
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (22.7.2023) சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் 42-ஆம் ஆண்டு இசைவிழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை:-
முத்தமிழ்ப் பேரவையின் 42-ஆம் ஆண்டு விழாவிலே கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டுதோறும் தலைவர் கலைஞர் அவர்களை அழைத்து இந்த விழாவை நடத்துவதுண்டு. அதை வழக்கமாக, வாடிக்கையாக வைத்திருந்தவர் நம்முடைய இயக்குநர் அமிர்தம் அவர்கள். தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவுற்ற பிறகு, ஆண்டுதோறும் என்னை அழைத்து வந்து இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அவர் இந்த நிகழ்ச்சிக்கு தேதி கேட்கிறாரோ இல்லையோ – நான் வழக்கமாக ஆண்டுதோறும் ஒரு தேதியை தருவதென்று முடிவெடுத்து அதை குறித்துக் வைத்துக் கொள்வதுண்டு. ஏன் என்றால், இயக்குநர்
அமிர்தம் அவர்களிடத்திலே எப்பொழுதும் ஒரு பயம் உண்டு. நான் பல இடங்களிலே இதை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறேன். அப்பாவிடத்திலே கூட அடி வாங்கியது கிடையாது. அவரிடத்திலே அடி வாங்கியிருக்கிறேன். அதை இன்றைக்கும் மறக்க மாட்டேன். அந்த அளவிற்கு என்னை கண்டிப்போடு வளர்த்தவர் இயக்குநர் அமிர்தம் அவர்கள். தொடர்ந்து அவர் ஆற்றிவரும் முத்தமிழ்த் தொண்டிலே என்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற உணர்வோடு நானும் தவறாமல் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்வதுண்டு.
முதன் முதலில் 1975 -ஆம் ஆண்டு வழுவூர் இராமையா அவர்களைத் தலைவராகவும், குளிக்கரை பிச்சையா அவர்களைச் செயலாளராகவும், தஞ்சை தியாகராஜன் அவர்களைப் பொருளாளராகவும் இணைத்து உருவாக்கப்பட்டது இந்த முத்தமிழ்ப் பேரவை. இந்தப் பேரவைக்கு இயக்குநர் அமிர்தம் அவர்கள், தற்போது செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். தலைவராக ஜி.ராமானுஜம் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு செயலாற்றி வருகிறார். தொடர்ந்து இத்தனை ஆண்டு காலமாக இந்தப் பேரவை சிறப்பாகச் செயல்பட்டு வருவது உண்மையிலேயே பாராட்டுக்குரிய ஒன்று. அதற்காக நான் மனந்திறந்து உங்கள் அனைவரின் சார்பிலே அத்தனை பேரையும் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

எந்த அமைப்பையும் உருவாக்குவது மிகமிக எளிது. ஆனால் அதை முறைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி நடத்துவது என்பதுதான் மிகவும் அரிது. வள்ளுவர் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற குறளுக்கேற்ப முத்தமிழ்ப் பேரவையை உருவாக்கி அதனை நம்முடைய இயக்குநர் அமிர்தம் அவர்களின் கையில் தொலைநோக்குப் பார்வையுடன் தலைவர் கலைஞர் அவர்கள் ஒப்படைத்திருக்கிறார்.
தலைவர் கலைஞர் அவர்களை பார்த்து வளர்ந்தவர் அவர். தலைவர் கலைஞர் அவர்களால் வளர்க்கப்பட்டவர் அவர். தலைவர் கலைஞர் அவர்களின் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர்அமிர்தம் அவர்கள். பூம்புகார், பூமாலை, மறக்கமுடியுமா என 1964 முதல் 1994 வரைக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்து பணியாற்றியவர் தான் அமிர்தம் அவர்கள். திரைப்பட இயக்குநராக - திரைப்படத் தயாரிப்பாளராக பன்முக ஆற்றலை கொண்டவர் நம்முடைய அமிர்தம் அவர்கள். முத்தமிழ்ப் பேரவையுடன் சேர்த்து திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கம் என்ற இந்த கலையரங்கத்தையும் எழுப்பியவரும் அவர்தான்.
இசை விழாவுடன் சேர்த்து, ஆண்டுதோறும் விருதுகளை வழங்குவதை முத்தமிழ்ப் பேரவை வழக்கமாக வைத்திருக்கிறது. முத்தமிழ்ப் பேரவையில் விருது பெறாத தலைசிறந்த கலைஞர்களே இல்லை எனும் அளவுக்கு, அவர்களைக் கண்டறிந்து, விருதுகளை தொடர்ந்து வழங்கி கொண்டிருக்கிறது. முத்தமிழ்ப் பேரவை விருதை பெற்றோம் என்று சொல்வதே பெருமைக்குரியதாக அமைந்துவிட்டது இப்போது. அந்த வகையில் இந்த 42-ஆவது ஆண்டு விழாவில்,
* இயல் செல்வம் விருது பெற்றிருக்கக்கூடிய நம்முடைய அன்பிற்கினிய சகோதரர் எஸ்.ராஜா அவர்களைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நான் அவருடைய ரசிகன். பட்டிமன்றத்தில்பாரதி பாஸ்கருடன் ராஜா அவர்கள் மோதிக் கொள்ளும் காட்சியை பார்த்து ரசிப்பதுண்டு. சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் தூண்டக்கூடிய பேச்சுக்கு சொந்தக்காரர் நம்முடைய ராஜா அவர்கள். எத்தனை பேருக்குப் பின்னர் பேசினாலும் முத்திரை பதிக்கக் கூடிய அளவிற்கு பேசக்கூடியவர் நம்முடைய ராஜா அவர்கள். இதுதான் முதல் முதலில் நான் பெறும் விருது என்று அவரே சொன்னார். முதன் முதலாக அதுவும் என் கையால் விருது பெறுகிறார் அவர், அதில் எனக்கு ஒரு பெருமை. இயல்செல்வம் விருதை அவர் பெற்றிருப்பது பொருத்தமான ஒன்று.

* இசைச் செல்வம் விருது பெற்றுள்ள மகதி அவர்கள், இசையுலகில் இளம் புயலாக வலம் வரக் கூடியவர். இரண்டு வயதிலேயே ராகங்களை சரியாகச் சொல்லும் ஆற்றலைப் பெற்று, மூன்று வயதிலேயே மேடையேறிப் பாடியவர்.
* திருவாவடுதுறை ராஜரத்தினம் அவர்கள் பெயரிலான ராஜரத்தினா விருதை இஞ்சிக்குடி இ.பி.கணேசன் அவர்கள் பெற்றிருக்கிறார். இவரும் இவரது சகோதரரும் இணைந்து 15 வயதில் இருந்தே, இசை உலகில் வலம் வருகிறார்கள். இந்தியா முழுவதும் சென்று வாசித்திருக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையிலேயே இவரது இசை ஒலித்துள்ளது. இஞ்சிக்குடி சகோதரர்கள் என்று பெயர் பெற்றவர் அவர்.
* இந்த ஆண்டுக்கான நாட்டிய செல்வம் விருது வழுவூர் பழனியப்பன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நாட்டிய உலகில் வழுவூரார் பாணிக்கு தனிச்சிறப்பு உண்டு என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அத்தகைய வழுவூர் பாணி என்ற நாட்டிய பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரர் தான் நம்முடைய பழனியப்பன் அவர்கள். தன்னைப் போலவே பல மாணவர்களை உருவாக்கி வரும் புகழ்பெற்ற நடன குருவாகவும் அவர் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
* வீணைச் செல்வம் விருது பெற்ற ராஜேஸ் வைத்யா அவர்கள், உலகப் புகழ் பெற்ற வீணைக் கலைஞராக விளங்கிக் கொண்டிருக்கிறார். இசையுலகில் மட்டுமல்ல, திரையுலகிலும் அவர் தனது வெற்றிக் கொடியை நாட்டி இருக்கிறார். “Do you have a Minute” என்ற பெயரில், அழகிய திரைப்பாடல்களைத் தனது வீணையில் மீட்டி, இவர் ட்விட்டரில் பதிவிட்டு வருவதை இரசிக்காதோர் இருக்க முடியாது. அந்த அளவுக்குப் பிரபலமானவர் அவர்.
* இந்த ஆண்டுக்கான தவில் செல்வம் விருது பெற்ற இடும்பாவனம் கண்ணன் அவர்கள் - 44 ஆண்டுகளாக தவில் வாசித்து வருகிறார். இந்த முத்தமிழ்ப் பேரவையின் வயது, இவரது கலைத்துறை அனுபவத்திற்கு ஒப்பாக இருக்கிறது.
- இத்தகைய ஆற்றல் மிக்கவர்களை, அனுபவம் மிக்கவர்களைத் தேர்வு செய்து விருதுகள் வழங்கி, அவர்களின் கலை ஆளுமையை அங்கீகரித்திருக்கக்கூடிய முத்தமிழ்ப் பேரவையை நான் உள்ளபடியே மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள்... ''பிற விழாக்களில் பெறுகின்ற பட்டங்களும் - விருதுகளும் தங்கச் சிம்மாசனத்திலிருந்து பெறுவது போலிருக்கலாம். ஆனால் முத்தமிழ்ப் பேரவையில் பெறும் விருதுகள் தாயின் மடியிலிருந்து பெறும் இனிமை போன்றது" என்று குறிப்பிட்டிருக்கிறார். அத்தகைய விருதை நீங்கள் எல்லாம் பெற்றிருக்கிறீர்கள்.
முத்தமிழ்ப் பேரவை விருது பெற்றதை நீங்கள் பெருமையாக நினைப்பதைப் போலவே - உங்களுக்கு விருது வழங்கியதை முத்தமிழ்ப் பேரவையும் பெருமையாகக் கருதுகிறது. உங்களுக்கு என்னுடைய கையால் விருது வழங்கியதை நானும் பெருமையாகக் கருதுகிறேன் இந்தத் தருணத்தில், ஒரு வேண்டுகோளை முத்தமிழ்ப் பேரவைக்கு வைக்கலாம் என நினைக்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா ஆண்டு இது என்பதால் இந்த ஆண்டு முதல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரால் ஒரு விருதை முத்தமிழ்ப் பேரவை சார்பில் வழங்க வேண்டும் என்று உரிமையுடன் நான் கேட்டுக் கொள்கிறேன். முத்தமிழுக்குச் சிறப்புற தொண்டாற்றுபவர்க்கு -முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான விருதும் தனியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுவாக முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழாவில் முதலமைச்சரிடம்தான் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் முத்தமிழ்ப் பேரவைச் செயலாளர் இயக்குநர் அமிர்தம் அவர்கள் மீதான உரிமையின் காரணமாக நான் கோரிக்கை வைக்கிறேன். அதனை அவர் தட்டாமல் ஏற்றுக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்.
தலைவர் கலைஞர் அவர்கள் எழுதாத எழுத்துகள் இல்லை. பாடல்களை - கவிதைகளை எழுதிக் குவித்தவர் அவர். நாடகங்களை எழுதினார்; நடித்தார். பாடல்கள் பாடியதில்லையே தவிர, அதன் ராகங்கள், நுணுக்கங்களை அறிவார். இப்படி முத்தமிழாக வாழ்ந்தவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அதனால்தான் முத்தமிழ்ப் பேரவையின் முகப்பில் அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது. 2.1.2020 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலையினை நான் திறந்து வைத்தேன்.
அது தனிப்பட்ட கலைஞரைப் பெருமைப்படுத்துவதற்காக அல்ல, அவர் மூலமாக முத்தமிழை வளர்ப்பதற்காகத்தான். இன்றைக்கு அவர் பெயரால் மதுரையில் உலகத்தரத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது என்றால் - அவர் பெயரால் சென்னை கிண்டியில் உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது என்றால் -அதன் மூலமாக மக்களே அந்தப் பயனை அடைகிறார்கள். கலைஞரை முன்வைத்து மக்கள் சேவையை, கலைத் தொண்டை ஆற்றி வரும் அரசாக இன்றைய தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
இயல், இசை, நாடகத்தை காப்பாற்றுவது என்பது தமிழை காப்பாற்றுவது. தமிழினத்தை காப்பாற்றுவது. ஆனால் இன்று சிலர் தமிழுக்கும், தமிழர்களுக்கும் விரோதமான செயல்களை செய்து கொண்டே தமிழ் முகமூடியை போட்டுக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ளவர்களை எல்லாம் ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள். ஆனால் அவர்கள் போடுவது எல்லாம் தப்பு கணக்குதான். அதை புரிய வைக்கும் வகையில், தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் தக்க பாடத்தை புகட்டுவார்கள்.
இது போல ஏராளமான இசை விழாக்கள், இலக்கிய விழாக்கள் நடக்கவேண்டும். புதிய புதிய நாடகங்கள் அரங்கேற்றப்பட வேண்டும். ராஜாவைப் போன்ற பேச்சாளர்கள் – மகதி, ராஜேஸ் வைத்யாவைப் போன்ற இசைக்கலைஞர்கள் - ஏராளமாக உருவாக வேண்டும். அப்படி உருவானால்தான் பல்லாயிரம் ஆண்டு தமிழை, இன்னும் பல்லாயிரம் ஆண்டுக்குக் காப்பாற்ற முடியும்.
அரசியலில் இருக்கும் நாங்கள் அரசியல் தொண்டு மூலமாக தமிழ் வளர்ச்சிக்கு பணியாற்றுவோம். அதே போல கலைத்துறையில் இருக்கும் கலைஞர்கள், உங்கள் துறை மூலமாக தமிழ்க் கலை வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். விருது பெற்றிருக்கும் அனைவரையும் இந்த முத்தமிழ்ப் பேரவையின் சார்பில், இன்றைக்கும் நம் நெஞ்சில் நிறைந்திருக்கும் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில் வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.








