மு.க.ஸ்டாலின்

“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.10.2025) கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் “உலக புத்தொழில் மாநாடு - 2025" தொடங்கி வைத்தார்.

“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.10.2025) கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் “உலக புத்தொழில் மாநாடு - 2025" தொடங்கி வைத்து, ஆற்றிய உரை.

இதுபோன்ற தொழில் மாநாடுகள், தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியை மட்டும் அல்லாமல்;  மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் சான்றாக அமைந்திருக்கிறது!

தொழில் வளருகிறது என்றால், அந்த நிறுவனம் மூலமாக மாநிலம் வளருகிறது.  வேலைவாய்ப்புகள் மூலமாக குடும்பங்களும் வளருகிறது; வாழுகிறது!  அந்த வகையில், வளர்ச்சியின் அடையாளமாக தொழில் நிறுவனங்கள் இருக்கிறது.

அமைதியான, சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்ற மாநிலத்தைத் தேடித்தான் தொழில் துறையினர் வருவார்கள். தமிழ்நாட்டில், நிம்மதியாக தொழில் நிறுவனத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கையின் அடையாளமாகதான் இதுபோன்ற மாநாடுகள் நடைபெறுகிறது.

நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த நான்கரை ஆண்டுகளில், எண்ணற்ற தொழில் திட்டங்களை நம்முடைய தமிழ்நாடு ஈர்த்திருக்கிறது.  அதிக முதலீடுகளை ஈர்க்கக்கூடிய உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்திருக்கிறோம். அதன் மூலமாக, 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்கின்ற இலக்கை அடைவதற்காக நம்முடைய அரசு முனைப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

பெரிய தொழில்கள் மட்டுமல்ல, MSME தொழில்களும் இதில்  முக்கியப் பங்காற்றுகிறது. அதே போல, புதிய, புதிய புத்தாக்கத் தொழில்களும் இதில் முக்கியப் பங்காற்றுகிறது. புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள் தொழில் துறைக்குள் வரவேண்டும். அதற்கான முயற்சிகளையும், ஊக்குவிப்பையும் நம்முடைய அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

தொழில்துறையைப் பொறுத்தவரைக்கும், நம்முடைய திராவிட மாடல் அரசின் இலக்கு என்னவென்றால், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், புத்தொழில் சார்ந்த விழிப்புணர்வு பரவவேண்டும்!

பெண்கள், இளைஞர்கள், விளிம்புநிலை மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் என்று அனைத்துத் தரப்பு மக்களுக்கும், அரசின் புதுயுக தொழில்முனைவு சார்ந்த திட்டங்கள் சென்றடைய வேண்டும்!  அதற்காக, பல முற்போக்கு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். 

உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதுதான் திராவிட மாடல் அரசின் மாபெரும் கனவு. அந்த பயணத்தில், ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த உலகப் புத்தொழில் மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது. 

ஸ்டார்ட்-அப் வளர்ச்சி குறித்த விவாதங்கள், பெரும்பாலும் பில்லியன் டாலர் மதிப்பீடுகள், பெரிய அளவிலான முதலீடுகள் என்பதை மையமாக கொண்டுதான் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, புத்தாக்கம் மற்றும் புத்தொழில் சார்ந்த வாய்ப்புகள், எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்று திட்டமிடுகிறோம். குறிப்பாக, பின்தங்கிய நிலையில், விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்களுக்கும் சென்று சேரவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம்.  

புத்தொழில் கொள்கையிலும் சமூகநீதி! அதுதான், திராவிட மாடல் பாலிசி!  இப்படி, நாம் எடுத்துக்கொண்டு வருகின்ற தொடர் முயற்சிகளால், தமிழ்நாட்டின் புத்தொழில் சூழலில், குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம்.

கடந்த 4 ஆண்டுகளில், அதற்கு முன்னால் இருந்ததை விட, ஆறு மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் ஒன்றிய அரசின் தளத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நம்பரில் சொல்ல வேண்டும் என்றால், 2 ஆயிரத்து 32-ஆக இருந்த எண்ணிக்கை, இப்போது 12 ஆயிரத்தையும் தாண்டி உயர்ந்திருக்கிறது. இதில், எனக்கு பர்சனலா மகிழ்ச்சியான செய்தி என்ன தெரியுமா? இந்த 12 ஆயிரத்தில் சரிபாதி நிறுவனங்கள் பெண்கள் தலைமையேற்று நடத்துகின்ற நிறுவனங்கள் என்பதுதான்! 

