மு.க.ஸ்டாலின்

“பழனிசாமி என்றால் ஊழல் பெருச்சாளி! எடப்பாடி அரசு வரலாற்றுக் களங்கம்!” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

“எடப்பாடி பழனிசாமி தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் ஊழலில் சிக்கிய அ.தி.மு.க அரசு, தமிழக அரசியலில் ‘வரலாற்றுக் களங்கம்!’” என 'தமிழகம் மீட்போம்' கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“பழனிசாமி என்றால் ஊழல் பெருச்சாளி! எடப்பாடி அரசு வரலாற்றுக் களங்கம்!” - மு.க.ஸ்டாலின் விளாசல்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"பா.ஜ.க முதலமைச்சர்கள் கூட முதலமைச்சர் பழனிசாமி அளவுக்கு வேளாண் சட்டங்களை ஆதரிக்கவில்லை. மூன்று வேளாண் சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர் போல உளறும் அவர், டெல்லி சென்று போராடும் விவசாயிகளிடம் விளக்கம் அளிப்பாரா?” என இராமநாதபுரம் 'தமிழகம் மீட்போம்' கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (12-12-2020) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இராமநாதபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“பகையெனில் கூற்றம் வரினும் தொலையான்” என்று கலித்தொகை நூல் சொல்வதற்கு இலக்கணமாக, எந்தப் பகையையும் எதிர்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த மக்கள் வாழும் மண் இந்த இராமநாதபுரம் மண்!

பத்தாம் நூற்றாண்டில் சோழர்கள் பெரும் பேரரசாக நிலை கொள்வதற்கும், பதிமூன்றாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் ஏற்றம் பெறுவதற்கும் அரசப்படையில் நின்றவர்கள் இந்த இராமநாதபுரம் மண்ணைச் சேர்ந்தவர்கள். புனித சேது காவலன் என்று புகழப்பட்ட சேது மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கும் இறையியல் வளர்ச்சிக்கும் ஆற்றிய தொண்டு காலத்தால் அழிக்க முடியாதது; மறக்க முடியாதது.

இந்த மண்ணைக் காக்கும் பெரும் போரில் பன்னிரண்டே வயதான இராமநாதபுரம் சேதுபதி மன்னர் ஈடுபட்ட காட்சிகள் இன்று படித்தாலும் இரத்தம் உறைய வைப்பவை. தன்னாட்சி பெற்ற நாடாக இருந்த இந்த சேதுச்சீமையின் உரிமையைப் பறித்தவர்களையும், தன்னை திருச்சி சிறையில் அடைத்தவர்களையும் பழிவாங்க சேதுமன்னர் திட்டமிட்டார். சிறையில் இருந்தபடியே மக்களை எழுச்சி பெற வைத்தார். மன்னரின் கட்டளையை மனதில் கொண்டு ஒரு பெரும் போரையே மக்கள் நடத்தினார்கள். ஒரு நாளல்ல, 42 நாட்கள் விடாமல் அந்தப் பெரும் போரைச் செய்தார்கள்.

திருச்சியில் இருந்தால் அவரை ஒவ்வொருவராக வந்து பார்க்கிறார்கள் என்பதால் சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு இழுத்து வந்து தனிமைச் சிறையில் அடைத்தது பிரிட்டிஷ் அரசு. பதினான்கு ஆண்டு காலம் தனிமைச் சிறையில் இருந்து சிறையிலேயே மரணம் அடைந்தார் அவர். எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் வாழ்நாள் முழுக்க சிறையில் அடைத்துக் கொல்லப்பட்டார் சேது மன்னர்.

இத்தகைய சேதுபதி மன்னரைப் பெருமைப்படுத்தும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்கு சேதுபதி நகர் என்று பெயர் சூட்டியவர் முதல்வர் கலைஞர்!

ஒளி ஏற்றுவதற்கு ஒரே ஒரு துளி நெருப்பு தேவை. தென் பாண்டி மண்டலத்தில் விடுதலை நெருப்பை பரப்ப, முத்துராமலிங்க சேதுபதி மன்னர் அக்னியாகப் பயன்பட்டார். அத்தகைய மண்ணில் இன்றைய தினம் தமிழகம் மீட்பதற்காக நாம் கூடியிருக்கிறோம்.

