மு.க.ஸ்டாலின்

"பச்சைத்துண்டு பழனிசாமி அல்ல, பச்சைத் துரோக பழனிசாமி" - விழுப்புரம் கூட்டத்தில் விளாசிய மு.க.ஸ்டாலின்!

“தமிழின மேம்பாட்டுக்காக தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நான் உழைத்துக் கொண்டு இருக்கிறேன்; கலைஞரின் கனவுகளை நிறைவேற்றும்வரை எனது பயணம் ஓயாது!” : மு.க.ஸ்டாலின் உரை

"பச்சைத்துண்டு பழனிசாமி அல்ல, பச்சைத் துரோக பழனிசாமி" - விழுப்புரம் கூட்டத்தில் விளாசிய மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“ஊழலுக்காக உரிமையை விலை பேசி விற்றுவிட்ட எடப்பாடி கூட்டத்திடம் இருந்து கோட்டையை மீட்டு தமிழக உரிமைகளை மீட்கும் தீரர்களின் கூட்டம்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டம்!” என விழுப்புரம் 'தமிழகம் மீட்போம்’ கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (10-11-2020) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

கடையேழு வள்ளல்களில் ஒருவரான காரி ஆண்ட மலையமான் நாடும் - வீரத்தின் விளைநிலமாம் ராஜா தேசிங்குவும் கோட்டை கட்டி ஆண்ட பகுதியும் அடங்கியது தான் இந்த விழுப்புரம்!

இங்கே ‘தமிழகம் மீட்போம்’ என்ற கொள்கை முழக்கப் பொதுக்கூட்டத்தை எழுச்சியுடன் நடத்தி வருகிறோம்!

திண்டிவனம் கோபால் கவுண்டரும், சண்முகம் உடையாரும், ஏ.கோவிந்தசாமியும், மிசா துரையும், சிந்தாமணி ஜெயராமனும், மாவீரன் கோபாலும், வானூர் முத்துவேலும் வளர்த்த கழகம் இது.

தனது இருபது வயதில் திராவிட நடிகர் கழகம் தொடங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், 'பழனியப்பன்' என்ற நாடகத்தை ஊர் ஊராகப் போய் போடத் திட்டமிடுகிறார்கள். அப்போது திருவாரூரில் இருந்து அந்த நாடகக் குழுவினர் முதலில் வந்தது, முகாமிட்ட ஊர் இந்த விழுப்புரம். கலைஞர் அவர்களும் ஒரு மாத காலம் இங்கே தங்கி ஒத்திகை பார்த்தார்கள். பலநாட்கள் இங்கேயே தங்கி நாடகம் நடத்தினார்கள். இந்த திராவிட நடிகர் கழகம், விழுப்புரத்தில் இருந்து அடுத்து முகாமிட்ட ஊர் தான் புதுச்சேரி. அங்கே தான் கலைஞர் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டார் என்பதும், புதுவையில் இருந்து பெரியார் அவர்களால் ஈரோட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதும் உங்கள் அனைவருக்கும் தெரிந்த வரலாறுகள்தான்.

தலைவர் கலைஞர் தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய இந்த விழுப்புரத்தில் இன்றைய தினம் நீங்கள் அனைவரும் கூடியிருக்கிறீர்கள்.

இக்கழகத்தின் புதிய துணைப் பொதுச்செயலாளராக அருமைச் சகோதரர் பொன்முடி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம் என்பதால், அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவராக இருந்த காலத்தில் இருந்து கழகத்தின் செயல்வீரராக நுழைந்து - பேராசிரியராக இருந்தபோதும் கழகத்தின் கொள்கை முழக்க வீரராகச் செயல்பட்டு - மாவட்டச் செயலாளராக இம்மாவட்டத்தில் செயல்பட்டு - இன்று கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், 'ஆழ்கடலில் கண்டெடுத்த நன்முத்து பொன்முடி' என்று அவரைக் குறிப்பிட்டார். அத்தகைய பொன்முடியை நான் வாழ்த்துகிறேன்!

விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. அவர்களும் மத்திய மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தியும் மிகச் சிறப்பாக இந்தப் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்கள்.