  • சிறந்த புத்தொழில் கட்டமைப்பு கொண்ட மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில், 2018-ஆம் ஆண்டு கடைசி நிலையில் இருந்த தமிழ்நாடு,  நான்கே ஆண்டுகளில், 2022-ஆம் ஆண்டு முதல் இடத்திற்கு   உயர்ந்திருக்கிறது. 

  • "ஸ்டார்ட்-அப் ஜீனோம்" அமைப்பு வெளியிட்ட "உலகளாவிய புத்தொழில் சூழமைவு அறிக்கை 2024’’-ன்படி, ஆசிய அளவிலேயே 18-ஆவது இடத்தில் சென்னை இருக்கிறது. 

  • நிதி ஆயோக்கின்கீழ் செயல்படும் ‘அட்டல் இன்னோவேஷன் மிஷன்’ அமைப்பானது புத்தாக்க சூழமைவு சிறப்பாக இருக்க மாநிலங்களில் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை அங்கீகரித்திருக்கிறது.

“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
  • "அவுட்லுக் பிசினஸ்"  இதழ் வெளியிட்ட 2024-ஆம் ஆண்டுக்கான புத்தொழில் சூழமைவில் சிறப்பாக செயல்படுகின்ற மாநிலங்கள் வரிசையில் நாட்டிலேயே முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடு இடம் பிடித்திருக்கிறது.

  • சமீப காலமாக, தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களின் முதலீடு திரட்டும் திறனும் உயர்ந்து வருகிறது. 2016-ஆம் ஆண்டு
    1 மில்லியன் டாலராக இருந்தது. 2024-ஆம் ஆண்டு, 6 மில்லியன் டாலராக அது உயர்ந்திருக்கிறது என்று ‘இன்க் 42’ அறிக்கை தெரிவிக்கிறது.  இது, தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

  • 2020–2025 நிதியாண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து D.P.I.I.T. தளத்தில்  அங்கீகரிக்கப்பட்ட, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 36 விழுக்காடு கூட்டு வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. இது, தேசிய சராசரியான 11 விழுக்காட்டை விட மூன்று மடங்கு அதிகம். 

  • உயர் தொழில்நுட்பத் துறையின் ’பவர் ஹவுஸ்’-ஆக சென்னை வளர்ந்து வருகிறது.

2021–2024-ஆம் ஆண்டு காலத்தில், சென்னையை மையமாக கொண்ட உயர் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகளின் மதிப்பு - 66 விழுக்காடு ஆண்டு கூட்டு வளர்ச்சியை அடைந்திருக்கிறது.  தேசிய அளவில் இது இரண்டாவது இடம். 

இந்த சாதனைப் பட்டியலின் பின்னணியில் நாம் வடிவமைத்து செயல்படுத்தி வருகின்ற பல திட்டங்கள் இருக்கிறது. புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மெட்ரோ சிட்டியை தாண்டி, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைய வேண்டும் என்று கோல் செட் செய்து நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதன்படி, 11 வட்டார மையங்களை அமைத்திருக்கிறோம்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கின்ற இளைஞர்களுக்கு புதுயுக தொழில் முனைவு வளர்ச்சியில் பங்கெடுக்கவும், அதன் மூலம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் அவர்களுடைய பங்களிப்பை வழங்கவும், தேவையான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. தொடக்க நிலையில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதி உதவி கிடைக்காமல் தங்களுடைய முயற்சியை கைவிடக்கூடாது என்பதற்காக, TAN-SEED என்ற ஆதார நிதி வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இதிலும், பெண் தொழில் முனைவோர்களுக்கு 50 விழுக்காடு கூடுதல் நிதி வழங்குகிறோம். தமிழ்நாட்டில், அதிகரித்து வருகின்ற ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு,  இந்த நிதியாண்டில், இந்தத் திட்டத்திற்கு மட்டுமே 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. எந்தத் துறையாக இருந்தாலும், எங்களுக்கு சமூகநீதி முக்கியம் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். அப்படித்தான், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களால் நிர்வகிக்கப்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடு வழங்கப்பட்டு வருகிறது. முதலீடு வழங்குவதோடு, அந்த நிறுவனங்களுக்குத் தேவையான தொழில் பயிற்சிகளும் துறை வல்லுநர்களால் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதற்காக, 2022-23-ஆம் ஆண்டில், 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு என்பதை, 2023-24-ஆம் ஆண்டு 50 கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறோம்.

முதலீடுகள் தேவைப்படும் புத்தொழில் நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் இணைக்கும் நோக்கத்தில், TAN-FUND என்ற முதலீட்டாளர் இணைப்பு தளத்தை சென்ற ஆண்டு தொடங்கி வைத்தேன். இதன் வழியாக, புத்தொழில் நிறுவனங்கள் 129 கோடியே 24 இலட்சம் ரூபாய் நிதி திரட்டியிருக்கிறது. 

  • பெரியார் சமூகநீதி தொழில் வளர் மையம்,

  • பெண் தொழில் முனைவோர்களுக்காக 'தொழிலி' பயிற்சிப் பட்டறைகள் நடத்துகின்றோம்.

  • கிராமந்தோறும் புத்தொழில் திட்டம் என்று ஊரகப்பகுதிகளிலும் புத்தொழில் முயற்சிகளை ஊக்குவித்து வருகிறோம். அதே நேரத்தில், உலகளாவிய தொடர்புகளையும் தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கு ஏற்படுத்தி வழங்கி வருகிறோம்.

துபாய், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில், தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கு இணைப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில், பல்வேறு முன்னெடுப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பன்னாட்டு புத்தாக்க நிகழ்வுகளில், தமிழ்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்க உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.  

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் நடத்துகின்ற நிரல் திருவிழா என்கிற ஹேக்கத்தான்ஸில் ஸ்டார்ட்-அப் தமிழ்நாடும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

‘நில் – பிராண்ட் - செல்’ என்ற பெயரில், 250 நிமிட வீடியோ பாடம் மூலமாக பிராண்டுகளை எப்படி உருவாக்குவது என்று பயிற்சி அளிக்கப்படுகிறது.  இதற்கெல்லாம் முத்தாய்ப்பாகதான், உலகளாவிய நாடுகளின் பங்களிப்புடன்,  புத்தொழில் நிறுவனங்களுக்கு என்று ஒரு சிறப்பு மாநாட்டை நம்முடைய மாநிலத்திலேயே நடத்தவேண்டும் என்று முடிவு செய்து இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது. 

40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்று,  இவர்களில் பலர் இந்த மாநாட்டில் நடைபெறும் கருத்தரங்கத்தில் உரையாற்ற இருக்கிறார்கள்.

இங்கே அமைக்கப்பட்டிருக்கின்ற கண்காட்சி அரங்கத்தில், 21 நாடுகள் அரங்கு அமைத்திருக்கிறார்கள். நாட்டிலேயே, புத்தொழில் நிறுவனங்களுக்காக, 40 உலக நாடுகளின் பங்களிப்போடு ஒரு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு இருப்பது இதுதான் First Time!

இங்கே, வருகை புரிந்திருக்கின்ற தொழில் முனைவோர்கள் எல்லோரும் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான என்-வீடியா, மெட்டா, H.C.L, டெக்கத்லான் உள்ளிட்ட, 15-க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். புத்தாக்கம் மற்றும் புத்தொழில் சார்ந்த அரசின் திட்டங்களை செயல்படுத்தும், தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசின் துறைகள் அனைத்தும் இங்கே இடம்பெற்றிருக்கிறது. 

கேரளா, ஒடிசா, மேகாலயா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 9 மாநில அரசுகளின் புத்தொழில் துறைகளும் பங்கெடுத்திருக்கிறார்கள். முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்வுகள், கூகுள், ஃபோன்-பே, மைக்ரோ-சாஃப்ட், மெட்டா போன்ற நிறுவனங்களின் தனித்துவமான பயிற்சி வகுப்புகள், மாணாக்கர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் அரங்குகள் என்று வடிவமைக்கப்பட்டிருக்கின்ற இந்த மாநாடு, எல்லோருக்கும் பயனுள்ளதாக நிச்சயம் அமையும். 

“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
  • பன்னாட்டு புத்தொழில் அமைப்புகள், 

  • இந்தியாவில் செயல்படுகின்ற பெரு நிறுவனங்கள், 

  • ஒன்றிய அரசின் புத்தொழில் அமைப்புகளுடன் இந்த மாநாட்டில்  பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. குறிப்பாக, ஜெர்மனியைச் சேர்ந்த 'ஆசியா பெர்லின்' அமைப்பு, அமெரிக்காவின் சான்டா கிளாரா பல்கலைக்கழகம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'லிங்க் இன்னோவேஷன்ஸ்' அமைப்பு மற்றும் கனடா, தென் கொரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புத்தொழில் அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டிருக்கிறது. 