அத்தகைய மண்ணில் சிறுகதை மன்னர் என்று போற்றப்பட்ட எஸ்.எஸ். தென்னரசு, முன்னாள் அமைச்சர் செ.மாதவன், மாங்குடி மதியழகன், முதுகுளத்தூர் மலைக்கண்ணன், இராமநாதபுரம் சா.மாரிமுத்து, முதுகுளத்தூர் முத்துராமன், கருமலையான், இளஞ்செழியன், செபஸ்தியான், பரமக்குடி அரவரசன், மண்டபம் அப்துல்காதர், இராமநாதபுரம் சேக் சுல்தான், ராமேஸ்வரம் மாரிமுத்து, முதுகுளத்தூர் நடராஜன், காதர்பாட்சா என்ற வெள்ளச்சாமி, பாசமிகு சத்தியேந்திரன், அவரது சகோதரர் ராஜேந்திரன் - இப்படி எத்தனையோ தியாகிகளால் எழுப்பப்பட்டது தான் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தின் திராவிட முன்னேற்றக் கழகம். இவர்களைப் போலவே வீரத்துடனும் தீரத்துடனும் தியாகத்துடனும் இன்றும் பலர் உழைத்து வருகிறீர்கள்.

இராமநாதபுரம் மாவட்டத்தை காதர்பாட்சா முத்துராமலிங்கமும் அவரோடு இணைந்த அனைத்து நிர்வாகிகளும் வளர்த்து வருகிறீர்கள். உங்கள் மண்ணுக்கே உரிய மகத்துவத்துடன் கழகத்தை வளர்த்து வருகிறீர்கள். இது, இதுவரை இல்லாத அளவுக்கு மிக முக்கியமான காலக்கட்டம் என்பதை நான் உங்களுக்கு உணர்த்த தேவையில்லை.

ஒரே இலக்குதான்; கழகத்தின் வெற்றி! உதயசூரியன் வெற்றி! தமிழ்நாட்டில் திறக்கப்படுகின்ற ஒவ்வொரு வாக்குப் பெட்டியிலும் உதயசூரியன் மட்டும் தான் உதிக்கவேண்டும். இது ஒன்று தான் இலக்கு.

யார் வேட்பாளர்? உதயசூரியன் தான் வேட்பாளர்! யார் வேட்பாளர்? தலைவர் கலைஞர் தான் வேட்பாளர்! - இந்த ஒற்றைச் சிந்தனையுடன் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டன் களம் கண்டால் எதிரில் எவர் வந்தாலும் வெற்றி நமக்குத்தான்!

கொள்ளையடித்து வைத்திருக்கும் பணத்தை வைத்து, அதனை மக்களுக்கு விதைத்து கோட்டையைப் பிடித்துவிடலாம் என்று எடப்பாடி கும்பல் பேராசையோடு காத்திருக்கிறது. அவர்களது அந்த ஆசை நிறைவேறாமல் தடுக்க வேண்டியது ஒன்றே கழகத் தொண்டனின் பணி என்பதை நீங்கள் யாரும் மறந்துவிடாதீர்கள்!

உலகம் முழுவதும் சுவாமி விவேகானந்தரின் புகழ் பரவக் காரணம், இராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மன்னர் தான்! இதனை விவேகானந்தரே சொல்லி இருக்கிறார். யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் மார்க்கமாக வந்த விவேகானந்தர், பாம்பனில்தான் வந்து இறங்கினார். “மேன்மை தங்கிய இராமநாதபுரம் மன்னர் என்னிடம் கொண்டிருக்கும் அன்புக்கு வார்த்தைகள் மூலம் நன்றி சொல்வது முடியாத காரியம். என்னாலும் என் வாயிலாகவும் ஏதாவது நற்காரியம் செய்யப்பட்டு இருக்குமானால் அது இந்த மனிதரால் தான். இந்தியா இந்த மனிதருக்குக் கடமைப்பட்டு இருக்கிறது. நான் சிகாகோ சர்வ சமயப் பேரவைக்கு போக வேண்டும் என்று நினைத்தவரே இவர் தான்” என்று பாராட்டினார். அத்தகைய பாஸ்கர சேதுபதியின் மண்ணில் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைக்கு சிலர் ஆன்மீகத்தைக் காரணம் காட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தலாம் என்று நினைக்கிறார்கள். மக்களுக்கு சேவை ஆற்றுவது தான் மகத்தான ஆன்மீகம் என்று சுவாமி விவேகானந்தர், இதே இராமேஸ்வரம் கோவிலில் 1897-ஆம் ஆண்டு பேசும்போது சொன்னார். மனத்தூய்மை, பிறருக்கு நன்மை செய்வது - இதுவே எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகள், பலவீனமானவர்கள், நோயுற்றவர்களைக் காப்பவனே உண்மையில் இறைவனை வழிபடுகிறவன் என்று சொன்னார் அவர்.

