முரசொலி தலையங்கம்

காவிரி விவகாரம்: “கர்நாடக அரசை கேள்வி கேட்கும் தைரியம் எல்.முருகனுக்கு உண்டா ?” - ‘முரசொலி’ கேள்வி !

கர்நாடக அரசை காவிரிப் பிரச்சினையில் யோக்கியமான அரசு என்று தமிழ்நாட்டில் சொல்லும் முதல் ஆள் இந்த எல்.முருகன் தான் என முரசொலி தலையங்கம் சாடியுள்ளது.

காவிரி விவகாரம்: “கர்நாடக அரசை கேள்வி கேட்கும் தைரியம் எல்.முருகனுக்கு உண்டா ?” - ‘முரசொலி’ கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக இருந்து, நேற்றைய தினம் ஒன்றிய அரசின் இணை அமைச்சராகவும் ஆகி இருக்கிறார் எல்.முருகன். சில நாட்களுக்கு முன்னால் அவர் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட நான்கு பா.ஜ.க உறுப்பினர்களை அழைத்துச் சென்று பிரதமருக்கு அறிமுகம் செய்து வைத்து வாழ்த்துப் பெற்றார். வெளியில் வந்த அவர் அளித்த பேட்டி, அவர் வகிக்கும் பதவிக்கு மரியாதை தருவதாக இல்லை. அவர் தன்னை கர்நாடக பா.ஜ.க.வின் கிளைத் தலைவராக நினைத்துக் கொண்டு பேசுகிறாரே தவிர தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக நினைக்கவில்லை. அந்த நினைப்பே இல்லை!

தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய தண்ணீரைத் தடுத்து நிறுத்தும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது கர்நாடகம். அதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. தமிழ்நாடு முதலைச்சருக்கும் கர்நாடக முதலமைச்சருக்கும் கடித யுத்தமே நடந்து வருகிறது. டெல்லி சென்றுள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஒன்றிய அமைச்சரைச் சந்தித்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிவிட்டு வந்திருக்கிறார்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கருத்தைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கப்படாது என்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் உறுதியளித்துள்ளார். மேகதாது அணை கட்டும் திட்டத்தையே கர்நாடகம் கைவிட வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை வைத்துள்ளார். கர்நாடகாவில் இருந்து இந்த ஆண்டு 8 டி.எம்.சி தண்ணீர் கூட கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் சொல்லி இருந்தார். இவை எதுவும் தெரியாமல் பா.ஜ.க வின் தமிழ்நாடு தலைவர் எல்.முருகன் பேசியிருப்பதைப் பார்க்கும் போது அவர் தமிழ்நாட்டில் இருக்கிறாரா, அல்லது கர்நாடக மாநிலத்தில் இருக்கிறாரா என்று சந்தேகம் வருகிறது.

காவிரி விவகாரம்: “கர்நாடக அரசை கேள்வி கேட்கும் தைரியம் எல்.முருகனுக்கு உண்டா ?” - ‘முரசொலி’ கேள்வி !

பெட்ரோல், டீசல் விலை ஏன் அதிகமாகிறது என்றால் அது கப்பலில் வருகிறது, அதனால் வரத் தாமதம் ஆவதால் அதிக விலைக்கு விற்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது - என்று சொன்ன மகாவிஞ்ஞானி அவர். அத்தகையவர், காவிரி விவகாரத்திலும் தனது அபத்தக் கண்டுபிடிப்பைச் செலுத்தியுள்ளார்.

“காவிரி நீரை முறையாகச் சேமிக்காமல் தமிழ்நாடு தான் அதனை வீணடிக்கிறது” என்று சொல்லி இருக்கிறார் எல்.முருகன். “காவிரி நீரைப் பொறுத்தமட்டில் அதனை வீணாக்குவது என்பது தமிழ்நாடு தான். இதில் கர்நாடகம் நீர் பங்கீட்டைச் சரியாகத்தான் வழங்குகிறது. அதனை சேமித்து வைக்க வழி இல்லாமல் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீர் வீணாகக் கடலில் கலந்து விடுகிறது.

குறிப்பாக காவிரி மேலாண்மை ஆணையம் வந்த பிறகு முறையாகத் தமிழகத்துக்கு தண்ணீர் பிரச்னை இல்லாமல் நடந்து வருகிறது” என்று டெல்லியில் பேட்டி தந்துள்ளார் எல்.முருகன். கர்நாடக அரசை காவிரிப் பிரச்சினையில் யோக்கியமான அரசு என்று தமிழ்நாட்டில் சொல்லும் முதல் ஆள் இந்த எல்.முருகன் தான்.

காவிரியின் குறுக்கே காவிரி ஆணையத்தின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது. அனுமதியே வாங்காமல் சாத்தியக் கூறு அறிக்கையை தயாரித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பியது கர்நாடகம். இத்திட்டத்துக்கான விரிவான அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. அனுமதி கேட்ட மாநில அரசும் பா.ஜ.க தான். அனுமதி கொடுத்த ஒன்றிய அரசும் பா.ஜ.க தான். இவை எதையும் பேசாத எல்.முருகனும் பா.ஜ.க தான்.

காவிரி விவகாரம்: “கர்நாடக அரசை கேள்வி கேட்கும் தைரியம் எல்.முருகனுக்கு உண்டா ?” - ‘முரசொலி’ கேள்வி !

இப்படி அனுமதி கொடுத்தது தவறு என்றும், இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறானது என்றும், இது நீதிமன்ற அவதூறு என்றும் தமிழ்நாடு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பது இவருக்குத் தெரியுமா? கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, யாகச்சி, ஸ்வர்ணவதி ஆகிய ஐந்து நீர்த்தேங்களை காவிரியிலும் காவிரியின் துணை நதிகளிலும் கட்டி தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்கிறது கர்நாடகா. இவை எல்லாம் எந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது என்பதைக் கேட்கும் தைரியம் இவருக்கு உண்டா?

ஹேமாவதி அணையில் இருந்து 14 நீர்த் தேக்கத் திட்டங்களை நிறைவேற்றி கூடுதலான தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொண்டுள்ளார்கள் என்பதாவது இவருக்குத் தெரியுமா? இதனால் கிருஷ்ணராஜ சாகர் நீர் தேக்கத்திலிருந்து வரவேண்டிய நீரின் அளவும் குறைந்தது. இத்தகைய மறைமுக திட்டங்களால் கபினி அணைக்கும் கிருஷ்ணராஜசாகர் நீர் தேக்கத்துக்கும் போதிய நீர்வரவிடாமல் தடுத்துவிட்டு சட்டவிரோதமாக நீரைப் பதுக்கி வைத்துக் கொள்கிறது கர்நாடகம் என்பது பகிரங்கமான குற்றச்சாட்டு. இதனை வாதங்களால் எதிர்கொள்ளும் வல்லமை எல்.முருகனுக்கு உண்டா?

பெண்ணையாற்றின் கிளைநதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டியுள்ளது. அதேபோல் பெண்ணையாற்றில் சில கட்டுமானங்கள் உள்ளன. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை முடிவுகள் இல்லை! காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. அதற்கு இதுவரை ஒரு நிரந்தரத் தலைவர் நியமிக்கப்படவில்லை.

எல்லாம் தெரிந்தவர் போலப் பேசுவதற்கு பெட்ரோல் போல உலகளாவிய பிரச்சினை அல்ல. உள்ளூர் பிரச்சினை. உலகளாவிய பிரச்னையில் அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம். உள்ளூர் பிரச்சினையில் முறையாகப் பேச வேண்டும்! இதுவரை எப்படியோ, இனியாவது அவர் தமிழ்நாட்டை நினைக்க வேண்டும். காவிரியின் வாழ்வுரிமை காக்க தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்!

banner

Related Stories

Related Stories