முரசொலி தலையங்கம்

“இந்துக் கோவில்களைத் தனியார்வசம் ஒப்படைக்க தீவிரம் காட்டும் பா.ஜ.க” : முரசொலி தலையங்கம் குற்றச்சாட்டு!

சட்டங்களை நீக்கிவிட்டு இந்துக் கோவில்களைத் தனியார்வசம் ஒப்படைக்க பா.ஜ.க தீவிரம் காட்டிவருகிறது.

“இந்துக் கோவில்களைத் தனியார்வசம் ஒப்படைக்க தீவிரம் காட்டும் பா.ஜ.க” : முரசொலி தலையங்கம் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அ.இ.அ.தி.மு.க தன்னைப் பெருமைக் காக ‘திராவிடக் கட்சி’ என்று சொல்லிக்கொள்கிறது. சிலர், அதை திராவிடக் கட்சி இல்லை என்று சொல்கிறார்கள். அவர்களின் ஆதரவாளர்களே அப்படிக் கூறுகிறார்கள். தொலைக்காட்சி விவாதத்தில் அ.இ.அ.தி.மு.க சார்பாகப் பங்கேற்ற சிலர் திராவிடக் கட்சி இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். எது எப்படியாயினும் அண்ணாவின் பெயரைக்கட்சியோடு வைத்திருப்பதற்காவது ‘கொஞ்சம்’ திராவிட இயக்கச் ‘சொரணை’ இருக்கும் என்று எதிர்பார்த்தால், அதற்கும் ஏமாற்றமே நமக்குக் கிடைக்கும் என்பதற்கு அடையாளமாக பா.ஜ.க தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதைப் பற்றி அ.தி.மு.க என்ன கருதுகிறது என்று நமக்குத் தெரியாது.

பா.ஜ.க தனித்த பெரும்பான்மை பெறும் விதமாக வேட்பாளர்களைக் களத்தில் நிற்க வைத்துப் போட்டியிடவில்லை. தமிழ்நாட்டில் அடுத்து அது ஆட்சிக்கு வரக்கூடிய கட்சியுமில்லை. தற்போது தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சியோடு பா.ஜ.க கூட்டணி அமைத்து - ஆளுங்கட்சி 20 இடங்கள் கொடுக்க, அது களங்காணக் கூடிய கட்சியாக இருக்கிறது. இருப்பினும், தேர்தல் நேரத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றன. அதைபோல பா.ஜ.க.வும் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதிலே, பல புள்ளிகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதிலொன்று அறநிலையத் துறையைப் பற்றி இந்துக் கோவில்களைப் பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“மதச்சார்பற்ற அரசு, இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களை மட்டும் தன்வசம்வைத்திருப்பதை மாற்றி இந்துக்கோவில்களின் நிர்வாகம், இந்து ஆன்றோர், சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். ”பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டு இருப்பதாலேயே அடுத்த ஆண்டே இது மாற்றி அமைக்கப்பட்டுவிடும் என்கிற அச்சத்தில் இதனை நாம் எழுதவில்லை. இதைப்போன்ற ஒரு பரப்புரையை பா.ஜ.க காரர்கள் தமிழ்நாட்டில் சில காலமாக செய்து வருகிறார்கள்.

நீதிக்கட்சிக் காலத்தில் இந்து அறநிலையச் சட்டம் 1925 ஆம் ஆண்டுநிறைவேற்றப்பட்டது. சுமார் 3 ஆண்டுகள் விவாதம் நடத்தப்பட்டு இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. நீதிக்கட்சியினர் நாத்திகர்கள் அல்ல. அவர்கள் பக்திமான்கள். இச்சட்டத்தைக் கொண்டு வந்த பனகல் அரசர் சமஸ்கிருதம் படித்த அறிஞர். இச்சூழ்நிலையில் உருவான அந்தச் சட்டத்தை நீக்கிவிட்டு இந்துக் கோவில்களைத் தனியார்வசம் ஒப்படைக்க பா.ஜ.க தீவிரம் காட்டிவருகிறது.

இந்து அறநிலையச் சட்டம் இயற்றப்பட்ட போது, இங்கே மதச்சார்பற்ற அரசு இருந்ததாகச் சொல்ல முடியாது. ஆனால், சட்டம் இயற்றியவர்களோ பொதுநலன் கருதியே இயற்றினர். அதன்பின்னர் தொடர்ச்சியாக, வந்த அரசுதான் மதச்சார்பற்ற அரசாகத் தன்னை அரசியல் சட்டத்தில் அறிவித்துக் கொண்டது. அது தீமைக்கு துணை போவதற்கு இல்லை. நம் நாட்டில் பெரும்பான்மையான மதமாக இருப்பது இந்துமதமே. அதன் நன்மை கருதியே இந்து அறநிலையச்சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டமும் எளிதாக நிறைவேறிவிடவில்லை. நீதிமன்றங்களின் நெடிய விசாரணைக்குப் பிறகே சட்டமாயிற்று. இது மட்டுமில்லை - நீதிக்கட்சியின் ஆட்சிக்குப் பிறகு வந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் - இந்து அறநிலையச் சட்டத்தில் 1949 இல் சில திருத்தங்கள்கொண்டு வந்த போது, சட்டமன்ற உறுப்பினர்களுள் ஒருசிலர் எதிர்த்தனர்.

