தமிழ்நாடு

10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கோயம்புத்தூரில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரையிலான “ஜி.டி. நாயுடு மேம்பாலம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.10.2025) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர், கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 1,791 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீளமான 10.10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நான்கு வழித்தட மேம்பாலத்திற்கு “ஜி.டி. நாயுடு மேம்பாலம்” என்று பெயர் சூட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 

ஜி.டி. நாயுடு மேம்பாலம்  

கோவையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏதுவாக இந்நகரின் நுழைவுவாயிலாக அவிநாசி சாலை (SHU-52) அமைந்துள்ளது. அவிநாசி சாலையில் உள்ள இரயில் நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம் செல்லும் சாலை, விமான நிலையம், கொடிசியா, பி.எஸ்.ஜி, சி.ஐ.டி. ஆகிய கல்வி நிறுவனங்கள் மற்றும் கே.எம்.சி.எச் மருத்துவமனை அமைந்துள்ள இச்சாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.10 கி.மீ. நீளம் கொண்ட உயர்மட்ட சாலை மேம்பாலம் சீர்மிகு கோவையின் தொழில் வளத்திற்கு ஒரு முன் மாதிரியாக கட்டப்பட்டுள்ளது.

கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி. நாயுடு அவர்களின் பெயரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த மேம்பாலத்திற்கு சூட்டினார்.

புதுமைகளை உடனே ஏற்று வரவேற்கும் கோவை மாநகரில் புதுமையான பொறியியல் கட்டுமானம் மூலம் போக்குவரத்தைப் பாதிக்காமலும், சுற்றுபுறச்சூழல் மாசுபடா வண்ணமும் இந்த உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனால் கோவையைச் சுற்றியுள்ள IT Corridor, தொழிற்சாலைகள், முதலீட்டாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தங்கு தடையற்ற போக்குவரத்தின் மூலம் கோவையின் புறநகர் பகுதியை விரைவாக சென்றடையலாம்.

இந்த உயர்மட்ட மேம்பாலப் பணிக்காக செக்மண்டல் கட்டுமான முறை (PSC Segmental Construction) பயன்படுத்தப்பட்டுள்ளது. பாலத்தின் அமைவுமுறை நெடுஞ்சாலைத்துறையின் வடிவமைப்பு அலகினால் சரிபார்க்கப்பட்டது. 

மேம்பாலத்தால் இணைக்கப்படும் சாலைகள்

மேம்பாலம் அனைத்து சாலைப் பயனாளர்களும் பயன்படுத்தும் விதத்தில் அண்ணா சிலை இறங்குதளம், இரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைக்கிறது. நவஇந்தியா இறங்குதளம் மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி சாலையை இணைக்கிறது. 

நவஇந்தியா ஏறுதளம் அவிநாசி, திருப்பூர் மற்றும் சேலம் சாலையை இணைக்கிறது. ஹோப் காலேஜ் ஏறுதளம் திருச்சிராப்பள்ளி மார்க்கமாக தேசிய நெடுஞ்சாலையை (தே.நெ.67) இணைக்கிறது. ஹோப் காலேஜ் இறங்குதளம் திருச்சிராப்பள்ளி சாலை மற்றும் விளாங்குறிச்சி சாலையை இணைக்கிறது. விமானநிலைய இறங்குதளம் நீலாம்பூர், சேலம்-கொச்சின் சாலையை இணைக்கிறது. விமானநிலைய ஏறுதளம் கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளான காந்திபுரம், அரசு மருத்துவமனை, இரயில் நிலையம் ஆகிய பகுதிகளை இணைக்கிறது.

மேம்பாலத்தின் பொறியியல் சிறப்பம்சங்கள்

இப்பணியில் 4 வழித்தட மேம்பாலம் மற்றும் 6 வழித்தடத்துடன் கூடிய விரிவுபடுத்தப்பட்ட தரைத்தள சாலை என மொத்தம் 10 வழித்தடங்களுடன் 10.10 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.  

கோவை விமான நிலையம், ஹோப் காலேஜ்நவ இந்தியா மற்றும் அண்ணா சிலை என மொத்தம் 4 இடங்களில் இறங்கு தளம் மற்றும் அண்ணா சிலை தவிர மற்ற 3 இடங்களில் ஏறுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணியில் 1.50 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன் கூடிய வடிகால் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பாலம் புதிய தொழில்நுட்பங்களுடன் சைனஸ் பிளேட் விரிவு இணைப்புகள் (Expansion joint), சிறந்த பயண வசதி, ஒலி குறைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மேம்பாலத்தின் இதர சிறப்பம்சங்கள் 

இப்பாலத்தின் ஓடுதளத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு அமைப்பு – நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்தும் முன்னோடி முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது. மேலும், உயர்மட்ட மேம்பாலத்தின் சென்டர் மீடியன் பகுதியில் நடப்பட்டுள்ள செடிகளுக்கு சொட்டு நீர்ப்பாசனம் (Drip Irrigation), தரைமட்டத்தில் தெளிப்பு நீர்ப்பாசனம் (Sprinkler Irrigation) ஆகியவை அமைக்கப்பட்டதன் மூலம் நகரின் அழகும் ஆரோக்கிய சூழலும் மேம்படும். மேலும், மின்சார சேமிப்பு விளக்குகள் (Solar) மாசு கட்டுப்பாட்டையும், அதிக பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. அத்துடன் பாதுகாப்புச் சுவர்கள், ரோலர் தடுப்பு (Roller Crash Barrier) கருவிகள் போன்ற உலகத் தரமான பாதுகாப்பு அமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இப்புதிய உயர்மட்ட மேம்பாலம் மூலம், கோயம்புத்தூர் நகரிலிருந்து விமான நிலையத்திற்கு பயணம் செய்யும் நேரம் 45 நிமிடத்தில் இருந்து 10 நிமிடமாக குறைவதோடு, பெருவாரியான பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள், அவசர சேவை பயனாளிகள், முதலீட்டாளர்கள் ஆகியோர் பயன்பெறுவர்.

banner

Related Stories

Related Stories