மு.க.ஸ்டாலின்

தமிழக மக்களிடம் அதிமுகவின் ஊழல்களை, பாஜக அரசின் பச்சை துரோகங்களை பட்டியலிடுங்கள் - மு.க.ஸ்டாலின் அறிவுரை!

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு வாக்காளரையும் திமுகவினர் சந்தித்து, அதிமுக அரசின் ஊழல்களை தோல்விகளை பாஜக தமிழகத்திற்குச் செய்துள்ள பச்சைத் துரோகத்தைப் பட்டியலிடுங்கள் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக மக்களிடம் அதிமுகவின் ஊழல்களை, பாஜக அரசின் பச்சை துரோகங்களை பட்டியலிடுங்கள் - மு.க.ஸ்டாலின் அறிவுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்று (15-12-2020), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரி அரங்கில் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற கழக முன்னோடிகள் படத்திறப்பு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு, மறைந்த - நாகை முருகேசன், மேரி லூர்துசாமி, மடுவை அ.துரை, கே.எஸ்.ரூஸோ ஆகியோரின் திருவுருவப் படங்களைத் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“திராவிட முன்னேற்றக் கழகம் - உழைக்கும் தொண்டர்களுக்கு வணக்கம் செலுத்தும் இயக்கம்! பொது நலனுக்காகப் போர்ப்பரணி பாடும் தொண்டர்களுக்கு வாழ்த்துச் சொல்லும் இயக்கம்! மக்கள் பணியாற்றுவோருக்கு மகுடம் சூட்டி மகிழ்ச்சியடையும் இயக்கம்! கழகப் பணியாற்றுவோருக்குக் கைகூப்பி நன்றி சொல்லும் இயக்கம்!

அந்த உணர்வோடு - அன்போடு – பாசத்தோடுதான் இயக்கப் பணியாற்றி - இயற்கை எய்தியவர்களுக்கு நாம் படத்திறப்பு விழாக்களை நடத்துகிறோம். அவர்கள் இந்த இயக்கத்தின் மீது காட்டிய பாசத்திற்கு நாம் பதிலுக்குப் பாசத்தைக் காட்டுகிறோம்; மரியாதை செலுத்துகிறோம். அவர்களின் பண்புகளை - மாண்புகளைப் புகழ்ந்து பேசுகிறோம். அதனால்தான் இந்த இயக்கம் இன்றுவரை மக்களின் நம்பிக்கையைப் பெற்ற இயக்கமாக இருக்கிறது. எத்தனை பொய் பிரச்சாரங்கள் - எவ்வளவு பழிச்சொற்கள் வந்தாலும் இந்த இயக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.

கொரோனா காலத்தில் - நான் உங்களைக் காணொலியிலும் சந்தித்தேன்; நேரிலும் சந்தித்தேன். அமைச்சர்களும், முதலமைச்சரும் கோட்டைக்குள்ளும், வீட்டிற்குள்ளும் முடங்கிக் கிடந்த போது முதன்முதலில் களத்திற்குச் சென்று பணியாற்றியது இந்த அடியேன்தான்! அரசாங்கமே தூங்கிக் கொண்டிருந்தபோது - கொரோனா அச்சத்தில் முடங்கிக் கிடந்த போது “ஒன்றிணைவோம் வா” என்று கூறி - ஊர் ஊராக - வார்டு வார்டாக - மாவட்டம் மாவட்டமாகச் சென்றது கழகத் தொண்டர்களாகிய நீங்கள்தான்!

கொரோனா காலத்தில் – கழகத்தினர் செய்த மருத்துவ உதவிகளை - உணவு விநியோகத்தை - அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்ததை இந்தியாவில் எந்தக் கட்சியும் செய்திருக்க முடியாது. அந்த அளவிற்கு கொரோனா காலத்திலும் மக்களுக்கு நேரடியாகப் பணியாற்றிய கட்சி தி.மு.க.! உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் - தமிழகத்தின் மக்கள்தான் எங்களுக்கு உயிர் என்று பணியாற்றியவர்கள் கழக உடன்பிறப்புகள்!

இதனால் ஒரு கழக சட்டமன்ற உறுப்பினரை - சென்னை மாநகரத்தின் தளபதி போல் செயல்பட்ட தி.நகர் அன்பழகனை நாம் இழந்தோம். அப்படி மக்கள் பணியிலும், கழகப் பணியிலும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு இன்று படத்திறப்பு விழா. நாகை முருகேசன் - நாகை மாவட்டத்தில் பிறந்தவர்; இளம் வயதிலிருந்து கழகப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்; கழகத்தில் மாநில தொண்டரணிச் செயலாளராக - சிறப்பாகச் செயல்பட்டவர்.

மேரி லூர்துசாமி - “கழகத்தின் காரைக்கால் அம்மையார்” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவர். சைதைப் பகுதி மகளிரணி அமைப்பாளராக விளங்கியவர். 2011-ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுக் காலம் சென்னை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றவர்.

மடுவை அ.துரை அவர்கள் சைதை தொகுதியில் மடுவன்கரை பகுதியில் வாழ்ந்தவர். ஒருங்கிணைந்த சைதைப் பகுதிச் செயலாளராக, சைதை கிழக்குப் பகுதியின் அவைத் தலைவராக இருந்தவர். பழகுவதற்கு இனிமையானவர். பாசத்தைப் பொழியும் அவர் கழக தொண்டர்களிடம் பாப்புலரானவர். தேனாம்பேட்டை அரிமா சங்கத் தலைவராக இருந்து சிறப்பான பணி செய்தவர்.

கே.எஸ்.ரூசோ சைதை பகுதியில் 140-ஆவது வட்டத்தில் தொடர்ந்து இரு முறை வட்டச் செயலாளர். நான் மேயராக இருந்த போது – என்னுடன் இரு முறை மாநகர மன்ற உறுப்பினராகச் செயல்பட்ட இவர், இளம் வயதிலிருந்து கழகத்தில் தீவிரப் பணியாற்றியவர். இந்த நால்வரின் படத்தைத் திறந்து வைத்து - இன்றைக்கு அவர்களுக்கும் - அவர்கள் ஆற்றிய கழகப் பணிகளுக்கும் பெருமைப்படுத்தியிருக்கிறோம்!

இன்றைக்கு என்ன மாதிரியான ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது? கொள்ளையடிக்கின்ற ஆட்சி! அதாவது அரசு பணத்தைக் கொள்ளையடிக்கின்ற ஆட்சி நடைபெறுகிறது. அமைச்சர்கள் மட்டுமல்ல; அவர்களுக்கு எல்லாம் தலைவராக இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி என அனைவருமே அரசு பணத்தைச் சுருட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். தினமும் முதலீடு…..முதலீடு என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் வந்த முதலீடுகள் எவ்வளவு என்று கேட்டால் இதுவரை கணக்குச் சொல்ல முடியவில்லை?

எத்தனை புதிய தொழிற்சாலைகள் என்று கேட்டால், விவரமே தெரியவில்லை. எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டால், அதற்கும் பதில் இல்லை. முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தோல்வி. இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு தோல்வி. முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முதலீடுகளைப் பெறுவதற்காக போன வெளிநாட்டுப் பயணம் தோல்வி.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டார்கள் தொழிலதிபர்கள். ஆனால் அப்படிப் போட்டவர்கள், இவர்கள் கமிஷன் கேட்பதைப் புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால் உண்மையான தொழிலதிபர்கள் - உள்ளபடியே தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் பல தொழிலதிபர்கள் வெளி மாநிலங்களுக்குப் போனார்கள். தமிழகத்தின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. ஆகவே தொழிலதிபர்களைத் தொழில் தொடங்க விடாமல் விரட்டிய ஆட்சி எடப்பாடி பழனிசாமி ஆட்சி.

தமிழக மக்களிடம் அதிமுகவின் ஊழல்களை, பாஜக அரசின் பச்சை துரோகங்களை பட்டியலிடுங்கள் - மு.க.ஸ்டாலின் அறிவுரை!

இன்றைக்கு நாடே விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிக் கொண்டிருக்கிறது. டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலேயே டிராக்டர்களுடன் மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இப்போது கூட வருகின்ற 18-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும், நானும், நமது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம்.

எதற்காக? நம் நாட்டின் விவசாயிகளைக் காப்பாற்றவே நாம் இந்த அளவிற்கு ஜனநாயக ரீதியில் போராடிக் கொண்டிருக்கிறோம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றப் போராடுகிறோம். விவசாயிகளின் விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க வேண்டும் என்று போராடுகிறோம். விவசாயிகளின் இலவச மின்சாரம் தொடர வேண்டும் என்று போராடுகிறோம். விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்று போராடுகிறோம்.

ஆகவே தயவு செய்து விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள் என்று கோரிக்கை வைக்கிறோம். மின்சாரத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வராதீர்கள் என்று கோரிக்கை விடுக்கிறோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி என்ன செய்கிறார்? விவசாயிகளைத் தீவிரவாதிகள் என்று கூறிய பா.ஜ.க.வை ஆதரிக்கிறார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார். விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய விரும்பும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து நிற்கிறார்.

இவற்றுக்கெல்லாம் ஒரே காரணம் - எடப்பாடி பழனிசாமியின் ஊழல்! அவர் இந்த நான்கு ஆண்டுகளில் முதலமைச்சராகவும், அதற்கு முன்பு அமைச்சராகவும் சம்பாதித்த ஊழல் பணம். பா.ஜ.க.வை முறைத்தால், எந்த நேரத்தில் வருமான வரித்துறை ரெய்டு வரும், எந்த நேரத்தில் அமலாக்கத்துறை ரெய்டு வரும், எந்த நேரத்தில் சி.பி.ஐ. வழக்கு வரும் என்று தெரியாது. ஆகவே அரண்டு மிரண்டு தமிழகத்தின் உரிமைகளை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகளின் உரிமைகளை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இதுபோன்ற அ.தி.மு.க. அரசின் துரோகங்களை - அமைச்சர்களின் ஊழல்களைக் களத்திற்குக் கொண்டு போகும் காளையர்கள்தான் கழக நிர்வாகிகள் - கழகத் தொண்டர்கள். அந்த நம்பிக்கையில்தான், இன்றைக்கு அ.தி.மு.க.வின் ஊழலை ஊரெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம். சட்டமன்றத் தேர்தல் சிறப்புக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு கூட்டத்திலும் ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்களை மட்டுமல்ல - மக்களையும் சந்தித்து வருகிறேன். நேற்றைய தினம் செய்தியைப் பார்த்திருப்பீர்கள். கழகத்தின் “தமிழகம் மீட்போம்” என்ற தேர்தல் சிறப்புக் கூட்டத்தை ஒரு கோடிப் பேர் பார்த்திருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் - தி.மு.க.வுடன் சேர்ந்து தமிழகத்தை மீட்க மக்கள் தயாராகி விட்டார்கள். அந்தப் பணியில் நான் தொடர்ந்து அயராது உழைக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் நாம் பார்க்க வேண்டும். அ.தி.மு.க. அரசின் ஊழல்களை – எடப்பாடி பழனிசாமி அவர்களின் தோல்விகளை - பா.ஜ.க. தமிழகத்திற்குச் செய்துள்ள பச்சைத் துரோகத்தைப் பட்டியலிடுங்கள்! ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு வேலை கிடைக்க, ஒவ்வொரு வீட்டிலும் வருமானம் பெருக, ஒவ்வொரு மாவட்டமும் தொழில் வளர்ச்சியில் ஒன்றையொன்று மிஞ்சிச் செல்ல - அ.தி.மு.க. ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவோம். நம் தமிழகத்தை மீட்போம்! தயாராவீர்! தயாராவீர்!!”

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories