முரசொலி தலையங்கம்

“வருமான வரித் துறையினரின் மூலம் தி.மு.கவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த மோடி அரசு சதி”: முரசொலி தலையங்கம்!

எ.வ.வேலுவிடத்திலிருந்தும் எதனையும் கைப்பற்றவில்லை என்கிறபோது, இந்த சோதனையே ஒரு உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

“வருமான வரித் துறையினரின் மூலம் தி.மு.கவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த மோடி அரசு சதி”: முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேர்தல் நேரம்! தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு கூடுதலாக ஆகிக்கொண்டே வருகிறது எனும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய சமயத்தில், ‘எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை. மு.க.ஸ்டாலின் தங்கி இருந்த கல்லூரியிலும் சோதனை நடந்ததால் பரபரப்பு’ எனும் தலைப்புச் செய்தியும் நாளேடுகளில் வெளியாகிறது.

இதன் நோக்கம் என்ன? மத்திய அரசின் முகாமையினர் இதனை ஏன் இந்த நேரத்தில் செய்கிறார்கள் என்கிற வினாக்கள் நம்முள் எழுவதில் நியாயம் இருக்கவே செய்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு தி.மு.க.வின் செல்வாக்கைக் குறைப்பதற்காக - அவமதிப்பை மக்களிடம் உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட வருமான வரி சோதனைகளைச் செய்கிறார்கள்.

இதன் மூலம் தி.மு.க.வைத் தோல்வி அடையச் செய்யலாம் என்கிற நோக்கத்தில் இந்த நேரத்தில் செய்கிறார்கள். எ.வ.வேலுவின் பல சொந்த இடங்களில் சோதனை செய்தார்களே, எவ்வளவு கைப்பற்றினார்கள் என்று தெரிவித்து இருக்கிறார்களா என்றால் இல்லை என்ற விடையே கிடைக்கிறது. ஆனால் நாளேடுகளில் 3.50 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் சிக்கியுள்ளதாகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து எ.வ.வேலு ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர்,“வருமான வரித்துறையின் துணை இயக்குநர் ராஜ்மோகன் தலைமையில் 110 பேர் கொண்ட குழுவினர் கடந்த 2 நாள்களாக என்னுடைய வீடுகள், கல்வி நிறுவனங்கள் உள்பட10 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கியிருந்த அறையிலும், அவர் வந்த வாகனத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

“வருமான வரித் துறையினரின் மூலம் தி.மு.கவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த மோடி அரசு சதி”: முரசொலி தலையங்கம்!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் மற்றும் வட மாவட்டங்களிலும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இந்தப் பணியிலிருந்து என்னை முடக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், அரசியல் உள்நோக்கத்துடனும் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே சோதனையில் ரூபாய் 3.50 கோடி கைப்பற்றியுள்ளதாக தவறான தகவலை சிலர் திட்டமிட்டு கசிய விட்டுள்ளனர். ஆனால், ஒரு பைசா கூட கைப்பற்றப்படவில்லை” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இரண்டு நாள்களாகச் சோதனை நடத்திய 110 அதிகாரிகள் எ.வ.வேலு வீட்டில், அலுவலகத்தில் இன்ன இன்ன ஆவணங்கள், பணம் இவ்வளவுmகைப்பற்றப்பட்டுள்ளன எனும் தகவலை எதுவும் அறிவிக்கவில்லை. எதையும் அறிவிக்காத நிலையில், ரூபாய் 3.50 கோடி கைப்பற்றியதாக எப்படிச் செய்திகள் வெளியாகின்றன. சம்பந்தப்பட்டவர் என்ன நடந்தது என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறி மறுத்து இருக்கிறார். பிறகு எப்படி இத்தகைய செய்திகள் வெளியாகின்றன என்றால் தி.மு.க.வின் செல்வாக்கைக் குறைக்க அந்த அமைப்புக்கு ஓர் அவமதிப்பை உண்டாக்க வேண்டும் என்பதற்காகத்தான் மத்திய பா.ஜ.க. அரசினால் இத்தகைய செய்திகள் கசியவிடப்படுகின்றன.

