முரசொலி தலையங்கம் (01-05-2025)
காக்கும் காவல் அரண் முதல்வர்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்து உரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அருமையான ஒரு வாதத்தை வைத்தார்கள்.
"தமிழ்நாடு எந்தெந்த வகையில் எல்லாம் வளர்ந்திருக்கிறது - தங்கள் துறை எவ்வளவு வளர்ந்துள்ளது என்பதை - ஒவ்வொரு அமைச்சர்களும் பெருமை யோடு குறிப்பிட்டார்கள். அவர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். உங்கள் துறையை வளர்தெடுத்தது - உங்கள் திறமையாக இருந்தாலும் - இந்த வளர்ச்சிக்கு அடிப்படையான முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அதுதான் மாநிலத்தின் அமைதி ஆகும்.
அமைதியான மாநிலத்தில்தான் தொழில் வளரும். தொழிற்சாலைகள் வரும். கல்வி மேம்படும். பெண்கள் வளர்ச்சி ஏற்படும். இளைஞர்கள் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டுத் துறை மேம்படும். உற்பத்தி அதிகம் ஆகும். ஏற்றுமதி அதிகம் ஆகும். சுற்றுலா வளரும். புதிய புதிய மேம்பாட்டைப் பார்க்கலாம். அமைதி இல்லாத – சட்டம் ஒழுங்கு சரியில்லாத மாநிலத்தில் இத்தகைய வளர்ச்சியை நாம் பார்க்க முடியாது. அனைத்து விதமான வளர்ச்சியையும் தமிழ்நாடு அடைய அமைதிமிகு மாநிலமாக தமிழ்நாடு இருந்ததுதான் காரணம். சட்டம் ஒழுங்கு சீராக இருந்தது தான் காரணம்" என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
ஒரு மாநிலத்தின் நல்லாட்சிக்கு இலக்கணம் என்பது அந்த மாநிலத்தின் அமைதிதான். தமிழ்நாட்டில் சாதிச் சண்டைகள் இல்லை. மதக் கலவரங்கள் இல்லை. பெரும் கலவரங்கள் இல்லை. ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தின் - ஒரு குறிப்பிட்ட ஊரின் உள் அமைதியைக் கெடுக்கும் செயல்கள் ஏதுமில்லை. தொடர்ச்சியான அச்சுறுத்தல் இல்லை. தொடர் வன்முறை இல்லை. இவை இருந்தால்தான் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று சொல்ல முடியும். இவை எதுவும் இல்லை, இல்லை, இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் மிகச் சிறந்த கவனமான நிர்வாகம்தான் இதற்குக் காரணம்.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று ஒன்றிய அரசே சொல்லி இருக்கிறது. ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில் சட்டம் -ஒழுங்கு பற்றிய ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன் சார்பில் மாதம் தோறும் தரவரிசை செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி 10–07–2024 இன் அறிக்கை வெளியாகி உள்ளது. இந்தத் தரவு அடிப்படையில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலங்களில், இந்திய அளவில் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் உள்ளது.
அதாவது 95.47 புள்ளிகளைப் பெற்று சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் முதல் மாநிலமாகத் தமிழ்நாடு முத்திரை பதித்துள்ளது. 2வது இடத்தை 93.96 புள்ளிகளைப் பெற்று மிசோரம் பிடித்துள்ளது. 3வது இடத்தில் தெலுங்கானா உள்ளது. அதாவது 91.86 புள்ளிகளைப் பெற்றுள்ளது இந்த மாநிலம். உத்தரப்பிரதேசம் 91.00 புள்ளிகள் பெற்றும் 4வது இடத்தில் இருக்கின்றது. கடந்த 30 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆண்டு வரும் குஜராத் மாநிலம் இந்தப் பட்டியலில் 80.46 புள்ளிகள் பெற்று 10ஆவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்பது ஒன்றிய அரசே ஒப்புக் கொண்ட உண்மையாகும்.
2017-2020 ஆம் ஆண்டில், கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து வந்தது. 2024 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. காவல்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், கடந்த 6 ஆண்டுகளில் மிகக் குறைந்த ரவுடி கொலைகள் பதிவாகியுள்ளன. சாதி மற்றும் பழிவாங்கும் நோக்கம் கொண்ட கொலைகள் குறைந்துள்ளன. இந்திய அளவில் கொலைகளுக்கான குற்ற விகிதம் 2.2 ஆகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2024 ஆம் ஆண்டிற்கான கொலைகளுக்கான குற்ற விகிதம் 1.9 மட்டுமே.
காவல்துறையினர் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கொலைகள், காய வழக்குகள் குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன. சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளில் காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட்டு, குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
பொதுமக்கள் அதிகளவில் கூடும் திருவிழாக்கள் அனைத்தும் அமைதியாக நடந்துள்ளது. பல்வேறு சமூகத் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களாக இருந்தாலும், கோவில் திருவிழாக்களாக இருந்தாலும் அமைதியாக நடந்துள்ளது. சர்ச்சைக்குரிய நாட்களை அமைதியாகக் கடந்திருக்கிறோம். பிரச்சினைகள் இல்லாமல் வைத்திருக்கிறோம். வகுப்புவாதம், மத அடிப்படைவா- தம், சாதியவாதம் ஆகியவை வன்முறைக்கு அடித்தளம் இடுவதை முற்றிலுமாகத் தடுத்திருக்கிறார் முதலமைச்சர்.
போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கிடையேயான குற்றச் செயல்கள் இணையவழிக் குற்றங்கள் ஆகியவற்றை கடுமையாக ஒடுக்கி வருகிறார் முதலமைச்சர் அவர்கள். போதை மருந்து விற்பனையாளர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகின்றன.
'குற்றங்களைக் குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல் குற்றங்களைத் தடுக்கும் துறையாகச் செயல்பட வேண்டும்" என்று முதலமைச்சர் கட்டளையிட்டதால்தான் தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலமாக இருக்கிறது. அதனால்தான் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வளர்கிறது. செப்டம்பர் –6 காவலர் நாள் என்று அறிவித்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். இது காவல் அரசு ஆகும்.