தமிழ்நாடு

“5 மாத த.வெ.க ஆட்சிக்கு ‘ஜீரோ’ தான் மதிப்பெண்” : பசும்பொன்னில் மு.க.ஸ்டாலின் பேட்டி (முழு விவரம்) !

நாங்கள் அவசரநிலையை எதிர்த்தவர்கள்; 'மிசா' சட்டத்தைப் பார்த்தவர்கள், 'தடா' சட்டத்தைப் பார்த்தவர்கள், 'பொடா' சட்டத்தைப் பார்த்தவர்கள். இதெல்லாம் எங்களுக்கு ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. - மு.க.ஸ்டாலின்.

“5 மாத த.வெ.க ஆட்சிக்கு ‘ஜீரோ’ தான் மதிப்பெண்” : பசும்பொன்னில் மு.க.ஸ்டாலின் பேட்டி (முழு விவரம்) !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று (30-10-2026) பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜையையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கும், பசும்பொன்னில் உள்ள நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் அவர்கள் ஊடகத்தினருக்கு அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு :- “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் நடத்திய விடுதலைப் போராட்டத்திற்குத் துணைநின்றவர்தான் நம்முடைய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள்.

ஆங்கிலேய அரசின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்துப் போராடிய ஒரு போராளிதான் நம்முடைய தேவர் திருமகனார். சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து செயல்பட்டவர் நம்முடைய தேவர் திருமகனார் அவர்கள்.

அத்தகைய பெருமகனாருடைய நினைவிடத்தில் இன்று நாங்கள் எல்லாம் எங்களுடைய வணக்கத்தையும் மரியாதையையும் செலுத்துகிற வாய்ப்பைப் பெற்றமைக்கு நாங்கள் பெருமைப்படுகிறோம்.

“5 மாத த.வெ.க ஆட்சிக்கு ‘ஜீரோ’ தான் மதிப்பெண்” : பசும்பொன்னில் மு.க.ஸ்டாலின் பேட்டி (முழு விவரம்) !

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், பொதுமக்கள் வசதிக்காக இரண்டு மண்டபங்கள் அமைக்கப்படும் என்று சொல்லி, அந்த அடிப்படையில், 2024-ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அரங்கத்தை நான்தான் அன்றைக்குத் திறந்து வைத்தேன்.

தேசத்துக்காகப் போராடிய பசும்பொன் ஐயாவினுடைய பெருமையைப் போற்றவும், கழக ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், 2007-ஆம் ஆண்டு அவருடைய நூற்றாண்டு விழாவை நம்முடைய தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்தான் அன்றைக்குச் சிறப்பாகக் கொண்டாடினார் என்பது மிகச் சிறப்பு.

அதேபோல, கோரிப்பாளையத்தில் பெருமதிப்பிற்குரிய மூக்கையா தேவர் அவர்களின் சீரிய முயற்சியோடு, தேவர் திருமகனாருக்குச் சிலை அமைக்கப்பட வேண்டும் என்ற அந்தக் கனவைத் தலைவர் கலைஞர் அவர்கள்தான் நிறைவேற்றித் தந்தார்கள். அன்றைக்கு இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த வி.வி. கிரி அவர்கள்தான் அவருடைய சிலையைத் திறந்து வைத்துப் பெருமை சேர்த்தார்கள்.

அதேபோல மதுரை ஆண்டாள்புரம் பாலத்திற்கும் தேவர் திருமகனாரின் பெயரைத்தான் சூட்டி, தலைவர் கலைஞர் அவர்கள் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள். எனவே, இப்படி பல்வேறு திட்டங்கள், பல்வேறு நலப்பணிகள் எல்லாம் கழக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றிருக்கின்றன. தொடர்ந்து என்னுடைய தலைமையில் நடைபெற்ற 'திராவிட மாடல்' ஆட்சியின் மூலமாகப் பல்வேறு பணிகளை நாங்கள் நிறைவேற்றித் தந்திருக்கிறோம்.

"கோழையாக இருக்கக் கூடாது; போராடி வெற்றி பெற வேண்டும்" என்று அவர் சொன்ன திருவாசகம்தான் என்னுடைய மனதிலே இன்றைக்கும் நிலைத்து நிற்கிறது. அந்த வழியில் நாங்கள் நிச்சயமாகப் பின்பற்றுவோம் என்ற உறுதியை இந்த நேரத்தில் உங்கள் மூலமாக நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.

“5 மாத த.வெ.க ஆட்சிக்கு ‘ஜீரோ’ தான் மதிப்பெண்” : பசும்பொன்னில் மு.க.ஸ்டாலின் பேட்டி (முழு விவரம்) !