கொரோனா காலத்தில் செஞ்சி மஸ்தான் ஆற்றிய பணிகளை இப்பகுதி மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றுவதில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு இணை, தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள்தான் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். மஸ்தானையும் புகழேந்தியையும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்படுத்திய ஊர் இந்த விழுப்புரம். 2003-ஆம் ஆண்டு நடந்த விழுப்புரம் மண்டல மாநாட்டில் தான் நான் முதன்முதலாக மாநாட்டுத் தலைவராக ஆனேன். அந்த வாய்ப்பை எனக்கு வழங்கியவர் பொன்முடி அவர்கள்! அதுவரை எத்தனையோ மாநாடுகளில் நான் பேசி இருந்தாலும் நான் தலைமை வகித்த முதல் மாநாடு விழுப்புரத்தில் நடந்த மண்டல மாநாட்டில் தான்!

'எங்கே இருந்து உனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையோ, அங்கே இருந்து அங்கீகாரத்தைப் பெறுகின்ற அளவுக்கு நடந்து கொள்' என்று தலைவர் கலைஞர் அவர்கள் அந்த மாநாட்டில் தான் எனக்கு அறிவுரை வழங்கினார்கள். இதனை நான் என் இதயத்தில் கல்வெட்டைப் போலச் செதுக்கி வைத்திருக்கிறேன்.

தலைவர் கலைஞர் அவர்களது மறைவுக்குப் பிறகு உங்களின் பேராதரவுடன் நான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதன்பிறகு நான் கலந்து கொண்ட முதல் கூட்டமும் விழுப்புரத்தில்தான் நடந்தது. கழகத்தின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் அது. 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த அந்தக் கூட்டத்தில் பேசும்போது நான் குறிப்பிட்டேன். “கலைஞர் இருந்து சாதிக்க வேண்டியதை கலைஞரின் மகன் சாதித்தான், தலைமைத் தொண்டனான இந்த ஸ்டாலின் சாதித்தான் என்று பெயர் வாங்கித் தரும் பிள்ளையாக நான் நிச்சயம் இருப்பேன்" என்று குறிப்பிட்டேன். அப்படித்தான் நான் உழைத்து வருகிறேன்.

இவை அனைத்தும் தனிப்பட்ட எனக்காக அல்ல, கழகத்துக்காக, தமிழகத்துக்காக, இந்தத் தமிழினத்துக்காக!

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி, சிறுபான்மையினர் சமூகத்துக்காக தந்தை பெரியார் வழியில், பேரறிஞர் அண்ணா வழியில், முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நான் உழைத்துக் கொண்டு இருக்கிறேன்.

அண்ணாவை நம்பினார் பெரியார். அதற்கு ஏற்ற வகையில் அண்ணா உழைத்தார். கலைஞரை நம்பினார் அண்ணா. அதற்கு ஏற்ற வகையில் கலைஞர் உழைத்தார்.

என்னை நம்பினார் கலைஞர். அந்தக் கனவுகளை நிறைவேற்றவே நித்தமும் உழைத்துக் கொண்டு இருக்கிறேன். கலைஞரின் கனவுகளை நிறைவேற்றும் வரை எனது பயணம் ஓயாது என்பதை விழுப்புரம் கூட்டத்தின் வாயிலாக தமிழக மக்களுக்குக் கூறிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல கலைஞரின் கனவு. இது யாருக்கான ஆட்சியாக இருக்க வேண்டும், எப்படிப்பட்ட ஆட்சியாகச் செயல்பட வேண்டும் என்பதையும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நமக்கு வழிகாட்டிவிட்டுச் சென்றுள்ளார்கள்.

''நான் சமுதாயத்தில் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவன். நான் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிற காரணத்தால், பின் தங்கிய வகுப்பினர் நலனுக்காக என்னுயிரையே பணயமாக வைத்துப் போராடுவேன்'' என்று முதன்முதலில் முதலமைச்சர் ஆனபோது கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் சொன்னார்கள்.

