ஆண்டுதோறும் மே 1-ம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மே 1-ம் தேதி (இன்று) உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு :
“நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக் கருவியெலாம் செய்துதந்த கைதான் யார் கை?” என்று பாவேந்தர் பாரதிதாசன் தொழிலாளத் தோழர்களின் மகத்துவத்தைப் போற்றினார்!
உலகினை உழைப்பால் செலுத்தும், உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு எனது உழைப்பாளர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தொழிலாளர்களுக்காக மே நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை, சென்னையில் மே தினப் பூங்கா, தொழிலாளர் நல வாரியம் என எண்ணற்ற பங்களிப்புகளைக் கழக ஆட்சிதோறும் பேரறிஞர் அண்ணா அவர்களும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் செய்து வந்தனர். அப்பெருந்தலைவர்களின் வழி நடக்கும், நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஏராளமான, இந்தியாவுக்கே வழிகாட்டும் பல தொழிலாளர் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கடந்த ஓராண்டில் செய்யப்பட்ட குறிப்பிடத்தகுந்த சாதனைகளைச் சொல்ல வேண்டுமென்றால்,
தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் ஸ்விகி, ஸொமாட்டோ, அமேசான் போன்றவை வாயிலாகப் பொருட்கள் விநியோகம் மற்றும் சேவைகள் வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நலவாரியமும் உருவாக்கப்பட்டது.
தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (Gig) நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 2,000 கிக் (Gig) தொழிலாளர்களுக்கு ரூ.4 கோடி செலவில் புதியதாக e-Scooter வாங்கும் செலவினத்தில் தலா ரூ.20,000/- மானியமாக வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் 1.5 இலட்சம் கிக் (Gig) தொழிலாளர்களுக்குக் குழுக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்துவதுடன், அவர்கள் பணிகளுக்கிடையே ஓய்வு எடுக்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வுக் கூடங்கள் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள பெண்கள் / திருநங்கைகள் 1,500 பேருக்கு புதிய ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்கும் செலவினத்தில் ரூ.1 இலட்சம் மானியமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
பதிவு பெற்ற அமைப்பு சாரா தொழில்களில் 4,37,750 தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1200/- ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் கருதி, தொழிலாளர் ஆணையர் தலைமையில் மாநில அளவிலான புலம்பெயர்ந்த தொழிலாளர் ஆலோசனைக் குழுவும், கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள் தலைமையில் மண்டல அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்களையும் அரசு அமைத்துள்ளது.
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதிலும், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதிலும், முனைப்பான நடவடிக்கைகளை நமது அரசு எடுத்து வருகிறது.
அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஒன்றிணைந்து குழந்தைத் தொழிலாளர் முறையினை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அமலாக்க அலுவலர்களால் 34,335 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 60 குழந்தை தொழிலாளர்களும், 283 வளரிளம் பருவத் தொழிலாளர்களும், 120 கொத்தடிமைத் தொழிலாளர்களும் மீட்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டிற்குள் குழந்தைத் தொழிலாளர் முறையினையும் 2030-ஆம் ஆண்டிற்குள் கொத்தடிமைத் தொழிலாளர் முறையினையும் தமிழ்நாட்டில் அறவே அகற்றிட உறுதிபூண்டு செயலாற்றி வருகிறோம்.
இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல், “‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், நீங்கள் இழப்பதற்குக் கை விலங்குகளைத் தவிர எதுவுமில்லை” என அழைத்த உலக மாமேதை கார்ல் மார்க்சுக்குச் சென்னையில் சிலை அமைக்கப்படும் என அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவித்தேன்.
இந்தியாவிலேயே தொழிற்சங்கச் செயல்பாடுகளுக்கு முன்னோடியாக இருந்த மாநகரம் சென்னை. மே நாள் இந்தியாவில் முதன்முதலில் கொண்டாடப்பட்டதும் இங்குதான். இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதன்முதலாக மொழிபெயர்த்து தந்தை பெரியார் அவர்களால் வெளியிடப்பட்டது. அத்தகைய மண்ணில் மாமேதை மார்க்ஸ் சிலை அமையவுள்ளது.
இப்படி, சொல்லாலும் – செயலாலும் – வரலாற்றுச் சின்னங்களாலும் உழைப்பாளர்களையும் உழைப்பையும் போற்றும் ஆட்சியாகத் தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது. உழைப்பாளர்களின் நலன் காக்கும் நமது முயற்சிகள் தொடரும், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்! அதற்கு இந்த மே தினம் மேலும் நமக்கு ஊக்கத்தினை வழங்கட்டும்!