தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.8.2024) தலைமைச் செயலகத்தில், நீர்வளத் துறை சார்பில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 24,468 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் ரூ.1916.41 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தினைக் காணொளிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப் பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்குதல், ஏற்கெனவே உள்ள நீர்நிலைகள் மற்றும் அதன் உட்கட்டமைப்புகளை நல்ல முறையில் பராமரித்தல், பாசனக் கட்டமைப்புகளான அணைகள், அணைக்கட்டுகள், நிலத்தடி தடுப்புச் சுவர்கள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் போன்றவற்றை உருவாக்குதல், புனரமைத்தல் மற்றும் பராமரித்தல் போன்ற பல்வேறு முக்கியப் பணிகளை நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தீவிர முயற்சிகளின் பயனாக தற்போது அத்திக்கடவு - அவிநாசி திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கைகளை ஏற்று 1972-ஆம் ஆண்டில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தைச் செயல்படுத்திட முனைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ஆனால் அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் 1976-க்குப் பின் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. மீண்டும் 1996-ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இத்திட்டம் குறித்து மறுபடியும் ஆய்வு செய்து, திட்டத்தினை நிறைவேற்றிட ஒப்புதல் வழங்கினார். ஆனால் ஆட்சி மாற்றம் எற்பட்டதால் இத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது.
பின்னர், 2019-இல் இத்திட்டத்தைத் தொடங்கி நிறைவேற்றும் பணிகள் தொடர்ந்தன என்றாலும், 2021-இல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி அமைந்தபின்தான், இத்திட்டத்தினை நிறைவேற்றிட உறுதிபூண்டு, ரூ.1,916.417 கோடி மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவு படுத்தப்பட்டன.
அதன் தொடர்ச்சியாகத் திட்டப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ளன. சோதனை ஓட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் காணொளிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதன் மூலம் பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்திலிருந்து ஆண்டொன்றிற்கு 1.50 டி.எம்.சி உபரி நீரை வினாடிக்கு 250 கன அடி வீதம் 70 நாட்களுக்கு நீரேற்று முறையில், 1065 கி.மீ. நீளத்திற்கு நிலத்தடியில் குழாய்ப் பதிப்பின் மூலம் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் நீர்வளத்துறையின் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள், என மொத்தம் 1045 எண்ணிக்கையிலான ஏரிகள், குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்படும்.
இந்த நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :
"1972-இல் தலைவர் கலைஞர் செயல்படுத்திட முனைந்த அத்திக்கடவு - அவிநாசி திட்டம், பல்வேறு ஆட்சி மாற்றங்களால் தடைப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தபோது, அவர்களை நேரில் சந்தித்து, கழக ஆட்சியில் இந்தத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தேன்.
இந்தத் திட்டத்துக்கான பணிகள் 2019-இல் தொடங்கப்பட்டிருந்தாலும், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், இத்திட்டத்தை நிறைவேற்றிட உறுதிபூண்டு, 1,916.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுப் பணிகள் விரைவு படுத்தப்பட்டன. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் இந்தத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்!”