவுதான் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

“வரைவு ஒளிப்பதிவு மசோதா; திரைத்துறையின் கருத்துரிமையை ஒழிப்பதற்கு சதி செய்யும் மோடி அரசு”: முரசொலி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள திரைத்துறைச் சட்டம், கருத்துரிமைக்குத் திரை போடுவதாக இருக்கிறது. அதனால்தான் திரைத்துறையினர் தாண்டி அனைவரும் எதிர்க்க வேண்டியதாக உள்ளது!

“வரைவு ஒளிப்பதிவு திருத்த மசோதா - 2021” என்று இதற்குப் பெயர். இது 1952 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ள ஒளிப்பதிவுச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்கிறது. இது தொடர்பாக ஒன்றிய அமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான கடிதத்தை அனுப்பி இருக்கிறார்கள்.

“இந்த வரைவுச் சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (Central Board of Film Certification) மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையிலும் உள்ளது” என்று குற்றம் சாட்டி உள்ளார்.

“திரைப்படத்துறை மற்றும் திரைப்படச் சகோதரத்துவத்தினரிடையில் மட்டுமின்றி கருத்துச் சுதந்திரத்தைப் பெற்றுள்ள செறிவார்ந்த சமுதாயத்தின் நற்பொருள் கொண்ட பிரிவினர் இடையிலேயும்கூட கடுமையான அச்ச உணர்வுகளை விதைத்துள்ளது. பொதுமக்கள் பார்வைக்கான சான்றிதழ் அளிக்கப்பட்டுவிட்டால் அது மாநிலங்களின் எல்லைக்குள் விடப்பட்டு விடவேண்டும்.

ஏனெனில் சட்டம் ஒழுங்கு மாநில அரசின் பொருளாக இருக்கிறது. ஆனால் இப்போது ஒன்றிய அரசு இந்த வரைவுச் சட்ட முன்வடிவின் மூலம் ஒத்துழைப்பான கூட்டாட்சி உணர்வுக்கு எதிராகச் செல்வதோடு மாநில அரசுகளின் அதிகாரங்களையும் பறிக்கிறது. அதை தமது சொந்த மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியமாக ஆக்குகிறது.

“வரைவு ஒளிப்பதிவு மசோதா; திரைத்துறையின் கருத்துரிமையை ஒழிப்பதற்கு சதி செய்யும் மோடி அரசு”: முரசொலி சாடல்!

தொடர்ச்சியாக இந்தச் சட்ட முன் வடிவுக்கு ஒரு முன்னோடியாக மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் முடிவுகளுக்கு எதிராக மேல் முறையீடு செய்வதற்காகச் செயல்பட்டு வந்த மேல்முறையீட்டு வாரியம் கலைக்கப்பட்டுவிட்டது” - என்று அனைத்துப் பிரச்சினைகளையும் வரிசைப்படுத்தி இருக்கிறார் முதலமைச்சர். மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தைச் சுயாட்சியுடன் செயல்பட அனுமதிக்கவேண்டும் என்பது அவரது கோரிக்கை.

* இந்த சட்டமானது மத்திய அரசுக்கு திருத்த அதிகாரங்களைத் தருகிறது.

* ஏற்கனவே மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் (Central Board of Film Certification - CBFC)) வழங்கப்பட்ட சான்றினை மறுபரிசீலனை செய்ய உதவப் போகிறது.

* திரைப்படத்துக்குச் சான்று தருவதில் ஏதாவது விதிமுறை மீறப்பட்டிருந்தால் அதனை திருத்தும் உரிமை ஒன்றிய அரசுக்கு உண்டு.

* வாரியத்தின் முடிவை மாற்றியமைக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்குத் தேவை என்பதையே இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.

*பொதுமக்கள் பார்வைக்கு சான்றளிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு உணர்ந்தால் மேல் நடவடிக்கையில் இறங்கலாம்.

* வயது அடிப்படையிலான வகைப்படுத்தல் மற்றும் வகைப்பாட்டை இது முன்மொழிகிறது. இதுவரை இருந்த யு/ யுஏ/ ஏ என்பது, இன்னும் கூடுதலான வகைப்பாடுகளோடு செய்யப்பட இருக்கிறது. இத்தகைய மிக மிக நுண்மையான வகைப்படுத்துதல் முடிவெடுப்பதில் சிரமத்தை மட்டுமல்ல; வர்த்தகத்தையும் பாதிக்கும்.

* தற்போது சி.பி.எப்.சி வழங்கிய சான்றிதழ் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு மீண்டும் அனுமதி வாங்க வேண்டும்.

* சென்சார் செய்யப்பட்ட பின்பும் ஒரு தனிநபர் அல்லது அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க அரசு விரும்பினால் படத்திற்கு வழங்கிய தணிக்கையைத் திரும்பப் பெறுவதற்கும் வழிவகுக்கிறது. - என்று வரிசைப்படுத்தலாம். இதனால்தான் இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டி உள்ளது.

“வரைவு ஒளிப்பதிவு மசோதா; திரைத்துறையின் கருத்துரிமையை ஒழிப்பதற்கு சதி செய்யும் மோடி அரசு”: முரசொலி சாடல்!

“ஒரு படைப்பாளனைச் சிந்திக்கிறபோதே தடை செய்கிற மிகப் பெரிய ஆபத்தினை உள்ளடக்கியது. முகிழ்த்துவரும் நாகரிக உலகில் சென்சார் குழுவை மேலும் தளர்த்த வேண்டுமேயொழிய அரசாங்கச் சான்றிதழ் என்பது அபத்தமான ஒன்று.

இது எதிர்ப்பு என்கிற பெயரில் வேண்டாதவர்கள், சமூகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் குறுகிய சுயநலச் சக்திகளுக்கு ஊக்கமளிக்கும். இந்தச் சட்டம் அமுலுக்கு வந்தால் ஏற்கெனவே பல முற்போக்குக் கருத்துகளை முன்னிட்டு எடுத்து வெற்றிகரமாக ஓடிய பல திரைப்படங்களின் கதி என்னவாகும் என்கிற பெரிய குழப்ப நிலை ஏற்படும்.

ஒரு திரைப்படத்தின் மூலமாக ஏற்படுகிற எந்தவொரு விளைவும் அதைக் கட்டுப்படுத்துகிற நடவடிக்கைகளும் மாநில அரசுகளின் வரம்புக்கு உட்பட்டு இருப்பதால் ஒன்றிய அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான அவசியமில்லை. காலச் சக்கரத்தைப் பிற்போக்குத்தனத்திற்காகப் பின்னோக்கிப் போக வைக்கிற ஏற்பாடு இது. மொத்தத்தில் கலைப்படைப்புகளின் சிந்தனைகளையும் முற்போக்கு நாகரிக மனப்பான்மையையும் முடக்குகிற வேலை” என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் படைப்பாளிகள் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்ட படைப்பாளிகள் கருத்து கூறியிருக்கிறார்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால் ஏதோ சென்சார் விதிமுறைகளைப் போலத் தெரியும். ஆனால் இது முழுக்க திரைத்துறையின் கருத்துரிமையை ஒழிப்பதற்கான சதியின் விளைவுதான். ஒரு பார்வையாளரின் புகாரின்பேரில் தணிக்கைச் சான்றிதழைத் திரும்பப் பெற முடியுமானால் அவர்களுக்குத் தேவை ஏதாவது ஒருவரின் புகார்க் கடிதம் மட்டும்தான். இதை விட கருத்துரிமைக்கு வேட்டு வேறு எதுவும் இருக்க முடியாது. இந்தச் சட்டம், ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கப்பட வேண்டியதே!

banner

Related Stories

Related Stories