தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.09.2025) பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 142 மாணவ, மாணவியர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, 26 மாவட்டங்களில் 94 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள் மற்றும் சுற்றுச்சுவர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் கட்டப்பட்டுள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, 21 மாவட்டங்களில், 243 பள்ளிகளில் 277 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர், பாரத சாரண சாரணியர் புதிய தலைமை அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியினை தொடங்கி வைத்தார்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணைய வசதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழ்நாட்டின் கல்வித் தரத்தினை உயர்த்திட “இல்லம் தேடி கல்வி”, “நம் பள்ளி நம் பெருமை”, “எண்ணும் எழுத்தும்”, “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்”, திறன் வகுப்பறைகள் அமைத்தல், உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைத்தல், மாதிரி பள்ளிகளை உருவாக்குதல், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு போன்ற சிறப்புத் திட்டங்களோடு, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி, சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் மாபெரும் நூலகங்கள், மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்குதல் போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்களை இவ்வரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, திருச்சி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 59 பள்ளிகளில் 94 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள் மற்றும் சுற்றுச்சுவர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டம், கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.
மேலும், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 243 பள்ளிகளில் 277 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர், பாரத சாரண சாரணியர் புதிய தலைமை அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட கட்டடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சி கையேட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு, ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியினை தொடங்கி வைத்தார்.
2024-2025 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 8 மாணவ, மாணவியர்கள் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 134 மாணவ, மாணவியர்கள், என மொத்தம் 142 மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்ப் பாடத்தை ஆர்வமுடன் பயின்று நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றதைப் பாராட்டி, தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.