கேள்வி: தமிழ்நாட்டின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

கழக தலைவர் பதில்: உங்களுக்குத் தெரியாமல் எதுவும் இல்லை; உங்களுக்கே எல்லாம் தெரிந்திருக்கும். இருந்தாலும் கேட்கிறீர்கள். இந்த ஆட்சி வர வேண்டும் என்று விரும்பி வாக்களித்தவர்கள் எல்லாம், இன்றைக்கு "இந்த ஆட்சி எப்போது ஒழியும்?" என்ற நிலையில் போய்க்கொண்டிருக்கிறது.

நீங்களே சமூக வலைதளங்களில் எல்லாம் தொடர்ந்து பார்த்திருப்பீர்கள்; அந்தச் சமூக வலைத்தளங்களில் எல்லாம் மக்கள் என்னென்ன பேட்டிகள் கொடுக்கிறார்கள்? விலைவாசி எந்த அளவுக்கு விஷம் போல உயர்ந்து போய்க்கொண்டிருக்கிறது! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. அதேபோன்று, பாலியல் பலாத்காரம்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், சிறைச்சாலையில் இருந்த கைதிகள் எல்லாம் கூட தப்பித்து ஓடக்கூடிய நிலை இன்றைக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, சட்டம்-ஒழுங்கும் இன்றைக்குச் சந்தி சிரிக்கிறது. மக்களும் பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிறுமிகள் இன்றைக்குக் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவது மட்டுமல்லாமல், திடீர் திடீரென்று காணாமல் போகக்கூடிய செய்திகளும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

சினிமாவில் அவர் கதாநாயகனாக நடித்ததை நம்பி, அவர் கதாநாயகனாகச் செயல்படுவார் என்று நம்பி வாக்களித்த மக்கள் எல்லாம் இன்றைக்கு ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இதுதான் உண்மை.

“5 மாத த.வெ.க ஆட்சிக்கு ‘ஜீரோ’ தான் மதிப்பெண்” : பசும்பொன்னில் மு.க.ஸ்டாலின் பேட்டி (முழு விவரம்) !

கேள்வி: உங்கள் ஆட்சியில் அடிப்படை வசதிகள் எல்லாம் நன்றாக இருந்தது... இப்போது அதில் எல்லாம் பிரச்சினை வந்துவிட்டதே?

பதில்: அதான் சொன்னேனே, நாங்கள் சொன்னதையெல்லாம் சொல்லிவிட்டோம்; நாங்கள் செய்ததையெல்லாம் சொன்னோம். அவர் வந்த பிறகு எதுவும் நடக்கவில்லை. அதைப்பற்றி எல்லாம் இந்த முதலமைச்சர் கவலைப்படவில்லை. அவர் ஏதோ 'கோட்-சூட்' போட்டுக்கொண்டு, ஏதோ அலுவலகத்திற்கு வேலைக்குப்போவது போல காலையில் 9, 10 மணிக்கு வந்துவிட்டு, மாலை 5 மணிக்கெல்லாம் வீட்டிற்குப் போய்விடுகிறார். இதுதான் நிலவரம்.

கேள்வி: இடைத் தேர்தலில் சீமான் போட்டியிடுகிறார். அவருக்கு உங்கள் ஆதரவு உண்டா?

பதில்: தேர்தல் தேதி அறிவிக்கட்டும்.

கேள்வி: முன்னாள் முதலமைச்சராக த.வெ.க.வின் 5 மாத கால ஆட்சிக்கு உங்கள் மதிப்பெண் என்ன?

பதில்: ‘0’

கேள்வி: உங்களுக்கே வரும்போது பாதுகாப்பில்லை?

பதில்: நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. எங்களுக்கு கழகம் இருக்கிறது; கட்சித் தோழர்கள் இருக்கிறார்கள். தொண்டர்கள் இருக்கிறார். அந்தப் பாதுகாப்பு போதும்.

கேள்வி: அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு பேரும் கூட்டணியில் இருப்பதாகத் தமிழ்நாடு அமைச்சர்கள் தொடர்ந்து சொல்கிறார்களே?

பதில்: அப்படியா?

கேள்வி: தி.மு.க. நபர்கள் மீதான கைது நடவடிக்கைகளைத் தி.மு.க. எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

பதில்: சட்டரீதியாக நாங்கள் எதிர்கொண்டிருக்கிறோம். நீதிமன்றத்திற்குச் சென்று நாங்கள் குற்றவாளிகள் இல்லை என்று நிரூபிப்போம். அந்த அடிப்படையில் தான் எங்களுடைய பணி நடந்து கொண்டிருக்கிறது. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் அவசரநிலையை எதிர்த்தவர்கள்; 'மிசா' சட்டத்தைப் பார்த்தவர்கள், 'தடா' சட்டத்தைப் பார்த்தவர்கள், 'பொடா' சட்டத்தைப் பார்த்தவர்கள். இதெல்லாம் எங்களுக்கு ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. சந்திக்க வேண்டிய நேரத்தில், சந்திப்போம்.

banner

Related Stories

Related Stories