நாட்டில் தேர்தல் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் முக்கியக்கட்சியின் வேட்பாளராகவும் பல தொகுதிகளின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள ஒருவரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையிடுமுன் தேர்தல் ஆணையரிடம் தெரிவித்து விட்டு சோதனையிட்டு இருக்க வேண்டும். அப்படிச் செய்யப்படவில்லை.

தேர்தல் விதி முறைகளுக்கு மாறாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளது தி.மு.க.வுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது என்பது மிக அப்பட்டமாகத் தெரிகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாகனத்திலும் வருமான வரித்துறையினர் எதனையும் கண்டுபிடிக்கவில்லை. எ.வ.வேலுவிடத்திலிருந்தும் எதனையும் கைப்பற்றவில்லை என்கிறபோது, இந்த சோதனையே ஒரு உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே தான் நமது மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த 26ம் தேதியன்று இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பொதுச்செயலாளர் உமேஷ் சின்காவிடம புகார் மனு ஒன்றினை அளித்து இருக்கின்றார்.

“வருமான வரித் துறையினரின் மூலம் தி.மு.கவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த மோடி அரசு சதி”: முரசொலி தலையங்கம்!

மத்திய அரசின் இத்தகைய தரம் தாழ்ந்த வருமான வரித்துறை சோதனைகளின் மூலம் பா.ஜ.க.வோ, அ.தி.மு.க.வோ வெற்றியை அடைந்து விட முடியாது. மத்திய அரசின் கீழ்மையான எண்ணங்களை பொது மக்கள் மிக நன்றாக உணர்ந்து கொண்டுள்ளார்கள். வருமான வரித்துறையை வைத்துக் கொண்டு மத்திய அரசு மிரட்டுவது பொதுமக்களால் வரவேற்கப்பட வில்லை. இந்த நடவடிக்கைகளை 67 சதவிகித மக்கள் எதிர்க்கிறார்கள். மத்திய அரசின் இத்தகைய போக்குகள், நடவடிக்கைகள் எல்லாம் ஜனநாயக விரோதச் செயல்களாகும். இதனைக் கொண்டு வெற்றி எனும் இலக்கை அடைந்துவிட முடியாது.

தி.மு.க.வைக் கருத்துக்கு கருத்து எதிர்க்க முடியாதவர்கள், கொள்கையின் வழி மக்களைச் சந்திக்க அச்சம் கொண்டவர்கள், தி.மு.க.வின் கூட்டணியின் பக்கமே மக்கள் இருக்கிறார்கள் என்று கண்டு கொண்டவர்கள், பரப்புரைக் களத்தில் சந்திக்கத் திராணியற்றவர்கள், மண்டைச் சுரப்பு இல்லாதவர்கள், தி.மு.க.வின் பக்க முள்ள மக்கள் எழுச்சியைக் கண்டு வயிறு எரிபவர்கள், அறிவாயுதம் ஏந்தத் தெரியாத கோழைகள் வருமான வரித்துறையை வைத்துக் கொண்டு தி.மு.க.வை - அதன் அணியை மிரட்டிப் பணிய வைக்கப் பார்க்கிறார்கள். வருமான வரித்துறையினரின் சோதனை தி.மு.க.வுக்கு அவப்பெயரை உண்டாக்கவே என்பதை நாட்டுமக்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அதற்கு நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலைக்கு வந்து, நம் எதிரிகள் குழம்பிப் போய் இருக்கிறார்கள் என்பது அவர்கள் எடுத்த ஆயுதத்திலிருந்து நாம் புரிந்து கொள்கின்றோம். ‘தடைக்கற்கள் பல உண்டென்றாலும் தடந்தோள்கள் உண்டென்று ஆடிடுவோம்’ எனும் கவி மொழியை உண்மையாக்குவோம். வெற்றியை நோக்கி முன்னேறுவோம்!

banner

Related Stories

Related Stories