''எனக்கென்று சாதிப்பெருமை கிடையாது. மிகமிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். எனக்கென்று குடும்பப் பாரம்பரியம் கிடையாது. ராவ் பகதூர், திவான் பகதூர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று கூறும் பெருமை எனக்கில்லை, கல்லூரிப் பட்டம் எனக்கில்லை. நான் புகுந்ததெல்லாம் ஈரோட்டுப் பள்ளியும் காஞ்சிக் கல்லூரியும் தான். நான் பட்டம் பெறாதவன் என்றாலும் பகுத்தறிவுப் பணியாளன். சாதிப்பெருமை இல்லை என்றாலும் அண்ணாவின் நீதியே என் சாதியென மதிப்பவன் நான்" - என்று பேசினார்.

சாமான்யன் என்று சொல்லிக் கொண்ட கலைஞர் அவர்கள்தான் சாமானியர்களுக்காக ஆட்சி நடத்தினார். 1969-ஆம் ஆண்டு முதன்முதலில் முதலமைச்சர் ஆன கலைஞர் அவர்கள்தான் ஆதிதிராவிடர் நலத்துறையையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையையும் உருவாக்கினார்கள். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான சட்டநாதன் ஆணையத்தை அமைத்தார்கள். அந்தப் பரிந்துரைப்படி சமூகநீதியை அமல்படுத்தினார்கள். பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு 18 சதவிகிதமும், பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவிகிதமும் வழங்கிய தலைவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்!

1987-ஆம் ஆண்டு வன்னிய மக்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு இந்த வட்டாரத்தில் கடுமையான போராட்டம் நடந்தது. தி.மு.க. வெற்றி பெற்று கலைஞர் முதலமைச்சர் ஆன 43-வது நாள் வன்னியர் சமூகம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீட்டை முதலமைச்சர் கலைஞர் கொடுத்தார்.

இந்த முப்பதாண்டு காலத்தில் கல்வி வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பிள்ளைகள் படித்து வேலைக்குப் போய் முன்னேற கலைஞர் கொடுத்த இடஒதுக்கீடு மிக முக்கியக் காரணமாக இருந்தது.

1987-ல் நடந்த சாலைமறியலில் உயிர்நீத்த 25 பேர்களின் குடும்பங்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் கருணைத் தொகை கொடுத்தவர் முதல்வர் கலைஞர். அந்த 25 குடும்பங்களுக்கும் மாதம் 1,500 ரூபாய் பென்ஷன் வழங்கியவர் முதல்வர் கலைஞர். இன்றைக்கு அந்தக் குடும்பங்கள் மாதம் 3 ஆயிரம் பணம் பெற்று வருகிறார்கள்.

கோனேரிக்குப்பத்தில் நடந்த வன்னியர் சங்க வெள்ளிவிழா மாநாட்டுக்கு தலைவர் கலைஞர் அவர்களை மேடையில் வைத்துக் கொண்டு ராமதாஸ் அவர்கள் சொன்னார், ''1987ம் ஆண்டு முதல் இடஒதுக்கீட்டுக்காக நாங்கள் போராடினோம், போராடினோம், 21 உயிர்களைப் பலி கொடுத்ததைத் தவிர ஒன்றும் நடக்கவில்லை. அன்றிருந்த அ.தி.மு.க. முதலமைச்சரைப் பார்க்க 7 ஆண்டு காலம் மனுப்போட்டேன் - பார்க்க முடியவில்லை! ஆனால் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தார். வந்தவுடன் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். என்னைக் கூப்பிட்டு இடஒதுக்கீடு தந்த கலைஞர் அவர்களே உங்களுக்கு என் நன்றி! இந்தச் சமுதாயம் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் மட்டும் 20 சதவீதம் இடஒதுக்கீடு தரவில்லை என்றால், இங்கே மத்திய அமைச்சர் சொன்னதைப் போல, கூலி வேலை செய்து கொண்டு ஓட்டு மட்டும் போடுகின்ற ஒரு சமுதாயமாக இந்த ஒடுக்கப்பட்ட சமுதாயம் இருந்திருக்கும். அதை மாற்றிய பெருமை, அதற்கு வழிவகுத்த பெருமை, கலைஞர் அவர்களையே சாரும்." என்றார்.

அத்தகைய சாதனையைச் செய்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

முன்பு இது திண்டிவனம் தொகுதியாக இருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் மரியாதைக்குரிய ராமசாமிப் படையாச்சியார் அவர்கள். அவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களும், வன்னிய அடிகளார் அவர்களும், சி.என்.ராமமூர்த்தி அவர்களும் முதல்வர் கலைஞரைச் சந்தித்து, மரியாதைக்குரிய ராமசாமி படையாச்சியார் அவர்களுக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது, அன்றைக்கு சென்னை மேயராக இருந்த என்னிடம்தான் அவர்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் கலைஞர். சென்னையில் மூன்று இடங்களைக் குறிப்பிட்டு அவர்கள் என்னிடம் கொடுத்தார்கள். இறுதியாக சென்னை ஹால்டா சந்திப்பில் படையாச்சியாருக்கு சிலை அமைக்கப்பட்டது. முதல்வர் கலைஞரும் நானும் கலந்து கொண்டோம்.

யார் சொல்கிறார்கள் என்று கழகம் பார்ப்பதில்லை. என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனித்து நடக்கும் ஆட்சி தான் தி.மு.க. ஆட்சி!

வன்னியர் சமூகத்துக்கு இத்தகைய நலத்திட்டங்கள் என்றால், இன்னொரு பக்கம் ஆதிதிராவிடர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் கழக ஆட்சியில் செய்து தரப்பட்டன.

* ஆதிதிராவிடர் நலத்துறை

* அவர்களுக்கான இடஒதுக்கீடு

* ஆதிதிராவிடர் வீட்டுவசதிக்கழகம்

* ஆதிதிராவிட மாணவர்க்கு இலவசப் புத்தகங்கள்

* இலவச பகல் உணவு

* ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் குடியிருப்புகள்

* மாணவர் இல்லங்கள்

* நவீன வசதியுள்ள விடுதிகள்

* உழவு மாடுகள் வாங்க கடன்

* தரிசு நிலங்கள் வழங்கியது.

* வீட்டுமனைகள்

* மாநில ஆதிதிராவிடர் நலக்குழு

* மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு

* தீண்டாமைக் குற்றங்களைக் கண்காணிக்க குழு

* அம்பேத்கர் பெயரால் சட்டப்பல்கலைக் கழகம், மகளிர் கல்லூரி

* அம்பேத்கர் படத்துக்கு நிதி உதவி

* அம்பேத்கர் பெயரால் விருது

* அம்பேத்கர் நூற்றாண்டு விழா

- என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து சகோதரத்துவத்துடன் வாழ சமத்துவபுரங்களை அமைத்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

தி.மு.க.வைப் பொறுத்தவரை இது ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கம். ஆட்சியில் இருந்தால் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமையைச் சட்டமாக்கும். ஆட்சியில் இல்லாவிட்டால் ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காகப் போராடும்.

"பச்சைத்துண்டு பழனிசாமி அல்ல, பச்சைத் துரோக பழனிசாமி" - விழுப்புரம் கூட்டத்தில் விளாசிய மு.க.ஸ்டாலின்!

பட்டியல் இனச் சமூகமாக இருந்தாலும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தாலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் தமிழர்களாக நினைத்து பாதுகாக்கும் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். அவர்களது பாதுகாப்புக்கு நலத்திட்டங்களை உருவாக்கும் ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி.

ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு எந்தச் சமூகத்தின் மீதும் உண்மையான அக்கறை கிடையாது. அவரது எல்லா அக்கறைகளும் டெண்டர்கள், அதுவும் கமிஷன் வருகின்ற டெண்டர்கள் மீது மட்டும் தான் இருக்கும்.

அதனை மறைப்பதற்காகத்தான் விவசாயி என்று வேடம் போட்டுக் கொண்டு வலம் வருகிறார். அவரை விவசாயி என்று சொன்னால் செடிகள் கருகிவிடும். மரங்கள் சாய்ந்துவிடும். அந்தளவுக்கு மகா பெரிய பொய் எது என்றால் எடப்பாடி பழனிசாமி விவசாயி என்று சொல்வதுதான். அவர் உண்மையான விவசாயியாக இருந்தால் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்திருக்க வேண்டும்.

