
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெறும் போர் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தற்போது சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல கடைகள் மூடும் அபாயம் இருப்பதாகவும், டீ உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களின் விலை ஏறும் என்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து கச்சா எண்ண்ணெயின் விலையும் உயர்ந்து வருவதால் அடுத்து பெட்ரோல், டீசல் விலையும் ஏறும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில், வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு :-
அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்தேன். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும் அப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும் உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்திட வேண்டும் என்று பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளேன்.






