
தமிழ்நாட்டின் இளம் தலைமுறை கல்வியில் மட்டும் சிறந்து விளங்காமல், நல்லப் பணியிடங்களையும் பெற்று வாழ்வின் பல நிலைகளில் முன்னேற்றம் அடைய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதில் முதன்மைத் திட்டமாக இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான திறன் பயிற்சி அளிக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம் அமைந்துள்ளது. இத்திட்டத்தால், பல்வேறு போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் உயரிய பொறுப்புகளுக்கு தேர்வாகி வருகின்றனர்.
அவ்வரிசையில், முன்னெப்போதும் இல்லாத வகையில், அரசின் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பயன்பெற்று தமிழ்நாட்டளவில் 56 பேர் இந்தியக் குடிமைப் பணிக்கு (UPSC) தேர்வாகியுள்ளனர்.
அதிலும், அகில இந்திய அளவில் 2ஆவது இடத்தைப் பெற்று அசத்தியுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜேஸ்வரி. அவரைத் தொடர்ந்து ராஜா முகைதீன் 7ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் நான் முதல்வன் திட்டத்தால் பயன்பெற்றவர்கள் என்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.



இது குறித்து தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுகள் கூடுதல் இயக்குநர் சங்கர சரவணன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 60 பேர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மட்டும் 56 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் அரசு பயிற்சி மையத்தில் பயின்ற 39 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது சிறப்புக்குரியது.
தமிழ்நாடு அரசு சார்பில் தேர்வர்களின் Prelims-க்கு ரூ.7,500, Mains-க்கு ரூ.25,000 மற்றும் Interview-க்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படுவது வேறு எந்த மாநிலத்திலும் இல்லை” என பெருமை கொண்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த UPSC AIR 2 மாணவி ராஜேஸ்வரி, “என்னுடைய UPSC பயணத்தில் ‘நான் முதல்வன்’ திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது. இத்திட்டத்தின் கீழ் எனக்கு கிடைத்த ஊக்கத்தொகையும், சரியான பயிற்சியும் இலக்கை அடைய உந்துதலாக இருந்தது.
தனியார் பயிற்சிக்கு எந்த வகையிலும் குறைவாக இல்லாமல், UPSC தேர்வர்களுக்கு உரிய பயிற்சி அளித்து, தகுந்த ஊக்கத்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தங்கும் வசதியையும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் அரசு ஏற்படுத்தி தருகிறது.
குறிப்பாக, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையுடன் தங்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டதால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடிந்தது. ‘நான் முதல்வன்’ திட்டத்தை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் நன்றி” என தெரிவித்தார்.