எதிர்க்காதது மட்டுமல்ல, வெட்கமில்லாமல் ஆதரிக்கிறார். ஆதரித்துப் பேட்டிகள் கொடுக்கிறார். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கூட வழங்காத ஒரு சட்டத்தை ஒரு விவசாயியால் எப்படி ஏற்க முடியும்? இந்த நாட்டில் இருக்கின்ற வேளாண் சேமிப்புக் கிடங்குகளை மூடிவிட்டு, தனியார் கிடங்குகளை மட்டும் உருவாக்கவே இந்த சட்டம் அடித்தளம் அமைக்கிறது. தனியார் சேமிப்புக் கிடங்கு மட்டும் இருக்குமானால் அங்கு அவர்கள் சொல்லும் விலைக்குத்தான் வேளாண் விளை பொருட்களை விற்க வேண்டும். இப்படி விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய விளைபொருட்களை குறைந்த விலைக்கு விற்க நிர்பந்திக்கும் கொள்கை தான் அந்த வேளாண் கொள்கை? பச்சைத்துண்டு பழனிசாமி இந்தக் கொள்கையை எப்படி ஏற்க முடியும்?

மத்திய அரசாங்கம் கொண்டு வரப்போகிற மின்சட்டமானது விவசாயிகளின் இலவச மின்சாரத்தில் கை வைக்கப் போகிறது. அதனை பச்சைத்துண்டு பழனிசாமி எப்படி ஏற்க முடியும்? காவிரி ஆணையத்தின் அதிகாரத்தைக் குறைத்து, அதனை மத்திய அமைச்சகத்துடன் இணைத்துவிட்டார்கள். அதனை பச்சைத் துண்டு பழனிசாமி எதிர்த்தாரா? சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதை அனுமதிக்கும் சுற்றுச்சூழல் சட்டத்தை பச்சைத்துண்டு பழனிசாமி எதிர்த்தாரா? இல்லை. ஏனென்றால் அவர் பச்சைத்துண்டு பழனிசாமி அல்ல, பச்சைத் துரோக பழனிசாமி.

சில மாதங்களுக்கு முன்னால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்தது. அப்போது வீதிவீதியாய் போய் நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சொன்னார். 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, இன்னமும் ஆய்வறிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லையே? இதுதான் விவசாயி ஆட்சியின் லட்சணமா? சோ.குப்பம் ஏரி முதல் பனைமலை ஏரியும் அந்நியூர் ஏரியும் வறண்டு கிடப்பதை முதலமைச்சர் போய் பார்க்கட்டும்.

கலைஞர் காலத் திட்டம் என்பதால் நந்தன் கால்வாய் திட்டத்தை புறக்கணிக்கிறீர்கள் என்றால், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அதை நிச்சயம் நிறைவேற்றும். படூர் அணையை சுற்றுலாத் தலம் ஆக்குவோம் என்றீர்களே? செய்தீர்களா? விழுப்புரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் முழுமையாக முடிக்கப்படவில்லை.

அது மட்டுமல்ல, கழிவுநீர் வசதிகளை ஏற்படுத்தாமல் சாலைகள் போட்டு, தெருக்கள் முழுக்க சாக்கடையாக ஓடும் காட்சியை சமீபத்தில் மக்கள் பார்த்தார்கள். அ.தி.மு.க. ஆட்சியே இப்படித்தான் நாறிக் கொண்டு இருக்கிறது.

எடப்பாடியின் துரோகப் பட்டியலை அடுக்கலாம். வேதனைப் பட்டியலை அடுக்கலாம். சாதனைப் பட்டியலை அடுக்க முடியாது.

மக்களுக்கு சாதனைகள் செய்வதற்காக அவர் ஆட்சிக்கு வரவில்லை. அவரது அமைச்சர்களும், மக்களுக்கு சாதனை செய்வதற்காக வரவில்லை. அவர்களும் எடப்பாடி வழியில் கொள்ளையடிப்பதற்காகத் தான் வந்துள்ளார்கள்.

