பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுகளின் பங்கைக் கட்டுப்படுத்தும் வகையில் UGC-யின் வரைவு விதிக்கு தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (UGC) சமீபத்தில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதைப் போன்று, டெல்லி, இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா மாநில சட்டமன்றங்களிலும் நிறைவேற்றிட வேண்டுமென்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், UGC-யின் வரைவு விதிக்கு எதிர்ப்பு தெரிக்கும் வகையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாநாடு நடைபெற்றது. இதில், பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன்,” உலக நாடுகளில் புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க நிதியை செலவிடும் நேரத்தில் புராணங்களை உண்மை என நம்பவைக்க ஒன்றிய பாஜக அரசு செலவு செய்து வருகிறது. கல்வித்துறைக்கு தொடர்பே இல்லாதவர்களை பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்க புதிய விதிகளை உருவாக்கி வருகிறது.
கல்வித்துறையில் அடிப்படை பட்டம் பெறாதவரை விரிவுரையாளராக நியமிக்கும் சட்டமெல்லாம் உயர்கல்வியில் தரத்தையே குறைத்துவிடும். இந்த விதி தனி ஒரு நடவடிக்கையல்ல, மாநில அரசின் உரிமையை பறிக்கும் திட்டம்.
UGC வரைவு விதி ஜனநாயகத்துக்கு விரோதமானது. UGCயின் புதிய விதி பல்கலை. நிர்வாகத்தில் மாநில அரசுக்கு உள்ள பங்கை நிராகரிக்கிறது. UGC வரைவு விதி கூட்டாட்சி முறைக்கு முரணானது. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர் கையில் வழங்க வழிசெய்கிறது UGCயின் புதிய விதி. ஆளுநர் பதவியை அரசியல் காரணங்களுக்காக ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது.
கல்வித்துறை சாராதவர்களை நியமித்தால் உயர்கல்வியின் தரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். ஒரு துறையில் அடிப்படை பட்டம் பெறாதவரை விரிவுரையாளராக நியமிக்க வகை செய்யும் விதி உயர்கல்வி தரத்தை குறைத்துவிடும். வரைவு விதி தனியொரு நடவடிக்கையல்ல; மாநில அரசின் உரிமைகளை பறிப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றே UGC வரைவு” என தெரிவித்துள்ளார்.