
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 16.2.2026 அன்று தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், சென்னை மாவட்டம், கிண்டி தொழிற்பேட்டையில் தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனத்திற்காக (டான்சி) 175 கோடி ரூபாய் செலவில் 263 தொழிற்கூடங்கள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளாகம், 32.33 கோடி ரூபாய் செலவில் சேலம், நெய்காரப்பட்டியில் பட்டு நூல் குழுமம், விருதுநகர் மாவட்டம் – ராஜபாளையத்தில் மகளிருக்கான நெசவுக் குழுமம், தேனி மாவட்டம் – திம்மிநாயக்கன்பட்டியில் செயற்கைப் பட்டு குழுமம், சென்னை மாவட்டம் – பூங்கா நகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் – மீனாட்சிபுரத்தில் தங்கநகைக் குழுமங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரகம் மூலம் 16.99 கோடி ரூபாய் செலவில் கோயம்புத்தூர் மாவட்டம் – பொள்ளாச்சியில் கயிறு குழுமம், வேலூர் மாவட்டம் - பென்னாத்தூரில் தேன் பதப்படுத்துதல் குழுமம் மற்றும் கரூர் மாவட்டம் - புகளூரில் கயிறு குழுமம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
கிண்டி தொழிற்பேட்டையில் தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனத்தின் அடுக்குமாடி தொழில் வளாகம் :-
தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம் மூலம் சென்னை மாவட்டம், கிண்டி தொழிற்பேட்டையில் குறு மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் 175 கோடி ரூபாய் செலவில் 263 தொழிற்கூடங்கள் கொண்ட தரை மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய அடுக்குமாடி தொழில் வளாகம் தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனத்திற்காக (டான்சி) கட்டப்பட்டு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இத்தொழில் வளாகம் மூலம் சுமார் 2200 நபர்கள் வேலை வாய்ப்பினை பெற்று பயன்பெறுவர்.

தமிழ்நாடு சிட்கோ மூலம் நிறுவப்பட்ட 5 பொது வசதி மையங்கள் :
=> சேலம் மாவட்டத்தில் பட்டு நூல் குழுமம் :
சேலம் மாவட்டம், சேலம் வட்டம், நெய்காரப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் குறுங்குழும மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5.53 கோடி ரூபாய் செலவில் பட்டு நூல் குழுமம் அமைக்கப்பட்டு, முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த குழுமத்தில் மொத்தம் 25 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த பொது வசதி மையத்தில் பட்டு நூல் உற்பத்தி, பட்டுக்கூடு வரிசைப்படுத்துதல், பட்டு சுருள் இயந்திரம், கொதிகலன், பாவுசுற்றல் போன்ற இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது. இக்குழுமத்தின் மூலம் பட்டு நெசவு தொழில் சார்ந்த 150 தொழில்முனைவோர்கள் நேரடியாகவும் 275 தொழில்முனைவோர்கள் மறைமுகமாகவும் பயன் அடைவார்கள்.
=> விருதுநகர் மாவட்டத்தில் மகளிருக்கான நெசவுக் குழுமம் :
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், கணபதி சுந்தர நாச்சியார்புரம் கிராமத்தில், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் குறுங்குழும மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3.77 கோடி ரூபாய் செலவில் நெசவுக் குழுமம் அமைக்கப்பட்டு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த குழுமத்தில் மொத்தம் 20 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த பொது வசதி மையத்தில் ஏர்ஜெட் தறி, இணைப்புக்கம்பி, காற்றழுத்தி, ஈரப்பதமூட்டும் ஆலை, முடிச்சு மற்றும் அணிதல் இயந்திரம், 15 KVA மின் நிலைப்படுத்தி போன்ற இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது. இக்குழுமத்தின் மூலம் நெசவுக் தொழில் சார்ந்த 130 தொழில்முனைவோர்கள் நேரடியாகவும், 210 தொழில்முனைவோர்கள் மறைமுகமாகவும் பயன் அடைவார்கள்.
=> தேனி மாவட்டத்தில் செயற்கைப் பட்டு குழுமம் :
தேனி மாவட்டம், உத்தமபபாளையம் வட்டம், திம்மிநாயக்கன்பட்டி விலக்கு, பொட்டிபுரம் கிராமத்தில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் குறுங்குழும மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5.23 கோடி ரூபாய் செலவில் செயற்கைப் பட்டு குழுமம் அமைக்கப்பட்டு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த குழுமத்தில் மொத்தம் 23 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த பொது வசதி மையத்தில் நெசவுத் தறி, மின்னணு ஜாக்கார்டு போன்ற இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது. இக்குழுமத்தின் மூலம் செயற்கைப் பட்டு தயாரித்தல் தொழில் சார்ந்த 150 தொழில்முனைவோர்கள் நேரடியாகவும், செயற்கைப் பட்டு குழுமம் தொழில் சார்ந்த 225 தொழில்முனைவோர்கள் மறைமுகமாகவும் பயன் அடைவார்கள்.
