இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை 19.02.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை
மேற்கொள்ளவும், இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டு பணிக்குழுக் கூட்டத்தினைக் கூட்ட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்,ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (20.02.2025) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், 19.2.2025 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள், அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை ஒன்றிய அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் வேகமாக அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் நீண்ட காலம் பாதிக்கப்படுவதால், இத்தகைய கைது நடவடிக்கைகளைத் தடுத்திட உடனடி மற்றும் தொடர்ச்சியான தூதரக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே, மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து விடுவிக்க ஏதுவாக, உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தான் ஏற்கனவே வலியுறுத்தியபடி கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தினைக் கூட்டுவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.