“இந்துக் கோவில்களைத் தனியார்வசம் ஒப்படைக்க தீவிரம் காட்டும் பா.ஜ.க” : முரசொலி தலையங்கம் குற்றச்சாட்டு!

அப்போது சென்னை மாகாணத்தின் பிரதமராய் இருந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் மசோதாவை முன்மொழிந்து சட்டமன்றத்தில் ஓர் உணர்ச்சி உரையை, ஆற்றினார். இதன் பிறகு. 1925ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து அறநிலையச் சட்டத்திற்குச் சில திருத்தங்களை கொண்டு வந்து ஓமந்தூரார் காலத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது, மேலே பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கு அன்றே சட்டமன்றத்தில் ஓமந்தூரார் விடையளித்துப் பேசி இருக்கிறார் என்பதை படிக்க நமக்கு வியப்பாகத் தோன்றுகிறது. “சர்க்கார் இலாகா ஒன்றைத் தனியாக ஏற்படுத்துவதற்குப் பதிலாக, தர்ம சொத்துக்களின் பாதுகாப்பு ஸ்தாபனம் ஒன்று இருந்தால் போதாதா? என்று சிலர் கேட்கின்றனர். இதையும் நாம் பரீட்சை செய்து பார்த்து விட்டோம்.

வேறொன்றுக்கும் போகவேண்டியதில்லை. இந்து மத பரிபாலன போர்டையே பார்ப்போம். இந்த ஸ்தாபனத்துக்கு ஓரளவுதான் அதிகாரம் உண்டு. அதனால் வழக்குகள் பெருகி, காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்படலாயிற்று. போதுமான அளவு அதிகாரம் இல்லாததால் யாரும் அதை மதித்து நடந்து கொள்வதில்லை. கீழ்க்கோர்ட்டுகளில் விளையாட்டுக் கருவிபோல் நடத்தப்பட்டுவருகிறது. வழக்காடுவதையே தொழிலாகக் கொண்டுள்ள ஒருசிலர், அதை ஒரு கோர்ட்டிலிருந்து மற்றொரு கோர்ட்டுக்கு இழுத்தடிக்கலாயினர்!

இவற்றிற்கெல்லாம் தர்ம சொத்துக்களின் வருமானத்திலிருந்தே செலவு செய்யப்பட்டுவந்தது. கோயில்களின் வரவு - செலவுத் திட்டங்களைத் தங்களுக்கு அனுப்புமாறு கேட்கப் போர்டுக்கு அதிகாரம் உண்டு; ஆனால், அவற்றை ஆராய்ந்து பார்க்கும் அதிகாரம் இல்லை. கணக்குகளை அனுப்புமாறு போர்டு கேட்கிறது. ஆனால், அவற்றை யாரும் அதனிடம் அனுப்புவதில்லை. அக்கிரமங்களைப் போர்டு கண்டுபிடிக்கிறது. ஆனால், அவற்றைச் சீர்திருத்தும் அதிகாரம் அதற்கில்லை. சீர்திருத்தங்கள் செய்வது பற்றிப் போர்டு ஆலோசனை கூறுகிறது. ஆனால், அதை அமுல் நடத்த அதனால் முடியாது. சுருங்கச் சொன்னால், இப்போது அமைந்துள்ள போர்டு, முரண்பாடு நிறைந்ததாகவும், அதிகாரமற்றதாகவும், தேவையைப் பூர்த்தி செய்யாததாகவும் உள்ளது என்றே கூறலாம். எனவே, அதைத் திருத்தி ஒழுங்கு செய்வதென்பது இயலாது. அடியோடு மாற்றியமைப்பது ஒன்றுதான் சிறந்தமுறை.

அஃதாவது, தகுந்த முறையில் சர்க்காரே, அதன் வேலையை மேற்கொள்ள வேண்டும். இதுதான் இந்த மசோதாவின் நோக்கமாகும். மசோதாவிலுள்ள முக்கிய அம்சங்களெல்லாம் இதை நன்கு எடுத்துக்காட்டுகின்றன. ”அப்போதைய சென்னை மாகாண சட்ட சபையில் 10.2.1949இல் பிரதம மந்திரி (அப்போதெல்லாம் மாகாண முதல்வர்களை ‘பிரீமியர்’ என்று கூறுவார்கள். தமிழில் பிரதம மந்திரி என்பார்கள்) ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்தமது மசோதாவின் முன்னுரையில் இப்படிக் கூறி இருக்கிறார். இப்போது பா.ஜ.க.வினர் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவைகளுக்கு ஓமந்தூராரின் கூற்று பதில் அளிப்பதுபோல் உள்ளது. இதை அ.இ.அ.தி.மு.க.வின் பார்வைக்கும் நாம் முன்வைக்க விரும்புகின்றோம்.

banner

Related Stories

Related Stories