=> சென்னையில் தங்கநகைக் குழுமம் :
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் ஒன்றிய அரசின் குழும வளர்ச்சி திட்டத்தின் கீழ் 10.32 கோடி ரூபாய் செலவில் சென்னை, பூங்கா நகரில் தங்கநகைக் குழுமம் அமைக்கப்பட்டு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த குழுமத்தில் மொத்தம் 91 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த பொது வசதி மையத்தில் தங்கத்தை பரிசோதிக்கும் மற்றும் உருக்கும் வசதி, சங்கிலி தயாரித்தல், மெருகூட்டல் வசதி, தங்கத்தை சுத்திகரிக்கும் வசதி, லேசர் வெல்டிங், ஹால்மார்க்கிங் வசதி (BIS), வைரத்தை பரிசோதிக்கும் இயந்திரங்கள் போன்ற இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது. இக்குழுமத்தின் மூலம் தங்கநகைக் தொழில் சார்ந்த 230 தொழில்முனைவோர்கள் நேரடியாகவும், 315 தொழில்முனைவோர்கள் மறைமுகமாகவும் பயன் அடைவார்கள்.
=> திருநெல்வேலி மாவட்டத்தில் தங்கநகைக் குழுமம் :
திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரம் கிராமத்தில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் ஒன்றிய அரசின் குழும வளர்ச்சி திட்டத்தின் கீழ் 7.48 கோடி ரூபாய் செலவில் தங்கநகைக் குழுமம் அமைக்கப்பட்டு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த குழுமத்தில் மொத்தம் 51 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த பொது வசதி மையத்தில் CAD/CAM வசதிகள், ஹால்மார்க்கிங் வசதி (BIS), லேசர் வெல்டிங், லேசர் CNC கட்டிங், லேசர் மார்க்கிங் வசதி, டை பிரஸ் யூனிட் மற்றும் வார்ப்பு வசதி போன்ற இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது. இக்குழுமத்தின் மூலம் தங்கநகைக் குழுமம் தொழில் சார்ந்த 180 தொழில்முனைவோர்கள் நேரடியாகவும், 260 தொழில்முனைவோர்கள் மறைமுகமாகவும் பயன் அடைவார்கள்.

தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரகம் மூலம் நிறுவப்பட்ட 3 பொது வசதி மையங்கள் :-
=> கோயம்புத்தூர் மாவட்டத்தில் கயிறு குழுமம் :
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, நாட்டுக்கல்பாளையம் கிராமத்தில் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரகத்தின் மூலம் குறுங்குழும மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 9.02 கோடி ரூபாய் செலவில் கயிறு குழுமம் அமைக்கப்பட்டு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த குழுமத்தில் மொத்தம் 24 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த பொது வசதி மையத்தில் காயர் ஜியோ லூம் இயந்திரம், ஹாட் பிரஸ் இயந்திரம் மற்றும் ரப்பர் கலவை மில் இயந்திரம் போன்றவை நிறுவப்பட்டுள்ளது. இக்குழுமத்தின் மூலம் கயிறு குழுமம் தொழில் சார்ந்த 50 தொழில்முனைவோர்கள் நேரடியாகவும், 1400 தொழில்முனைவோர்கள் மறைமுகமாகவும் பயன் அடைவார்கள்.
=> வேலூர் மாவட்டத்தில் தேன் பதப்படுத்துதல் குழுமம் :
வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், பென்னாத்தூர், ஆரியூர் கிராமத்தில் குறுங்குழும மேம்பாட்டு திட்டதின் கீழ் 1.04 கோடி ரூபாய் செலவில் தேன் பதப்படுத்துதல் குழுமம் அமைக்கப்பட்டு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த குழுமத்தில் மொத்தம் 20 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த பொது வசதி மையத்தில் மரக்கட்டையால் செய்யப்பட்ட தேனீ கூண்டுகள். தேன் சாறு எடுக்கும் இயந்திரம், தேனீ மெழுகு அடித்தளம் இயந்திரம், மற்றும் தேன் செயலாக்க நிலையம் போன்றவை நிறுவப்பட்டுள்ளது. இக்குழுமத்தின் மூலம் தேன் பதப்படுத்துதல் தொழில் சார்ந்த 25 தொழில்முனைவோர்கள் நேரடியாகவும், 200 தொழில்முனைவோர்கள் மறைமுகமாகவும் பயன் அடைவார்கள்.
=> கரூர் மாவட்டத்தில் கயிறு குழுமம் :
கரூர் மாவட்டம், க.பரமத்தி, புகளூர் வட்டம், அஞ்சூர் கிராமத்தில் 6.93 கோடி ரூபாய் செலவில் கயிறு குழுமம் அமைக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த குழுமத்தில் மொத்தம் 16 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த பொது வசதி மையத்தில் தானியங்கி பவர்லூம், கயிறு வலை உற்பத்தி செய்யும் தறி, தென்னை நார் துகள் நாணயம் மற்றும் வட்டு நவீனமாக துளையிடும் இயந்திரம் போன்றவை நிறுவப்பட்டுள்ளது. இக்குழுமத்தின் மூலம் கயிறு தொழில் சார்ந்த 170 தொழில்முனைவோர்கள் நேரடியாகவும், 750 தொழில்முனைவோர்கள் மறைமுகமாகவும் பயன் அடைவார்கள்.
=> தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் :
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் 2025-26 ஆம் ஆண்டு 27.05 கோடி ரூபாய் இலாபம் ஈட்ட உள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் ஈவுத்தொகையான 7 கோடியே 30 இலட்சத்து 59 ஆயிரத்து 300 ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.