விழுப்புரம் மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் இருக்கிறார் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம். அவர் என்ன சாதித்தார்?

ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகள் மலையளவு உள்ளது.

* விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியும், திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியும் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!

* விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்துக் கொடுத்தவர் முதலமைச்சர் கலைஞர்!

* அரகண்டநல்லூரில் மத்திய அரசின் பாலிடெக்னிக் வரக் காரணமாக அமைந்தது தி.மு.க. ஆட்சி!

* அண்ணா பொறியியல் கல்லூரியை உருவாக்கியதும் முதலமைச்சர் கலைஞர்!

* விழுப்புரத்தில் வேளாண் விளைபொருள் விற்பனைக் கூடம் அமைக்கப்பட்டது.

* விழுப்புரத்தை மையமாகக் கொண்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது.

* திண்டிவனம், உளுந்தூர் பேட்டையில் சிப்காட் தொழில் பேட்டைகள் அமைக்கப்பட்டன.

* விழுப்புரம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளிக்கு பிரமாண்டமான கட்டிடம் அமைக்கப்பட்டது.

* விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூன்று சர்க்கரை ஆலைகளுக்கும் மின் உற்பத்தித் திட்டம் கொண்டு வரப்பட்டது.

* விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று நகரங்களும் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

* விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

* விழுப்புரம் மாவட்டம் முழுவதும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித் தரப்பட்டது.

* கீழ்ப்பெரும் பாக்கத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டித் தரப்பட்டது.

* முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டது.

* திண்டிவனத்தில் பொறியியல் கல்லூரி

* விழுப்புரத்தில் பொறியியல் கல்லூரி

* செஞ்சி கூட்டுக் குடிநீர்த் திட்டம்!

* கள்ளக்குறிச்சி கூட்டுக் குடிநீர்த் திட்டம்!

* அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் அமைய விழுப்புரத்தில் பெருந்திட்ட வளாகம்

* திண்டிவனம், செஞ்சி, திருக்கோவிலூர், ஆகிய இடங்களில் போக்குவரத்துப் பணிமனைகள்

* மத்திய அமைச்சர்கள் டி.ஜி.வெங்கட்ராமன், டி.ஆர்.பாலு காலத்தில் உருவாக்கப்பட்ட நெடுஞ்சாலைப் பணிகள்!

* நான்குவழிச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள்!

இப்படி எண்ணற்ற திட்டங்களைச் செய்து கொடுத்த அரசுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசு! கலைஞரின் அரசு!

இந்த அ.தி.மு.க. அரசு என்ன செய்தது? எடப்பாடி பழனிசாமி இந்த விழுப்புரம் மாவட்டத்துக்கு என்ன திட்டங்களைக் கொண்டு வந்து கொடுத்தார்? அமைச்சர் சி.வி.சண்முகம் என்ன திட்டங்களை பெற்றுத்தந்தார்? இது போல பட்டியல் போட முடியுமா?

"பச்சைத்துண்டு பழனிசாமி அல்ல, பச்சைத் துரோக பழனிசாமி" - விழுப்புரம் கூட்டத்தில் விளாசிய மு.க.ஸ்டாலின்!

திண்டிவனத்துக்கு புதிய பேருந்து நிலையம் கட்டித்தருவதாகச் சொல்லி பத்து ஆண்டுகள் ஆனது. வந்ததா? சொந்தக் கிராமமான கூட்டேறிப்பட்டுவில் பாலம் அமைக்கப்படும் என்று சொன்னாரே? இதுவரை நிலத்தையாவது கையகப்படுத்தினாரா? விழுப்புரம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுற்றுவட்டச்சாலை வந்ததா? வரவில்லை!

விழுப்புரத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது இரண்டாம் கட்ட கழிவுநீர்ப் பணிகளை தொடங்குவதாகச் சொன்னார்களே? செய்தார்களா?

