சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் (CUMTA) சார்பில் இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கேப் / ஆட்டோக்கள் போன்ற அனைத்து பொது போக்குவரத்துகளையும் இணைக்கும் வகையில் ஒரே QR பயணச்சீட்டு மூலம் ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய “சென்னை ஒன்று மொபைல் செயலி” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 22.9.2025 அன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் (CUMTA) 2வது ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சென்னைப் பெருநகரப் பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த QR (Quick Response) பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை 22.9.2025 அன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
சென்னைப் பெருநகரப் பகுதிக்கான (5,904 சதுர கி.மீ) விரிவான போக்குவரத்து திட்டம் (Comprehensive Mobility Plan) 2023-2048, "மக்களும் பொருட்களும் தங்கு தடையின்றி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த, நிலையான, பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்துதல்" என்ற தொலைநோக்குப் பார்வையுடன், நகர்ப்புற போக்குவரத்து முயற்சிகளை முன்னெடுத்து செல்வதற்காக அமைகிறது.
விரிவான போக்குவரத்து திட்டம் மூலம் பயண நேரத்தை மற்றும் பயண செலவைக் குறைத்தல், நம்பகமான, விரைவான பொதுப் போக்குவரத்தை வழங்குதல், பல்வகை பொது போக்குவரத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்துதல், குறைந்த போக்குவரத்து உமிழ்வு மற்றும் பயணத் தேவை மேலாண்மையை ஊக்குவித்தல் போன்றவை கண்காணிக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய “சென்னை ஒன்று (CHENNAI ONE) மொபைல் செயலியை” தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22.9.2025 அன்று தொடங்கி வைக்கிறார்.
இந்த செயலி பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கேப் / ஆட்டோக்களை ஒரே QR பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது. இதன்மூலம் பொதுமக்கள் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும், UPI அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிடவும், ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும். இச்செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
“சென்னை ஒன்று செயலி” பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இனி பொது மக்கள் பயணச் சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம்.