மு.க.ஸ்டாலின்

"ஆட்சியில் இல்லாமலேயே இவ்வளவு பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்" - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

“ஆட்சியில் இல்லாமலேயே இவ்வளவு பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். ஆட்சிக்கு வந்தால் இன்னும் என்னென்ன பணிகள் செய்வோம் என்பதை நீங்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

"ஆட்சியில் இல்லாமலேயே இவ்வளவு பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்" - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“ஆட்சிப் பொறுப்பில் தற்போதே தி.மு.கழகம் உள்ளதைப் போல்தான் ஆளும்கட்சி நாம் சொல்வதைக் கேட்டு செயல்படுகிறது. நாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததும் எவ்வளவு நன்மைகளைச் செய்ய முடியும் என்று நினைத்துப் பாருங்கள்”

- கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உரை.

இன்று (03-02-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில் நடைபெற்ற தி.மு.க தீர்மானக்குழு உறுப்பினர் கவிஞர் தமிழ்தாசன் - கௌசல்யா ஆகியோரின் புதல்வி டாக்டர். த.கோமல் - நா.இளங்கோவன் - இ.சவுந்தரநாயகி ஆகியோரின் புதல்வர் டாக்டர் இ.தணிகை அரசு ஆகியோரின் திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார்.

மணமக்களை வாழ்த்தி தி.மு.க தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“கவிஞர் தமிழ்தாசன் – கௌசல்யா தமிழ்தாசன் தம்பதியினரின் அருமை மகள், கோமல் எம்.பி.பி.எஸ்., அதேபோல் இளங்கோவன் – சவுந்தரநாயகி தம்பதியினரின் அருமை மகன், டாக்டர்.தணிகை அரசு அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு மணவிழா நிறைவேறியிருக்கிறது.

நான் வழக்கமாக இது போன்ற சீர்திருத்த திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்ற நேரத்தில் தொடர்ந்து ஒன்றை வலியுறுத்திச் சொல்வதுண்டு. அதை இங்கேயும் குறிப்பிட்டுக் காட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்று நடைபெற்றிருக்கும் தமிழ்தாசன் அவர்களின் மகளுக்கு நடைபெற்று இருக்கும் இந்த மணவிழா, சீர்திருத்த முறையில் - சுயமரியாதை உணர்வோடு நடந்தேறியிருக்கிறது.

இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் 1967க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால் அந்த திருமணங்கள் சட்ட முறைப்படி அங்கீகாரத்தை பெறமுடியாத நிலை இருந்தது. ஆனால் 1967-இல் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றி பெற்று, அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, அறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டு, முதலமைச்சர் என்ற முறையில் சட்டமன்றத்தில் நுழைந்து சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை ஒருமனதாக நிறைவேற்றி அதைப் பெற்றுத் தந்தார்கள்.

இன்றைக்கு நடைபெற்றிருக்கும் இந்தத் திருமணம் சட்ட முறைப்படி செல்லும் என்று அங்கீகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது. இது சீர்திருத்தத் திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதைத் திருமணம் மட்டுமல்ல, இது ஒரு தமிழ்த் திருமணம்.

இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் நம்முடைய தாய்மொழியாம் தமிழுக்கு ‘செம்மொழி’ என்ற அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கும் அந்த உரிமையோடு நடைபெறும் திருமணமாக இந்தத் திருமணம் நடந்திருக்கிறது.

அப்படிப்பட்ட இந்தத் திருமணத்தில் இவர்களுடன் சேர்ந்து நானும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நம்முடைய பாலு அவர்களும் பாரதி அவர்களும் இங்கே பேசுகிற நேரத்தில், சுருக்கமாக, அதே நேரத்தில் நம்முடைய கவிஞர் தமிழ்தாசன் அவர்களைப் பற்றிப் பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

மறைந்த நம்முடைய அன்பிற்குரிய அண்ணன் ரகுமான்கான் அவர்களிடம் உதவியாளராக இருந்து பணியாற்றி இருப்பது மட்டுமின்றி, அவர் எல்லோருக்கும் உதவியாளராகவே பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இப்போதும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

எதற்காக நான் அப்படி சொல்கிறேன் என்றால் அவரிடத்தில் எல்லா குறிப்புகளும் இருக்கும். குறிப்பாக அரசியல் ரீதியாக இருக்கும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், அந்த குறிப்புகளுடன் நமக்கு ஏதேனும் தேவை என்று சொன்னால் சிலர் நூல் நிலையங்களில் தேடுவார்கள், சிலர் புத்தகங்களில் தேடிக் கண்டுபிடிப்பார்கள்.