எளிமையான கதை ஒன்றை அவர் அப்போது சொல்லி இருக்கிறார். ஒரு எஜமானுக்கு ஒரு தோட்டம் இருந்ததாம். அதற்கு இரண்டு தோட்டக்காரர்கள் இருந்தார்களாம். ஒரு தோட்டக்காரன், அந்த எஜமானனைப் புகழ்வதிலும் அவர் முன்னால் நடிப்பதிலும் ஆர்வம் காட்டுபவராக இருக்கிறான். இன்னொரு தோட்டக்காரன், அந்த தோட்டத்தை கவனிப்பதில் ஆர்வம் செலுத்தினான். பழங்கள், காய்கறிகளை உற்பத்தி செய்தான். அந்த எஜமான் உயர்வுக்காக நாளும் உழைத்தான்.

எஜமானுக்கு யாரைப் பிடிக்கும்? தன் முன்னால் நடிப்பவரையா? தனக்கு உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து தருபவரையா?

இந்தக் கதையைச் சொல்லிவிட்டு, “ஆண்டவன் தான் எஜமான், அவனது தோட்டம் தான் இந்த உலகம். எந்த தோட்டக்காரனை ஆண்டவனுக்கு பிடிக்கும்?" என்று கேட்டார் விவேகானந்தர்.

இங்கே சிலர் வெறுமனே நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். நாம் தான் மக்களுக்கு நன்மைகள் செய்து கொண்டு இருக்கிறோம். இதைத் தான் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் பேரறிஞர் அண்ணா! ஏழைகள் சிரிக்க உருவாக்கப்பட்ட கட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

ஏழைகள் சிரிக்க, ஒடுக்கப்பட்டோர் உயர்வு பெற, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏற்றம் பெற, பட்டியலின மக்கள் பதவிகள் பெற, சிறுபான்மையின மக்கள் சிறப்புப் பெற நடத்தப்பட்ட ஆட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி!

ஒரு காலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே ‘தண்ணி இல்லாத காடு’ என்று சொல்வார்கள். அரசாங்கத்திலேயே ஊழியரை மிரட்ட, ‘இராமநாதபுரத்துக்கு மாத்திடுவேன்’ என்று சொல்வார்கள். அந்த நிலைமையை மாற்றிய அரசு தான் தி.மு.க. அரசு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிதண்ணீர் இன்றி தவித்த மக்களுக்கு 616 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டது கழக ஆட்சியில் தான். எனக்கு என்ன பெருமை என்றால் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எனக்கு வழங்கினார்கள்.

இத்திட்டத்தைச் செயல்படுத்த மூன்று ஆண்டுகள் தேவைப்படும் என்று அதிகாரிகள் அப்போது சொன்னார்கள். குடிநீர்ப் பிரச்சினை என்பதால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்க நான் உத்தரவிட்டேன்.

மூன்று ஆண்டுகளுக்குள் திட்டத்தை முடிக்கவேண்டும் என்பதை இரண்டு ஆண்டுகளுக்குள் முடித்து பொதுமக்களின் குடிநீர் தேவையைத் தணித்த ஆட்சி தி.மு.க. ஆட்சி! இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக மாதத்திற்கு மூன்று முறையாவது இராமநாதபுரத்திற்கு வந்து நான் ஆய்வு நடத்திய நாட்களை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்!

இராமநாதபுரம் மாவட்டத்தின் விவசாய வளர்ச்சிக்காக பார்த்திபனூரில் மதகு அணை கட்டப்பட்டது கழக ஆட்சியில் தான். கண்மாய், ஊரணிகள் முழுமையாக தூர் வாரி வரத்துக் கால்வாய் அமைத்து, அதன் மூலம் தற்போது விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர் என்ற செய்தியைக் கேள்விப்படும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது!

கடலாடி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் சுப.தங்கவேலன் அவர்கள் சட்டமன்றத்தில் ஒரு கோரிக்கையை வைத்தார்கள். இராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம சாலைகள் மட்டுமே உள்ளது. நெடுஞ்சாலை இல்லை எனத் தெரிவித்தார்கள். உடனே முதல்வர் கலைஞர் 500 கிலோ மீட்டர் கிராம சாலையை நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் மாபெரும் திட்டத்தை வகுத்துத் தந்து செயல்படுத்தினார்கள்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தேவிபட்டினம் செல்லும் பகுதியில் அண்ணா அரசு பொறியியல் கல்லூரியை முதலமைச்சர் கலைஞர் அமைத்தார். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்ததுடன், ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தி மருத்துவமனையாக மாற்றியதால் இன்றளவும் பொதுமக்கள் முறையான மருத்துவ சிகிச்சையைப் பெற்றுவருகின்றனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஏழை - எளிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல கோடி மதிப்பீட்டில் இராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், தொண்டி, சாயல்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 5 ஆயிரம் சுனாமி குடியிருப்புகள் கழக ஆட்சியில் கட்டி வழங்கப்பட்டது. இதனால் மீனவர்கள் கான்கிரீட் வீடுகளில் குடியேறினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டன. இராமநாதபுரம் – கீழக்கரை இடையே, தாவரவியல் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், பொழுதுபோக்கும் வகையிலும் பல கோடி மதிப்பீட்டில் பாலைவன பூங்கா அமைக்கப்பட்டது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!

அடுத்து தி.மு.க ஆட்சி அமையும் போது என்னென்ன திட்டங்களை இந்த மாவட்ட மக்களின் நன்மைக்காக செயல்படுத்துவது என்பதை இப்போதே திட்டமிடவும் தொடங்கி இருக்கிறோம்.

ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் கமிஷனுக்காக மட்டுமே பணிகள் நடைபெறுகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இராமநாதபுரம் மாவட்டம், மூக்கையூர் பகுதியில் 138 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட படகுகளை நிறுத்தலாம் என்றனர். ஆனால் பாதுகாப்பற்ற துறைமுகமாக உள்ளது என்று சொல்லி மீனவர்களே அதனை பயன்படுத்தாமல் உள்ளனர். அது பயனற்ற துறைமுகமாக உள்ளதாக மீனவர்கள் சொல்கிறார்கள். இதுதான் இந்த ஆட்சியின் லட்சணம். ஒரு திட்டம் போடும் போது மீனவர்களிடம் கலந்தாலோசனை செய்து அவர்களது தேவைக்கு ஏற்ப திட்டத்தைச் செயல்படுத்தி இருக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சி அதைச் செய்யவில்லை.

இதே போன்று 72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாம்பன் குந்துகால் துறைமுகம் மீதும் மீனவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள். படகுகளைப் பாதுகாப்புடன் நிறுத்த வேண்டும் என்றால் தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்க வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கை. ஆனால் அதை தமிழக அரசு செய்யாமல் கமிஷனுக்காக மட்டுமே இந்த துறைமுகங்கள் கட்டப்பட்டுள்ளதாக மீனவர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். சரியான திட்டமிடுதல்கள் இல்லாமல் கமிஷனுக்காக மட்டுமே பணிகள் நடைபெறுவதாக மீனவர்கள் சொல்கிறார்கள்.

“பழனிசாமி என்றால் ஊழல் பெருச்சாளி! எடப்பாடி அரசு வரலாற்றுக் களங்கம்!” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

இராமநாதபுரம் மாவட்டத்தில், 40 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு சொல்கிறது. ஆனால் மாவட்டத்தில் உள்ள 1,632 கண்மாய்கள், 3,987 ஊரணிகள் தூர் வாரவில்லை, மேலும் வரத்துக் கால்வாய்களைத் தூர் வாரப்படாததால் வடகிழக்குப் பருவமழை, புயல் காணரமாக பெய்த கனமழையால் 10 கண்மாய்கள் மட்டுமே நிரம்பி உள்ளன.

மாவட்டத்தில் 133 வீடுகள் சேதமடைந்துள்ளன. பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 61 படகுகள் சேதமடைந்துள்ளன. இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்துள்ளனர். 51 ஆடுகள் உயிரிழந்துள்ளன. பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மற்றும் சிறுதானிய பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஆனால் இன்று வரையில் இந்த அரசு முறையாகக் கணக்கெடுப்பும் செய்யவில்லை, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இழப்பீடு வழங்கிடும் முயற்சியும் செய்யவில்லை. சேதமடைந்த படகுகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்குவதில் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக மீனவர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். எந்தவிதமான துரிதமான பணிகளையும் செய்யாத அரசு இந்த அரசு. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்குவது தானே நிவாரணமாக இருக்க முடியும்? காலதாமதம் செய்து வழங்குவது எப்படி நிவாரணமாக இருக்க முடியும்?

இப்படி இந்த ஆட்சி, மக்களை ஏமாற்றும் ஆட்சி; மக்களை ஏய்க்கும் ஆட்சி; மக்களைச் சுரண்டும் ஆட்சி; மக்களை வெறுக்கும் ஆட்சி; விவசாயிகளை வேரோடு பிடுங்கி எறியும் ஆட்சி.

இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் ஆனவர் அல்ல. மறுபடியும் தனக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். அதனால்தான் இருக்கும் சில மாதங்களிலும் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடும் மனநிலையில் மளமளவென்று ஊழல் செய்து குவித்துக் கொண்டு இருக்கிறார். ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்கப் போவதாக எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார். ஜெயலலிதா ஆட்சி என்பது என்ன? நான்காண்டு சிறை, 100 கோடி ரூபாய் அபராதம்! இதுதான் ஜெயலலிதா ஆட்சி!

தினமும் ஊர் ஊராகப் போய் அரசாங்க விழாக்களில் கலந்து கொண்டு அரசியல் பேசி வருகிறார் பழனிசாமி. அவருக்கு அரசுக்கும் கட்சிக்குமே வித்தியாசம் தெரியவில்லை!

தன்னை ஏதோ மகா யோக்கியரைப் போல எடப்பாடி பழனிசாமி காட்டிக் கொண்டு வருகிறார். நான் ஒரு விவசாயி, எனக்கு விவசாயத்தைத் தவிர வேறு வருமானம் கிடையாது என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார் பழனிசாமி. இதனை நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள் என்பது வேறு விஷயம். அ.தி.மு.க.வினரே இதைக் கேட்டால் சிரிப்பார்கள். கொள்ளையடிப்பது எப்படி என்று புத்தகம் எழுதுவதற்குத் தகுதி வாய்ந்த ஒரு ஆள் எடப்பாடி பழனிசாமி தான். ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசாங்கம் எது என்று கேட்டால், அது எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம் தான்!

இவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டுவிட்டது. அது முறையாக நடந்திருந்தால் பழனிசாமி, இப்போது தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு மத்திய சிறையில் இருந்திருப்பார். உச்சநீதிமன்றத்துக்குப் போய் தடை வாங்கினார் பழனிசாமி. அதனால் இப்போது வெளியில் நடமாடிக் கொண்டு இருக்கிறார். சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை தனது உறவினர்கள், பினாமிகளுக்கு கொடுத்தவர் பழனிசாமி.

“பொது ஊழியர் என்ற முறையில் முதலமைச்சர் பழனிசாமி மீதும், இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார் மனு அனுப்பினார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பிறகு தான் உயர்நீதிமன்றத்துக்கு போனோம்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார்.

ஒரு முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு வைக்கும் போது அது சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் அரசு தரப்பு நீதிமன்றத்துக்கு ஏன் தரவில்லை என்று நீதிபதி கேட்டாரா இல்லையா?

எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றும் நோக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை செயல்படுவது நீதிமன்ற அவமதிப்பு என்று நீதிபதி கண்டித்தாரா இல்லையா? 7 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடிக்கு டெண்டர்கள் இப்படி விடப்பட்டுள்ளது என்று நீதிபதி சொன்னாரா இல்லையா?

''பொதுவாழ்க்கைக்கு வரும்போது அனைத்து மக்களிடமும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். அதுவும் உயர் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த நேர்மையைக் கண்டிப்பாக கடைப்பிடிக்காமல் ஊழலில் சிக்கினால் மக்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்" என்று பழனிசாமி வழக்கில் நீதிபதி கருத்துச் சொன்னாரா இல்லையா?

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை நேர்மையாக நடந்து கொள்ளாது என்று சொல்லி சி.பி.ஐ.க்கு ஆவணங்களை நீதிபதி ஒப்படைக்கச் சொன்னாரா இல்லையா? இதை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று பழனிசாமி நினைக்கிறாரா? அப்போது டெல்லி சென்ற பழனிசாமியிடம் இது பற்றி நிருபர்கள் கேட்டபோது என்ன சொன்னார்?

நான் தவறு செய்யவில்லை, உறவினர்களுக்கு டெண்டர் தரவில்லை என்று சொல்லவில்லை. மாறாக, 'யார் மீது தான் லஞ்சப் புகார் இல்லை' என்று நிருபர்களிடம் கேட்ட யோக்கியவான் தான் இந்த பழனிசாமி!

பழனிசாமி மீதான டெண்டர் வழக்கை விசாரித்து மூன்றே மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மூன்று மாதத்தில் பதவி போய்விடுமே என்பதற்காக உடனே உச்சநீதிமன்றம் போய் தடை ஆணை வாங்கியவர் தான் இந்த பழனிசாமி.

இன்று நிருபர்கள் முன்னால் சூரப்புலியைப் போல கர்ஜிக்கும் பழனிசாமி, உச்சநீதிமன்றத்தில் போய் கருவாட்டுக்கடை எலியைப் போலப் பதுங்கியது ஏன்?

'எந்த விசாரணைக்கும் நான் தயார்' என்று ஏன் சொல்லவில்லை? எந்தத் தவறும் நடக்கவில்லை என்பதை நிரூபித்துவிட்டு மீண்டும் முதலமைச்சர் ஆவேன் என்று ஏன் அவரால் சொல்ல முடியவில்லை? அவரால் சொல்ல முடியாது!

ஏனென்றால் தனது உறவினர்கள் மூலமாக டெண்டர்களை எடுத்து பணத்தைச் சுருட்டும் டெண்டர் பழனிசாமி அவர்! அவர் எடப்பாடி பழனிசாமி அல்ல, டெண்டர் பழனிசாமி!

இந்த ஆட்சியில் பல்வேறு டெண்டர்களை எடுத்து நடத்தி வரும் சுப்பிரமணியம், இராமலிங்கம் ஆகியோர் யார் என்பதை எடப்பாடி பழனிசாமி சொல்வாரா? அவர்களது குடும்பத்துக்கும் பழனிசாமி குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை பழனிசாமி பகிரங்கமாகச் சொல்லத் தயாரா?

“பழனிசாமி என்றால் ஊழல் பெருச்சாளி! எடப்பாடி அரசு வரலாற்றுக் களங்கம்!” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை மோடி அரசு செல்லாது என்று அறிவித்த போது வருமான வரித்துறையினரால் ஈரோட்டில் ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி உரிமையாளர் இராமலிங்கம் என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. யார் இந்த இராமலிங்கம் என்று பழனிசாமி சொல்வாரா?

தமிழக அரசின் பல்வேறு டெண்டர்களை எடுப்பவர் பெருந்துறை சுப்பிரமணியம். அவருக்கும் பழனிசாமிக்கும் என்ன உறவு முறை என்பதை பழனிசாமி சொல்வரா? சுப்பிரமணியத்தின் ஒரு மகளை, தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் பழனிசாமி. சுப்பிரமணியத்தின் இன்னொரு மகளை திருமணம் செய்துள்ளார் இராமலிங்கத்தின் மகன்.

இந்த சுப்பிரமணியமும் இராமலிங்கமும்தான் டெண்டர்களை எடுத்து பழனிசாமிக்கு பண சப்ளை செய்து கொண்டு வருகிறார்கள். இது யாருக்குமே தெரியாது என்பது போல யோக்கியர் வேஷம் போட்டுக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. அரசாங்க கஜானாவை சம்பந்தி, சம்பந்திக்கு சம்பந்தி என்று முறைப்படி பங்கு வைத்தவர் தான் பழனிசாமி.

இந்த ராமலிங்கத்தின் வீட்டில் தான் கர்நாடக வருமான வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினார்கள். இதற்குப் பிறகுதான், பா.ஜ.கவின் பாதம் தாங்க ஆரம்பித்தார் பழனிசாமி. அதன்பிறகு தான் சசிகலாவுக்குத் துரோகம் செய்ய ஆரம்பித்தார் பழனிசாமி. அதன்பிறகு தான் பன்னீர்செல்வத்தை கட்சிக்குள் இணைக்க சம்மதித்தார் பழனிசாமி. அதன் பிறகு தான் அ.தி.மு.க.வை, பா.ஜ.கவின் கிளைக்கழகமாக ஆக்கினார் பழனிசாமி.

அதாவது எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியை அடமானம் வைத்தார். ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட கட்சியை குத்தகைக்கு விட்டார். திருட்டுத்தனம் செய்து, திருட்டுத் தனமான பிடிபட்டவர், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள லஞ்சம் கொடுப்பதைப் போல அ.தி.மு.கவை, தூக்கிக் கொடுத்துவிட்டார். இதுதான் பழனிசாமியின் துரோக வரலாறு!

இந்தத் துரோகப் பழனிசாமியை கோட்டையை விட்டு துரத்துவதற்குத் தமிழக மக்கள் சபதம் எடுத்துவிட்டார்கள். அதனுடைய அடையாளம் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி தளகர்த்தர்கள் அனைவரும் தேர்தல் பரப்புரை செய்யச் செல்லும் இடமெல்லாம் மக்கள் தேனீக்களைப் போலக் கூடுகிறார்கள்.

இதைப் பார்த்து பயத்தில் நடுங்கிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. அந்த பயத்தில் ஊர் ஊராகப் போய் உளறிக் கொண்டு இருக்கிறார். பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடே போராடிக் கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில விவசாயிகளும் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு விவசாயி மட்டும் அந்தச் சட்டங்களை ஆதரித்துப் பேசிக் கொண்டு இருக்கிறார். அவர் தான் எடப்பாடி பழனிசாமி.

பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் முதலமைச்சர்கள் கூட பழனிசாமி அளவுக்கு அந்த சட்டங்களை ஆதரிக்கவில்லை. மூன்று வேளாண் சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர் போல உளறிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. அந்தச் சட்டத்தில் என்ன குறைபாடு இருக்கிறது? என்று நிருபர்களைப் பார்த்துக் கேட்கிறார். நான் விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறேன் என்கிறார்.

அவருக்கு நான் சொல்வது, முதலமைச்சர் அவர்களே நீங்கள் டெல்லி செல்லுங்கள்! அங்குப் போராடிக் கொண்டு இருக்கும் விவசாயிகளிடம் உங்கள் விளக்கத்தைச் சொல்லுங்கள். பிரதமர் மோடிக்கே நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். போராடிக் கொண்டு இருக்கும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாட்டு முதலமைச்சர் பழனிசாமியை அனுப்புங்கள் என்று சொல்லிக் கொள்கிறேன். அந்தளவுக்கு வேளாண் சட்டங்களைக் கரைத்துக் குடித்துவிட்டார் பழனிசாமி. குறைந்தபட்ச ஆதார விலை என்பது தான் விவசாயிகள் எதிர்பார்ப்பது. அது சட்டத்தில் இருக்கிறதா? இல்லை!

குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து வாங்கித்தர பழனிசாமியால் முடியுமா? விவசாயிகளோடு போடப்படும் ஒப்பந்தம் மீறப்பட்டால் நீதிமன்றம் செல்ல முடியுமா? முடியாது!

ஒப்பந்தம் மீறப்பட்டால் வழக்குப் போடலாம் என்று சட்டத்தில் சேர்க்க பழனிசாமியால் முடியுமா? முக்கியமான உணவுப்பொருள்கள் அனைத்தையும் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டார்கள். அதனால் யாரும் எந்தப் பொருளையும் பதுக்கலாம் என்பது தான் இன்றைய நிலைமை! அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் உணவுப் பொருள்களை மீண்டும் சேர்க்க வைக்க பழனிசாமியால் முடியுமா?

புதிய மின்சார சட்டத்தால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்பது விவசாயிகளின் பயம். இலவச மின்சாரம் ரத்து ஆகாது என்று பழனிசாமியால் சொல்ல முடியுமா? இவை எதற்காவது பழனிசாமியால் உத்தரவாதம் தர முடியுமா? இது எதுவும் பழனிசாமியால் முடியாது.

பிறகு எதற்காக இந்த சட்டத்தை ஆதரிக்க வேண்டும்? அவர் தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விவசாயிகளை அடமானம் வைக்கிறார். கட்சியை அடமானம் வைக்கிறார். ஆட்சியை அடமானம் வைக்கிறார்.

இவருக்கு இதனால் எந்த இழப்பும் இல்லை. இன்னும் நான்கு மாதம் தான் இருக்கிறது. மூட்டை முடிச்சுகளோடு சேலம் போய்விடுவார். ஆனால் இழப்பு யாருக்கு? விவசாயிகளுக்கு அல்லவா! தொழிலாளர்களுக்கு அல்லவா! தமிழக மக்களுக்கு அல்லவா!

ஒரு தனிமனிதனின் சுயநலத்துக்காக நாட்டை அடமானம் வைப்பதை அனுமதிக்கலாமா? கூடாது என்பதற்காகத் தான் நாம் கூடியிருக்கிறோம்.

தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்கிற விவசாயியால் இந்த நாட்டு விவசாயம் அடைந்த பயன் என்ன? அதனை அவரால் சொல்ல முடியுமா?

குற்றம் காண முடியாத அளவுக்கு அப்பழுக்கற்ற அரசாங்கமா இது? நான் இதுவரை கேட்ட எந்தக் கேள்விக்காவது முதலமைச்சரோ, அமைச்சர்களோ பதில் சொல்லி இருக்கிறார்களா?

எடப்பாடி தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை மறுத்தாரா இதுவரை? பன்னீர்செல்வம் மறுத்தாரா? வேலுமணி, தங்கமணி ஆகிய ஊழல் மணிகள் மறுத்தார்களா? குட்கா விஜயபாஸ்கர் மறுத்தாரா? பாரத் நெட் டெண்டர் உதயகுமார் மறுத்தாரா? பால் திருட்டு பபூன் பாலாஜி மறுத்தாரா? இந்த ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடுகள் குறித்து மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்ட புகார்கள் இதுவரை மறுக்கப்பட்டதா? இல்லை!

பிறகு எப்படி வெட்கம் இல்லாமல் பிரஸ் மீட் நடத்துகிறீர்கள்? ஊழல் கறை படிந்த முகத்தை உங்களால் எப்படி ஊர் ஊராகக் கொண்டு போய் காட்ட முடிகிறது?

அ.தி.மு.கவை பா.ஜ.கவுக்கு குத்தகைக்கு விட்ட பிறகு எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கும், ஜெயலலிதா நினைவிடத்துக்கும் போய் உங்களால் எப்படி மலர் வளையம் வைக்க முடிகிறது?

அண்ணா சொன்னது அவர் காலத்தோடு முடிந்துவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி கொடுத்த பிறகும் உங்கள் கட்சிக்கு எதற்கு அண்ணா பெயர்? எதற்காக கொடியில் அண்ணா படம்?

ஒரு கொள்ளைக் கும்பல், அ.தி.மு.க.வை வளைத்துக் கொண்டு விட்டது. தங்களது தலையைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.க.வை அடகு வைத்து விட்டது என்பதை உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் உணர்ந்தாக வேண்டும்.

அ.தி.மு.கவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு அவமானச் சின்னம் யார் என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான். அவரது ஊழலைப் பற்றிக் கேள்வி எழுப்பினால் அதற்குப் பதில் சொல்ல திராணி இல்லாத பழனிசாமி, 2ஜியைப் பற்றி பேசுகிறார்.

பழனிசாமி ஏன் இப்படி உளறுகிறார் என்றால், தான் இந்த நாட்டின் முதலமைச்சர் என்பதைக் காட்டிக் கொள்கிறார். அதனால் எதையாவது உளறுகிறார். தனது உளறல்கள் மூலமாக நானும் ஊருக்குள் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்ளத் துடிக்கிறார்.

ஒரு முதலமைச்சர் என்றால் தனது திட்டங்களின் மூலமாக பெயர் பெற வேண்டும். செயல்களின் மூலமாக பாராட்டைப் பெற வேண்டும். ஒரு முதலமைச்சர் என்றால் அவருக்கு தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும். ஒரு கனவு இருக்க வேண்டும். சிந்தனைத் திறன் இருக்க வேண்டும். மக்கள் மீது பற்றும் அன்பும் இருக்க வேண்டும். புதியதை உருவாக்க வேண்டும்.

பழனிசாமி என்றால் கமிஷன், கரெப்ஷன், கலெக்‌ஷன், டெண்டர், ஊழல், முறைகேடுகள் தான் மக்களுக்கு நினைவுக்கு வரும்!

பழனிசாமி என்றால் தூத்துக்குடியில் 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லக் காரணமாக இருந்தவர்!

பழனிசாமி என்றால் 13 மாணவர்கள் தற்கொலைக்கு காரணமானவர்!

பழனிசாமி என்றால் கொடநாடு, கொலை, கொள்ளை!

பழனிசாமி என்றால் ஊழல் பெருச்சாளி!

பழனிசாமி என்றால் எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்தவர்; ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர். நம்பிக்கைத் துரோகத்தின் அடையாளம்.

இந்த அ.தி.மு.க. காலத்தில் தான் தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்துக்குள் வருமான வரிச் சோதனை நடந்தது. இவர்கள் ஆட்சிக்காலத்தில் தான் தலைமைச் செயலாளரே சிக்கினார். டி.ஜி.பி.யே சிக்கினார். அ.தி.மு.க கேபினெட்டில் இருந்த அனைவரும் சிக்கினார்கள் என்பது தான் வரலாற்றில் பொறிக்கப்படும்.

இவை எல்லாம் பழனிசாமிக்கு வேண்டுமானால் அவமானமாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றுக்கு களங்கம்; அவமானம். இந்த அவமானத்தை களங்கத்தைத் துடைக்கும் தேர்தல் தான் வருகிற சட்டமன்றத் தேர்தல்.

சேதுபதி மன்னரை கோட்டையில் சிறை வைத்ததால், அன்று இராமநாதபுரம் மண்ணே கிளர்ந்து எழுந்தது. இன்று அத்தகைய கோட்டையையே எடப்பாடி தலைமையிலான கொள்ளையர் கூட்டம் கைப்பற்றி வைத்துள்ளது. அந்தக் கொள்ளையர் கூட்டத்திடம் இருந்து கோட்டையை மீட்கும் போருக்கு இந்த இராமநாதபுரம் மாவட்டம் தனது போர்க்குரலை எழுப்பட்டும்!

தமிழகத்துக்கு இவர்களால் ஏற்பட்ட அவமானம் துடைப்போம்! தமிழகம் தலைநிமிர தி.மு.க. ஆட்சியை அமைப்போம்! நன்றி. வணக்கம்!"

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories