முரசொலி தலையங்கம்

“முதலமைச்சராக மட்டுமல்லாமல் தாய்மைக் குணம் கொண்டவராகவும் செயல்படும் மு.க.ஸ்டாலின்” : முரசொலி தலையங்கம்

“முதலமைச்சராக மட்டுமல்லாமல் தாய்மைக் குணம் கொண்டவராகவும் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகிறார் மு.க.ஸ்டாலின்” என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

“முதலமைச்சராக மட்டுமல்லாமல் தாய்மைக் குணம் கொண்டவராகவும் செயல்படும் மு.க.ஸ்டாலின்” : முரசொலி தலையங்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (7-7-2021) தலையங்கம் வருமாறு:

தமிழ்நாடு அரசின் நிர்வாகத் திறமையின் காரணமாக கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டுக்குள்கொண்டு வரப்பட்டதால் இதுவரை இருந்த முழுமையான ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. அதாவது கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலைமையை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டுள்ளது.

இத்தகைய சூழலில், இது தமிழ்நாடு அரசின் மாபெரும் சாதனை என்றெல்லாம் பாராட்டுகளைச் சொல்லிக் கொள்ளாமல், மக்களுக்கு எச்சரிக்கையைக் கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது முதலமைச்சராக மட்டுமல்ல; தாய்மைக் குணம் கொண்ட முதலமைச்சராகவும் அவரது உரை நாட்டு மக்களுக்கு அமைந்துள்ளது.

“நான் இப்போது நாட்டு மக்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் - கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொல்லலாமே தவிர... முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. எனவே, மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. தளர்வுகள் அறிவித்துவிட்டார்கள் - அதனால் நாம் எந்த விதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை என்று யாரும் நினைக்கக்கூடாது. விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றித்தான் ஆக வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர்.

“என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை - மக்கள் அனைவரும் தங்களுக்குத் தாங்களே சுயகட்டுப்பாட்டை விதித்துக் கொள்ள வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார்.

1. வீட்டை விட்டு வெளியில் வரும் அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். 2. கூட்டமாகக் கூடுவதை தவிர்த்துவிடுங்கள். 3. வரிசையில் நின்று வாங்குங்கள். 4. வரிசையில் நிற்கும்போதும் போதிய இடைவெளியைப் பின்பற்றுங்கள். 5. பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும்போதும் அதிகமான கூட்டம் இருக்கும் இடத்திலும் இரண்டு முகக் கவசங்களைக்கூட பயன்படுத்தலாம். 6. கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யுங்கள். 7. கடைகளில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் முகக்கவசங்கள் பயன்படுத்துங்கள். 8. அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே பணியாற்றுங்கள். 9. கடைகளின் நுழைவாயில்களில் கை சுத்திகரிப்பானை வையுங்கள். உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகள் கொண்டு பரிசோதனை செய்யுங்கள். 10. நோய்த் தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். நீங்களாகவே தெரிந்த சிகிச்சை முறைகளைச் செய்து கொள்ள வேண்டாம்.- இவைதான் முதலமைச்சர் சொல்லி இருக்கும் பத்து கட்டளைகள்.

இதனைப் பின்பற்றினால் மூன்றாவது அலையை வெல்லலாம். எந்த அலையையும் வெல்லலாம். இரண்டாவது அலை தமிழ்நாடு அரசின் நிர்வாகத் திறமை காரணமாக முற்றுப்பெறப் போகிறது. இதேபோல் முதல் அலைக்கு அ.தி.மு.க ஆட்சி முற்றுப்புள்ளி வைத்திருந்தால் இரண்டாவது அலையே வந்திருக்காது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களும் கொரோனாவை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது அ.தி.மு.க. அரசு. தேர்தலைக் காரணம் காட்டினாலும், தேர்தலுக்குப் பிறகு நாம் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்ற நினைப்பும் அதற்கு மிக முக்கியமான காரணமாக அவர்களுக்கு இருந்தது. அதனால்தான் கொரோனா தடுப்புப் பணிகளையே மறந்தார்கள். அதுதான் இரண்டாவது அலைக்குக் காரணமாக ஆகிவிட்டது.

இன்றைய அரசு மூன்றாவது அலையைத் தடுத்துவிடும் என்ற நம்பிக்கை நாட்டு மக்களுக்கு இருக்கிறது. அத்தகைய நம்பிக்கை கொண்ட மக்கள், விதிமுறைகளை நிச்சயம் கடைப்பிடித்தாக வேண்டும். இதுவரை நாம் எதிர்கொண்ட வைரஸ் தாக்குமா அல்லது உருமாற்றம் பெறுமா என்பது மருத்துவர்களுக்குள்ளேயே இன்னும் முடிவாகவில்லை. அக்டோபர்-நவம்பரைக் காட்டி அவர்கள் பீதியை ஏற்படுத்தி வருகிறார்கள். அதைத்தடுக்கும் கடமையும் பொறுப்பும் மக்களுக்கும் இருக்கிறது. அதனால் அதிகப்படியான எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்கவேண்டும்.

மூன்றாவது அலையின் தாக்கம் குறித்து ஒன்றிய அரசு தனது அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து ஆய்வுகள் மேற்கொண்டுள்ளது. மூன்றாவது அலையின் வேகத்தை தடுக்க வேண்டுமானால் மக்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை விடாமல் பின்பற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் இவர்கள். தடுப்பூசி என்பது இன்னமும் முழுமையாக அனைத்து மக்களுக்கும் கிடைக்காத நிலையில் பாதுகாப்பு நெறிமுறைகளே மிக முக்கியமானவையாக இருக்கின்றன.

கொரோனாவில் இருந்து மீண்ட சர்க்கரை நோயாளிகள் மிகக்கவனமாக இருக்கவேண்டும் என்றும், அதன்பிறகு ஏற்படும் ஒவ்வொரு மருத்துவப் பாதிப்பையும் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்றும் மருத்துவவல்லுநர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதனால் தான் கொரோனாவுக்கு பிந்தைய மருத்துவ ஆலோசனை மையத்தை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இது செயல்பட இருக்கிறது.

கொரோனாவுடன் சேர்ந்து கருப்புப் பூஞ்சையும் மிரட்டிக் கொண்டு இருக்கிறது. முகக்கவசத்தை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். துவைத்து துவைத்து பயன்படுத்தக்கூடாது. முன்கூட்டியே மருத்துவமனைக்கு வராமல் தாமதமாக வந்த காரணத்தால் சிலர் பார்வை இழப்புக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படி தினந்தோறும் வரும் செய்திகள் அச்சம் ஊட்டுவதாக இருப்பதால்தான் எச்சரிக்கை, எச்சரிக்கை என்று எச்சரிக்கைப்படுத்திக் கொண்டே இருக்கிறார் முதலமைச்சர். மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்படவேண்டும்!

banner

Related Stories

Related Stories