இதன் மூலம், தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும்.  மேலும்,  பல திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும்.   அடுத்த 10 ஆண்டுகளில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டைக் கட்டமைக்க என்னென்ன செய்யவேண்டும் என்கின்ற கருத்துக்களை உள்ளடக்கிய 'விஷன் 2035' தொலைநோக்கு அறிக்கையோடு முதல்நிலை செயல்திட்ட வரைவை இன்று வெளியிட்டிருக்கிறேன். 

புத்தொழில் சார்ந்த தரவுகளை வெளியிடுவதில், புகழ்பெற்ற அமைப்பான 'ஸ்டார்ட் அப் ஜீனோம்'-தான் இந்த அறிக்கையை தயாரித்திருக்கிறார்கள். மாநிலத்தின் புத்தொழில் சூழல் மேம்பாட்டிற்கான வழிகாட்டி செயல்திட்டங்கள் உள்ளடங்கிய இரண்டாம் தொகுப்பு இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். 

இன்று, தமிழ்நாட்டின் புத்தொழில் சூழல் குறித்த ‘இன்க்-42’ நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறேன்.

இந்த 4 ஆண்டுகளில், தமிழ்நாட்டின் புத்தொழில் மற்றும் புத்தாக்க  சூழல் அடைந்திருக்கின்ற வளர்ச்சியை ஆதாரங்களுடன் இந்த அறிக்கை  தெரிவிக்கிறது.  இந்த மாநாடு - தொழில்முனைவு ஆர்வலர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், மாணவ மாணவியர் என்று எல்லோருக்குமானது!  

நிறைவாக, நம்முடைய மாநிலத்தின் புத்தொழில் சூழலை வலுப்படுத்தும் விதமாக ஒரு திட்டத்தினை இந்த மாநாட்டில் அறிவிக்க விரும்புகிறேன்.

100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், “இணை உருவாக்க நிதியம்” தொடங்கப்படும். தமிழ்நாட்டு புத்தொழில் நிறுவனங்களில், முதலீடு செய்யும் துணிகர முதலீட்டு நிறுவனங்களில் அரசு முதலீடு செய்யும். இந்த நிதியம் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தால் நிர்வகிக்கப்படும். இதன் மூலம், தமிழ்நாட்டில் புதிய துணிகர முதலீட்டு நிறுவனங்கள் உருவாகும். மேலும், உலக அளவில் முன்னணியில் இருக்கின்ற முதலீட்டு நிறுவனங்களை தமிழ்நாட்டை நோக்கி ஈர்ப்பதற்கும் வழிவகுக்கும்!

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தமிழ்நாட்டிலேயே அதிக நீளமான 10.10 கிலோ மீட்டர் நீளமுள்ள அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தைத் திறந்து வைக்க இருக்கிறேன். அந்தப் பாலத்திற்கு தந்தை பெரியாருடைய உற்றக் கொள்கை தோழர் இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்பட்ட கோவைக்குப் பெருமை சேர்த்த திரு.ஜி.டி.நாயுடு அவர்கள் பெயரை சூட்டியிருக்கிறேன்.

அதுமட்டுமல்ல, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நான் கோவைக்கு வந்தபோது, பல்வேறு தங்க நகை உற்பத்தியாளர் சங்கங்களைச் சார்ந்தவர்களை வைத்து ஒரு கோரிக்கையை என்னிடத்தில் எடுத்துச் சொன்னார்கள். அதை ஏற்று, குறிச்சி தொழிற்பேட்டையில் மிகப் பெரிய தங்க நகைப் பூங்கா கட்டப்படும் என்று அறிவித்தேன். அதற்கான அடிக்கல்லையும் நான் நாட்டவுள்ளேன். 

அடுத்த மாதம் கோவையில் மிகப் பெரிய பூங்காவாக 175 கோடி ரூபாய் செலவில், செம்மொழிப் பூங்கா திறக்க இருக்கிறோம்.  அடுத்து, கோவையில், மிகப் பெரிய நூலகமாக “பெரியார் உலகம்” விரைவில் திறக்க இருக்கிறோம். அதேபோல, கோவையில், மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமும் வர இருக்கிறது. 

இப்படி தொழில் நகரமான கோவையின் வளர்ச்சிக்கு துணை நிற்கக்கூடிய, நமது திராவிட மாடல் அரசின் பயணம் - திராவிட மாடல் 2.0-விலும் தொடரும்! தொடரும்! என்று சொல்லி, விடைபெறுகிறேன்.

banner

Related Stories

Related Stories