தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.5.2025) நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் 5 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் 44 அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள யானை பாகன்களுக்கான மாவூத் கிராமத்தை திறந்து வைத்தார். மேலும், முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழகத்திலேயே முன்னோடியாக 15 கி.மீ. நீளத்திற்கு தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் (Aerial Bunched Cable) சேவைகளை தொடங்கி வைத்து, வன சரகர்களின் பயன்பாட்டிற்காக 2 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 32 வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமானது யானைகளை பராமரிப்பதில் தலைசிறந்து விளங்கும் முகாம் ஆகும். இம்முகாமிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வருகை புரிந்தார்.
=> 44 அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள மாவூத் கிராமத்தை திறந்து வைத்தல் :
யானைகளை பராமரிக்க தமிழ்நாடு வனத்துறையில் மாவூத் மற்றும் காவடி என நிரந்தர பணியாளர்கள் உள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை கவுரவிக்கும் விதத்தில், தெப்பக்காடு யானைகள் முகாமில் 5 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் 44 அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள யானை பாகன்களுக்கான மாவூத் கிராமத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார். பின்னர் அக்குடியிருப்புகளுக்கான சாவிகளை பயனாளிகளுக்கு வழங்கி, குடியிருப்புகளை பார்வையிட்டு, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
=> தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை 15 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பி சேவையினை தொடங்கி வைத்தல் :
தமிழ்நாட்டில் 2024-25ல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி மொத்தம் 3036 யானைகள் வனங்களை வாழ்விடமாக கொண்டுள்ளது. மேலும் நீலகிரி- கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் மொத்தம் 2253 யானைகள் இடப்பெயர்ச்சிக்காகவும், சுமார் 440 யானைகள் நிரந்தர வாழ்விடமாகவும் கொண்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தின் உள்மண்டலத்தில் மட்டும் 5 கிராமங்களில் மொத்தம் 180 காட்டுநாயக்கர் குறும்பர் மற்றும் மலசர் ஆகிய பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். உள்மண்டல பகுதியில் செல்லும் மின்சார கம்பிகள் காப்பிடபடாத கம்பிகளாக (Bare Wire) இருப்பதனால் வனவிலங்குகளுக்கு தீங்காக அமைய வாய்ப்பு உண்டு. எனவே, யானைகளின் புகலிடமாக திகழும் முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழ்நாட்டிலேயே முன்னோடியாக 15 கி.மீ. நீளத்திற்கு தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை 5 கோடி ரூபாய் செலவில் வான்வழி தொகுப்பு கம்பிகளாக (Aerial Bunched Cable) மாற்றப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டது.
=> வன சரகர்களின் பயன்பாட்டிற்காக வாகனங்களை வழங்குதல் :
களப்பணியில் அயராது உழைக்கும் வன சரகர்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டம் மூலமாக 2 கோடியே 93 இலட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 30 பொலிரோ வாகனங்கள் மற்றும் 2 சிறப்பு ரோந்து வாகனங்கள் (All Terrain Vehicles), என மொத்தம் 32 வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள யானைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கரும்புகளை வழங்கினார். அத்துடன் அங்கு பணிபுரியும் ஆஸ்கார் விருது பெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன், பெல்லி தம்பதியர்கள் உள்ளிட்ட மாவூத் மற்றும் காவடிகளுடன் கலந்துரையாடி, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.