முரசொலி தலையங்கம்

“எது நாடகம்?” - எடப்பாடி பழனிசாமிக்கு ‘முரசொலி’ தலையங்கம் கேள்வி!

நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அறிக்கையின் மூலமாக நீட் தேர்வு மட்டுமல்ல, மாணவர்களது எதிர்காலம் கடந்த சில ஆண்டுகளாக எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியப்போகிறோம் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.

“எது நாடகம்?” - எடப்பாடி பழனிசாமிக்கு ‘முரசொலி’ தலையங்கம் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

'முரசொலி’ நாளேட்டின் இன்றைய (5-7-2021) தலையங்கம் வருமாறு:

நீட் தேர்வால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு ஆணையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். அந்த ஆணையம் அமைக்கப்பட்டது தான் நீட் தேர்வுக்கான முற்றுப்புள்ளியின் முதற்படி.

குழு அமைத்து மக்கள் கருத்தைக் கேட்பது - அந்தக் கருத்துகளைக் கொண்ட அறிக்கையை அரசுக்குக் கொடுப்பது - அரசு அதன் மீதான கொள்கை முடிவை எடுப்பது - அமைச்சரவைத் தீர்மானமா, சட்டமன்றத்தில் தீர்மானமா, புதிய சட்ட முன்வடிவா ஏதாவது ஒன்றை உருவாக்குவது - இதுதான் சட்டம் அறிந்தோர் செய்யும் நெறிமுறை. அந்த அடிப்படையில்தான் முதலமைச்சர் இயங்கி வருகிறார்.

நேரடியாக ஆட்சிக்கு வந்ததும், நீட் விலக்கு என்று சொல்லி விட்டால், அதற்கு உடனடியாகப்போய் நீதிமன்றத்தில் தடை வாங்கி விடுவார்கள். இதனை உணர்ந்தே படிப்படியான முயற்சிகளில் முதலமைச்சர் இயங்கி வருகிறார்.

1984 முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்தார் முதலமைச்சர் கலைஞர். 2007 ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வுக்கு சட்ட ரீதியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அருந்ததியர் இன மக்களுக்கான உள் ஒதுக்கீடு பற்றி ஆராய நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையிலும் ஒரு ஆணையம் அமைத்தார் முதலமைச்சர் கலைஞர். அதனடிப்படையில் உள் ஒதுக்கீடு அந்த மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராகவும் சிலர் நீதிமன்றம் போனார்கள். ஆனால் தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. சட்டரீதியாக ஆய்வு செய்து, மக்கள் கருத்தைக் கேட்டே முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று நீதிமன்றம் சொன்னது. இந்த தீர்ப்புக்கு அடிப்படை முதலமைச்சர் கலைஞரின் தீர்க்கமான சிந்தனைதான்.

நீதிமன்றத்துக்கு அரசாங்கத்தின் சட்டமோ, உத்தரவோ போனால் அது எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்ற கேள்வியை எழுப்புவார்கள். அந்த அடிப்படையில்தான் இது போன்ற ஆணையங்கள் அமைக்கும் நெறிமுறையை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வகுத்தார்கள். அந்த அடிப்படையில்தான் இன்றைய முதலமைச்சரும் செயல்படுகிறார்.

நாம் இங்கே அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கொடுத்ததைப் போல ஆந்திராவில் ஒரு சட்டம் போனது. அதனால் நீதிமன்றத்தை நிராகரித்துவிட்டது. இன்று மராத்தா இடஒதுக்கீடு நீதிமன்றத்தின் முன்னால் கேள்விக்குறியாக நிற்கிறது. இத்தகைய சூழ்நிலை உருவாகிவிடக் கூடாது என்பதால்தான் முதலில் இருந்தே சட்டபூர்வமான வழிகளில் முதலமைச்சர் செல்கிறார்.

இது எதுவும் பழனிசாமிக்கு புரியாததால், ‘நீட் ஆணையம் என்பது ஒரு நாடகம்' என்று பேட்டி கொடுக்கிறார். ஓரங்க நாடகங்களில் வல்லவர்தான் அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் என்பதை நாடறியும். நாட்டு மக்களும் அறிவார்கள்.

நீட் தேர்வு பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்குக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது பதில் மனு மட்டுமல்ல, உரிமையை நிலைநாட்டும் மனு.

“நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்யத்தான் உண்மை கண்டறியும் குழுவை அரசு நியமித்துள்ளதை இம்மனு தெளிவுபடுத்தி உள்ளது. நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு 84,343 மனுக்கள் வரப்பெற்றுள்ளதாகவும், நீட் பாதிப்பு குறித்து பெற்றோரும், மாணவர்களும் கருத்துகளை தெரிவித்துள்ளதாகவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வின் தாக்கம் குறித்தும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் குறைகளை கேட்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இக்குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் நலன் சார்ந்த அரசால் இந்தக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி ஏ.கே.ராஜன் குழு நியமனத்தில் அரசியல் சாசனத்தின் எந்த அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை என்றும், மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டே குழு நியமிக்கப்பட்டு உள்ளதாக திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பிறகுதான் அரசு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் எனவும், கிராமப்புற மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்கள் எழுப்பியுள்ள பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய குழு நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு ஜனநாயத்தை ஒடுக்கும் முயற்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது கிராமப்புற மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று பயிற்சி பெற இயலாத நிலை உள்ளதாக அரசுக்கு மனுக்கள் வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாடப் புத்தகங்கள், பயிற்றுவிக்கும் முறை, தேர்வு நடைமுறை, மதிப்பீடு அனைத்தும் தமிழக கல்வி வாரியத்திற்கும், பிற கல்வி வாரியங்களுக்கும் இடையே வித்தியாசங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளை எழுதிய பின்னரே நீட் தேர்வில் தேர்ச்சி அடைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பில் தற்போதைய நிலையை ஆராயவும், அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பை உறுதிசெய்யவும் ஒரு ஆய்வு என்பது அவசியமாவதால், இந்தக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையின் மூலமாக நீட் தேர்வு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மாணவர்களது எதிர்காலம் கடந்த சில ஆண்டுகளாக எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும்தான் அறியப்போகிறோம்.

இதனைத் தான் நாடகம் என்கிறார் பழனிசாமி. நீட் தேர்வுக்கு எதிராகப் பேசும் பழனிசாமி, தனது கூட்டணிக்கட்சியான பா.ஜ.க.வைக் கண்டித்தாரா? அது நாடகம் அல்லவா? நீட் தேர்வுக்கு சட்டபூர்வமான தடை விழுந்தால் ஆதரிப்போம் என்று சட்டமன்றத்தில் சொல்லிவிட்டு பிரதமர் வீட்டு வாசல் முன்னால் நின்று நீட் தேர்வை பா.ஜ.க ஆதரிப்பது நாடகம் அல்லவா? அதனை பா.ஜ.க.வின் எடுபிடி பழனிசாமி ஏன் கண்டிக்கவில்லை? தன்னை பாரதப் பிரதமர் பாராட்டினார் என்று சட்டமன்றத்தில் பலதடவை சொன்ன பழனிசாமிக்கு பா.ஜ.க.வின் நாடகங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?

- முரசொலி தலையங்கம்

banner

Related Stories

Related Stories