ஆனால் உடனடியாக நமக்கு அந்தச் செய்தியைத் தர வேண்டும் என்று சொன்னால் தமிழ்தாசன் அவர்களைத் தொடர்பு கொண்டால் உடனடியாக அந்தச் செய்தி நமக்கு கிடைத்துவிடும். அந்த அளவிற்கு எல்லாச் செய்திகளையும் குறிப்பெடுத்து, அதை ஒரு கோப்பாக, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் மனதளவில் வைத்துக் கொண்டிருக்கும் அளவில் அதை சேகரித்து கொண்டு இருக்கக் கூடியவர் நமது தமிழ்தாசன் அவர்கள்.

அவரைத் தமிழ்தாசன் என்று அழைக்கிறோம். தமிழுக்கு மட்டுமல்ல, கலைஞருடைய தாசனாகவும் அவர் விளங்கினார். இன்றைக்கு நம்முடைய அனைவருடைய தாசனாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறார். அந்த அளவிற்கு நன்மதிப்பைப் பெற்றவராக நம்முடைய தமிழ்தாசன் அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

"ஆட்சியில் இல்லாமலேயே இவ்வளவு பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்" - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இன்னும் நான் பெருமையாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் தலைவர் கலைஞர் அவர்களுக்கு கூட சில செய்திகளை அவ்வப்போது கொண்டுவந்து கொடுப்பார்கள்.

பத்திரிகைகளில் தலைவரைப் பற்றியும், கழகத்தைப் பற்றியும் ஏதாவது எதிர்ப்பான செய்திகள் - விமர்சனங்கள் வந்து விட்டால் அவருக்குப் பொறுக்காது. உடனடியாக அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்று எப்போதும் கோபாலபுரம் தலைவர் வீட்டில் காலையில் உட்கார்ந்து இருப்பார். நம்முடைய சண்முகநாதன் அவர்களும் ராஜமாணிக்கம் அவர்களும் இங்கே வந்திருக்கிறார்கள்; அந்தக் குறிப்புகளை அவர்களிடம் படித்துக் காண்பித்துக் கொண்டிருப்பார்.

அந்த அளவிற்கு ஆர்வத்தோடு பணியாற்றக் கூடியவர் நம்முடைய தமிழ்தாசன் அவர்கள். எனவே, இந்த நேரத்தில் உங்களை எல்லாம் பல பணிகள் இருக்கிறது என்று பாரதி அவர்களும் பாலு அவர்களும் குறிப்பிட்டார்கள். வேறு எந்தப் பணிகளும் இல்லை, தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதைத்தான் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

தமிழ்தாசனின் இல்லத்தில் அரசியலைப் பற்றி பேசாமல் சென்று விட்டால் உங்களுக்குக் கோபம் வருகிறதோ, இல்லையோ, அவருக்குக் கோபம் வந்து விடும். அதனால் சிறிது நேரம் பேசிவிட்டுத்தான் போக வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்திருக்கிறேன்.

நேற்றைய தினம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தை ஜனவரி 25-ஆம் தேதி தான் நடத்த வேண்டும். ஆனால் ஜனவரி 25-ஆம் தேதி பேசாமல் நேற்றைக்கு திருவொற்றியூர் பகுதியில் நடத்திப் பேசி இருக்கிறார்கள்.

துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், கிராமசபைக் கூட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் நடத்திக்கொண்டிருக்கிறார். கிராமசபைக் கூட்டத்தை அரசாங்கம் தான் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அரசாங்கம் நடத்தவில்லை என்பதற்காகத்தான் நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். அது தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். நியாயமாக கிராமசபைக் கூட்டத்தை அரசின் சார்பில்தான் நடத்த வேண்டும். நான் அதை மறுக்கவில்லை.

ஆண்டுக்கு 4 முறை நடத்த வேண்டும். காந்தி ஜெயந்தி அன்று, சுதந்திர தினம் அன்று, குடியரசு தினம் அன்று, உழைப்பாளர் தினம் அன்று நடத்த வேண்டும். இதுதான் மரபு.

அரசின் சார்பில்; கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, கலைஞர் முதலமைச்சராக இருந்த போது அப்படித்தான் நடத்தப்பட்டது. ஆனால், இந்த ஆட்சியில் இந்த 10 ஆண்டு காலத்தில் அந்த முறை கடைபிடிக்கப்படவில்லை.

அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கிராமசபைக் கூட்டத்தில் நடத்துவோம் என்று அறிவித்தவுடன் அதை நடத்தக் கூடாது என்று தடை போட்டார்கள்.

என்ன தடை போட்டாலும் அந்த தடை பற்றி தி.மு.க என்றைக்கும் கவலைப்படாது என்பதைச்சொல்லி, அதே நேரத்தில் அதை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்பதற்காக ‘மக்கள் கிராம சபை’ என்று பெயரை மாற்றி, அதைத் தமிழ்நாடு முழுவதும் நடத்தியிருக்கிறோம்.

இது ஏதோ புதிதல்ல. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஊராட்சி சபைக் கூட்டத்தை நாம் தமிழ்நாடு முழுவதும் நாம் நடத்தியிருக்கிறோம். இந்தியாவில் எந்தக் கட்சியும் செய்யாததை நாம் செய்து காட்டியிருக்கிறோம். இன்றைக்கு அரசாங்கம் இருக்கிறது என்று சொல்ல முடியாத நிலை.

திராவிட முன்னேற்றக் கழகம் 10 ஆண்டுக் காலமாக எதிர்க்கட்சியாகத்தான் இருக்கிறது. நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் விரைவில் நாம்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள்.

ஆனால் நாம் ஆட்சிக்கு வந்துவிட்டோம். நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம். ஏன் என்றால் நாம் சொல்வது தான் நடந்துகொண்டிருக்கிறது.

கொரோனா வரும் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நாம் சொன்னோம். அப்போது சட்டமன்றத்தில் கேலி செய்தார்கள் - கொச்சைப்படுத்தி பேசினார்கள் - விமர்சனம் செய்தார்கள். அதற்குப் பிறகு இப்போது என்ன நிலைமை என்பது உங்களுக்குத் தெரியும்.

அதே போல பாதிக்கப்பட்ட மக்களுக்கு - வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் மக்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் தர வேண்டும் என்று அறிக்கை விட்டோம். 1,000 ரூபாய் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு பொங்கலுக்கு 2,500 ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள்.

நாம் சொன்னதை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதே போல நான்கைந்து நாட்களாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் நான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு ஆசிரியர் ஒரு கோரிக்கை வைத்தார். எங்கள் மீது பொய் வழக்குப் போட்டிருக்கிறார்கள். அதையெல்லாம் நீங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் பேசினார். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் விரைவில் நிச்சயமாக உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று மாலை 4 மணிக்கு சொன்னேன். மாலை 6 மணிக்கு அரசு உத்தரவு போட்டு விட்டது.

"ஆட்சியில் இல்லாமலேயே இவ்வளவு பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்" - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அதேபோல ஆரணி தொகுதியில் எழிலரசி என்ற ஒரு சகோதரி அவர் சிலிண்டர் வெடித்து, அவர் வீடு எரிந்து அவருடைய தாயார் அந்த தீ விபத்தில் இறந்துவிட்டதாகச் சொன்னார். அந்தச் சகோதரி பேசும்போது, “ஆதரவற்று இருக்கிறேன். விபத்து நடந்து 2 மாதங்கள் ஆகிறது. நிதி வரும் - நிதி வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார். நிதி வரவில்லை, பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களுக்குள் செய்து கொடுக்க வேண்டும் என்று சொன்னார். “உங்கள் பிரச்சினைக்கு 2 நாட்களில் தீர்வு காணப்படும்” என்று அப்போது சொன்னேன். இது மாலை 5 மணிக்கு நடந்தது. இரவு 8 மணிக்கு அந்த பெண்ணின் வங்கிக்கணக்கில் 2 லட்சம் ரூபாயை அரசு செலுத்தி விட்டது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆட்சியில் இல்லாமலேயே இவ்வளவு பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். ஆட்சிக்கு வந்தால் இன்னும் என்னென்ன பணிகள் செய்வோம் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அதைத்தான் நம்முடைய தமிழ்தாசன் இல்லத்தில் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் கேட்டுக்கொண்டு, தமிழ்தாசன் அவர்கள் ஒரு நல்ல செயல் வீரராக மட்டுமல்லாமல் - ஒரு எழுத்தாளராக - கழகப் பேச்சாளராக - சில நேரங்களில் தொலைக்காட்சி விவாத மேடைகளில் பங்கேற்று வாதம் செய்கிறார். அந்த விவாதங்களை நானும் பார்த்திருக்கிறேன்.

எனவே கொள்கைகளில் – லட்சியங்களில் ஒரு குறிக்கோளோடு ஒரு சிறந்த செயல் வீரராக விளங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைச் சொல்லி அவர் இன்னும் பல சிறப்புகளைப் பெற வேண்டும்.

அதேபோல் இன்றைக்கு அவருடைய வீட்டு செல்வங்கள் மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொன்னதைப் போல், ‘வீட்டிற்கு விளக்காய் - நாட்டிற்கு தொண்டர்களாய்‘ வாழுங்கள்… வாழுங்கள்… வாழுங்கள்… என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories