மு.க.ஸ்டாலின்

"உங்களுக்கு உடன்பிறப்பாக நான் இருக்கிறேன்": உலக தமிழர்களுக்கு நம்பிக்கை கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நம்மைக் கடலும் கண்டங்களும் பிரித்திருந்தாலும், தமிழ் இணைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"உங்களுக்கு உடன்பிறப்பாக நான் இருக்கிறேன்":  உலக தமிழர்களுக்கு நம்பிக்கை கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.01.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற “அயலகத் தமிழர் தினம் 2023” விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை:-

"எங்கு பிறந்தாலும் தமிழன் தமிழனே!" என்று முழங்கியவர் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். எங்கு இருந்தாலும் தமிழர் தமிழரே என்ற உலகு தழுவிய நோக்கத்துடன் அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் நலன் காத்திட செயலாற்றிக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசில், நேற்று தொடங்கி, இரண்டாம் நாளாக இன்றும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

தமிழர்களாக கூடியிருக்கிறோம். தமிழ் உணர்வோடு கூடியிருக்கிறோம். தமிழன் என்ற அந்த எண்ணத்தோடு குழுமியிருக்கிறோம்.

தமிழைப்பற்றி தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள், “உளங்கவர் ஓவியமே, உற்சாக காவியமே, ஓடை நறுமலரே, ஒளிரும் புதுநிலவே, அன்பே, அமுதே, அழகே, உயிரே, இன்பமே, இனியத் தென்றலே, பணியே, கனியே, பழரச சுவையே, மரகத மணியே, மாணிக்கச் சுடரே, மன்பதை விளக்கே” என்றெல்லாம் தமிழை அழைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும் தமிழை, தமிழே என்று அழைக்கக்கூடிய சுகம் வேறு எதிலும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட தமிழுக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையிலே நாம் இங்கே கூடியிருக்கிறோம்.

இன்றல்ல, நேற்றல்ல, ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே உலகில் உள்ள பிற நாடுகளுடன் நல்லுறவு கொண்டிருந்த பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. அந்தப் பெருமையின் தொடர்ச்சியாகத்தான், தமிழ் நிலப்பரப்பின் அடையாளமாக அயலகத்தில் வாழும் தமிழர்களான நீங்கள் அனைவரும் இங்கே வந்திருக்கிறீர்கள்.

"உங்களுக்கு உடன்பிறப்பாக நான் இருக்கிறேன்":  உலக தமிழர்களுக்கு நம்பிக்கை கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

வரலாற்றுப் பெருமைமிக்க ஏதென்ஸ், ரோம் நகரங்களுக்கு இணையாக பூம்புகார், கொற்கை, தொண்டி போன்ற நகரங்களைக் கொண்டது நம்முடைய பழந்தமிழ்நாடு. பெருங்கடல் கடந்து, உலகளாவிய மனித குலத்துடன் நட்புறவு பாராட்டி மானுட சமுத்திரத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் தமிழர்கள்.

கடற்படை கொண்டிருந்த சோழ மன்னர்கள் மேற்கொண்ட பயணங்கள் வெறும் போர்க்களங்களாக மட்டுமல்ல, பண்பாட்டு உறவுகளாகவும் மலர்ந்திருக்கின்றன. அதற்கான தடயங்களை தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றில் காண முடியும்.

பூம்புகார் எனும் காவிரிப்பட்டினத்தில் துறைமுகம் சோழர் காலத்தில் பல்வேறு நாடுகளுடன் ஏற்றுமதி - இறக்குமதி வணிகத்தில் ஈடுபட்டிருந்ததை சங்க இலக்கியமான பட்டினப்பாலை படம் பிடித்துக் காட்டுகிறது.

கால வளர்ச்சியில் தமிழர்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக பிற நாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழநிலை ஏற்பட்டன. மலேயா, ஃபிஜி, இலங்கை, தென்னாப்பிரிக்கா, மடகாஸ்கர் தீவுகள் எனப் பல நாடுகளுக்கும் தொழிலாளர்களாக செல்ல வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. எந்த நாட்டிற்குச் சென்றாலும், அங்கே காடு திருத்தி, கழனி செழிக்கச் செய்து, உழைப்பால் தன்னை மட்டுமின்றி, தனக்கு வாழ்வளித்த நாட்டையும் உயர்த்திக் காட்டியவர்கள்தான் நீங்கள். தலைமுறைகள் பல கடந்த தமிழர்கள். அவர்களின் வழித்தோன்றல்கள் நீங்கள்.

உலக நாடுகளில் குடியேறிய நம் தமிழர்களின் உழைப்பும் தியாகமும் தாய்மொழியாம் தமிழுக்கும் தாய்த் தமிழ்நாட்டிற்கும் புகழ் சேர்க்கும் வகையில், அந்தந்த நாடுகளில் அரசியல், தொழில், பொருளாதாரம் எனப் பல நிலைகளில் தவிர்க்க முடியாத சக்தியாகத் தமிழர்கள் விளங்கி வருகின்றனர். எந்த நாட்டுக்குச் சென்றாலும், சொந்த நாட்டையும் தாய்மொழியையும் தமிழர்கள் தங்கள் நெஞ்சக் கூட்டில் அடைகாத்து வைத்திருப்பது வழக்கம். விதை நெல்லாகத் தமிழை எடுத்துச் சென்று, தாங்கள் வாழும் நாடுகளிலும் தமிழ் விளையும் நிலங்களை உருவாக்கியவர்கள் தமிழர்கள். பல தலைமுறைகள் கடந்த அயலகத் தமிழர்களின் ஆற்றலும், ஆராய்ச்சித் திறனும், உழைப்பின் மேன்மையும், உயர்ந்த பொறுப்புகளும் இன்று தனிப்பெரும் வரலாறாக உருவாகியுள்ளன.

"உங்களுக்கு உடன்பிறப்பாக நான் இருக்கிறேன்":  உலக தமிழர்களுக்கு நம்பிக்கை கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் என்பார்கள். அதுபோல அயலகத்தில் குடியேறி வரும் தமிழர்கள், அங்கே பணிபுரியும் இடத்திலும் சிரமத்திற்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாகக்கூடிய சில நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் வருகிறது. அதுமட்டுமின்றி மருத்துவ ரீதியாகவும் இன்னலுக்கு ஆட்படுகின்ற நிலைமையும் உள்ளது.

எனவேதான், உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவரான நம் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் ஐந்தாவது முறையாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது, 2010-ஆம் ஆண்டில், அயலகத் தமிழர்களின் நலன் காத்திட, ஒரு துறையை உருவாக்கிட முனைந்தார்கள்.

உலகின் எத்திசையிலும் வாழும் தமிழர்களின் உள்ளத்துடிப்பு எப்படிப்பட்டது என்பதை அறிந்த தலைவர் கலைஞர் அவர்கள், அவரது திரைக்காவியமான பராசக்தியில், “பிறக்க ஒரு நாடு.. பிழைக்க ஒரு நாடு..” என்று தாய்நிலத்தை விட்டு வேறு நாட்டில் வாழும் தமிழர்களின் நிலையை வசனமாக வடித்திருப்பார்.

கடல் கடந்த தமிழர்களின் வேதனை உணர்வை வெளிப்படுத்திய முத்தமிழறிஞர் கலைஞரின் பேனா, அதனைத் துடைப்பதற்கான திட்டத்தையும் வரைந்து காட்டியது. வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக, மறுவாழ்வுத் துறையில் ஒரு பிரிவு இணைக்கப்பட்டு அயலகத் தமிழர்கள் நலன் காக்கும் பணி தொடங்கப்பட்டது.

2011-இல் இதனைத் தனித் துறையாக உருவாக்கிட, தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது. அதனை உடனடியாக நிறைவேற்றிட வாய்ப்பு அமையவில்லை. காரணம், எப்படி உங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடைவெளி உள்ளதோ, அதுபோல தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு மீண்டும் அமைவதற்கு ஒரு பத்தாண்டு கால இடைவெளி ஏற்பட்டுவிட்டது.

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திராவிட மாடல் அரசு, தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, அயலகத் தமிழர்களின் நலனுக்கென தனியே ஓர் அமைச்சகத்தை உருவாக்கி அமைச்சரையும் நியமித்துள்ளது. அதுமட்டுமின்றி அயலக மண்ணில் வசிக்கும் நம் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களுக்குத் தேவை ஏற்படக்கூடிய நிலைகளில் உதவி புரிந்து வரும் தமிழ்ச் சங்கங்களின் பணிகளை அங்கீகரிக்கவும், அடுத்த தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாடு, தமிழ்மொழி கற்றல், கற்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையிலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ஆம் நாள் “அயலகத் தமிழர் நாள்” கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது வெறும் அறிவிப்பல்ல என்பதைத்தான் இங்கே திரண்டிருக்கின்ற நீங்களும் உங்களோடு கலந்து நானும் சேர்ந்து இங்கே நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.

"உங்களுக்கு உடன்பிறப்பாக நான் இருக்கிறேன்":  உலக தமிழர்களுக்கு நம்பிக்கை கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதுமட்டுமல்ல, கடந்த ஆண்டு செப்டம்பர் 24 அன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவச் செய்திட முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டோடு தமிழ் பரப்புரை கழகத்தைத் தொடங்கி வைத்தேன். இதன் மூலம் அயலகத் தமிழர்கள், தமிழை எளிமையாக கற்பதற்கான தமிழ்ப் பாட நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான துணைக் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இணைய வழியில் தமிழைக் கற்பித்தலும் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழர்களின் நலன் பேணவும் அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தவும், புலம்பெயர் தமிழர் நலவாரியம் உருவாக்கப்பட்டு திரு. கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் அதன் தலைவராகவும், வெளிமாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய தமிழர்கள் அரசுசாரா உறுப்பினர்களாகவும், அரசு உயர் அலுவலர்களை உள்ளடக்கியதாகவும் இந்த வாரியம் செயல்பட உள்ளது.

ஆம்.. சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம் என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் வழியிலான அரசு இது.

அயலகத்தில் வாழும் தமிழர் நலன் காக்கும் வகையில் தொடங்கப்பட்ட இத்துறையில், கடந்த ஓராண்டில் மட்டும்,

வெளிநாடுகளில் இறந்துபோன 288 தமிழர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருதல்,

அங்கே இறந்தவர்களின் ஊதிய நிலுவை மற்றும் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருதல்,

மருத்துவ இயலாமையால் பாதிக்கப்பட்டவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தல்,

-இதுபோன்ற வேலைகளை அங்குள்ள இந்தியத் தூதரகம் மற்றும் தமிழ்ச் சங்கங்களின் உதவியுடன் செயல்படுத்தி வருகின்றது.

அயலகத் தமிழர்களின் நலனுக்கென அமைக்கப்பட்டுள்ள அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்து, அயல்நாட்டிற்கு செல்லும் தமிழர்களுக்கு அடையாள அட்டை, காப்பீடு, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை என பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

ஏற்கனவே நம் அரசு, வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு நலனுக்கென பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. குறிப்பாக, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், வெளிநாடுகளிலிருந்து 80 ஆயிரம் தமிழர்கள் பாதுகாப்பாகத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் பணி வாய்ப்பை இழந்த காரணத்தால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மூலமாக மானியத்துடன் கூடிய கடன் வசதி வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூண்ட போது, இந்திய ஒன்றிய அரசின் ஒத்துழைப்புடனும், உக்ரைனின் அண்டை நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடனும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சியால், உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த 1,890 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இவர்களில் 1,524 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் செலவில் சொந்த ஊருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தமிழ்நாடு அரசின் சார்பிலே உடனடியாக அவர்களுக்குத் தேவையான 174 கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள், பால்பவுடர் மற்றும் உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்து, மனிதநேய அடிப்படையில் அங்குள்ள மக்களின் இன்னலைப் போக்கிட உதவிக்கரம் நீட்டியது.

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும்போதெல்லாம், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை கவனத்தில்கொண்டு, தாயுள்ளத்தோடு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.

அதன் தொடர்ச்சியாக, அயலகத் தமிழர் நாளான இன்று சில அறிவிப்புகளை மகிழ்ச்சியோடு நான் அறிவிக்க விரும்புகிறேன்.

முதலாவதாக, தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு காலக்கட்டங்களில், புலம்பெயர்ந்து அயல்நாடுகளில் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் வாழ்ந்து வரும் தமிழர்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு தரவுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்படும்.

இரண்டாவதாக, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள் தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும்.

மூன்றாவதாக, அயல்நாடுகளில், வெளிமாநிலங்களில் பணிக்குச் சென்று அங்கு எதிர்பாராதவிதமாக இறந்துவிடும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

நான்காவதாக, அயல்நாடுகளுக்கு செல்வோர் குறித்த தரவுத் தளம் ஒன்று ஏற்படுத்தப்படும்.

-என்ற அறிவிப்புகளை வெளியிடுவதோடு, வெளிநாடுகளுக்குச் செல்லும் நம் தமிழ்ச் சொந்தங்களின் நலன் காத்திட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, கண்ணை இமை காப்பதைப்போல, உலகெங்கும் வாழும் நம் தமிழ் இனத்தை இந்த அரசு தொடர்ந்து காத்திடும் என்று மீண்டும் உறுதியளிக்கிறேன்.

"உங்களுக்கு உடன்பிறப்பாக நான் இருக்கிறேன்":  உலக தமிழர்களுக்கு நம்பிக்கை கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருக்கக்கூடிய நான், உங்களில் ஒருவனாக, உங்களுடைய ஒரு சகோதரனாக, உங்களில் பலருக்கு அண்ணனாக, சிலருக்கு தம்பியாக, ஏன், அனைவருக்கும் உடன்பிறப்பாக நான் இருக்கிறேன். உங்களுக்கு உறுதுணையாக இந்த அரசு இருக்கும். உங்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய உங்களால் ஆன ஒத்துழைப்பினை நீங்கள் வழங்குங்கள், இணைந்து நாம் பயணிப்போம்.

நம்மைக் கடலும் கண்டங்களும் பிரித்திருந்தாலும், தமிழ் இணைக்கும்.

உலகெங்கும் வாழும் தமிழர் வாழ்வு செழிக்கும். தமிழ்நாடு தழைக்கும்.

தமிழால் இணைவோம்!

தமிழை வளர்ப்போம்!

தமிழரையும் வளர்ப்போம்!

அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த அளவில் என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

banner

Related Stories

Related Stories