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அருகில் மேம்பாலம் வரும் என்றார்கள். வந்ததா?

ஆனால் தனக்கு வேண்டிய ஆட்களுக்கு டெண்டர் கொடுத்து தனது உறவினரை வைத்து டெண்டரை முடித்து சுருட்டுவதில் மட்டும் சி.வி.சண்முகம் குறியாக இருக்கிறார் என்றால் இந்தக் கூட்டத்தை மன்னிக்கலாமா?

தமிழ்நாட்டுக்கு சாதனைகள் எதையும் செய்யாத சி.வி.சண்முகம் செய்த துரோகங்களைப் பட்டியல் போட முடியும்.

* நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு அனுப்பினோம். அதற்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் வாங்கித் தர சி.வி.சண்முகத்தால் முடியவில்லை.இது முதல் துரோகம்!

* நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு சட்டமன்றத்தில் இரண்டாவது தீர்மானம் போட்டு அனுப்பினோம். அதற்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் வாங்கித் தர சி.வி.சண்முகத்தால் முடியவில்லை. இது இரண்டாவது துரோகம்!

* இந்த மசோதாக்களை ஏற்க முடியாது என்று மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது. அதனை மறைத்தது சி.வி.சண்முகத்தின் மூன்றாவது துரோகம்!

* மத்திய அரசு திருப்பி அனுப்பியதை தமிழ்நாடு சட்டமன்றத்துக்குச் சொல்லாமல், நாங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறோம் காத்திருக்கிறோம் என்று பொய் சொல்லிக் கொண்டு இருந்தது ஐந்தாவது துரோகம்!

* 7 பேர் விடுதலைக்காக அ.தி.மு.க. அமைச்சரவை தீர்மானம் போட்டு அனுப்பியது. இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை ஆளுநர் அனுமதி தராதது சி.வி.சண்முகத்தின் ஆறாவது துரோகம்!

* ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. அது பற்றி சட்டமன்றத்தில் நாங்கள் கேள்வி எழுப்பியபோது, தமிழ்நாட்டுக்குள் ஹைட் ரோகார்பன் திட்டம் வராது என்று சொன்னவர் அமைச்சர் சி.வி.சண்முகம். ஆனால் அந்தத் திட்டங்கள் அதிகமாகவே தமிழ்நாட்டுக்குள் நடந்து வருகிறதே. இது சி.வி.சண்முகத்தின் ஏழாவது துரோகம்!

* ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை சந்தேக மரணமாகப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்லிவிட்டு அமைதியானது அவரது எட்டாவது துரோகம்!

* பன்னீர்செல்வத்தை பரம்பரை எதிரியைப் போலப் பேசி வந்த சி.வி.சண்முகம் அவரை ஏற்றுக் கொண்டது அவரது ஒன்பதாவது துரோகம்!

* ராமதாசுடன் கைகோர்த்தது அவரது பத்தாவது துரோகம்! அதற்கான காரணங்களை நான் இங்கே விவரிக்க விரும்பவில்லை. அது சி.வி.சண்முகத்தின் மனசாட்சிக்கே தெரியும்!

இப்படிப்பட்ட துரோக வரலாறு கொண்டவர் தான் சி.வி.சண்முகம்!

அவர் சட்டத்துறையை எந்த லட்சணத்தில் கவனிக்கிறார் என்பதற்கு சாத்தான்குளம் சம்பவமே சாட்சி. ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரை அடித்தே கொன்றது சாத்தான்குளம் காவல்துறை. அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்கள் என்று அந்தக் கொலையை மறைக்கும் அறிக்கை விட்டவர் சி.வி.சண்முகம். இது குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையானது கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அவர்களை விசாரணைக்கு அனுப்பியது. அந்த மாஜிஸ்திரேட் பாரதிதாசனையே சாத்தான்குளம் போலீஸார் மிரட்டினார்கள். அச்சுறுத்தினார்கள். ஒத்துழைக்க மறுத்தார்கள்.

அதாவது இந்த நாட்டில் ஒரு மாஜிஸ்திரேட்டுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைமை உள்ளது. அதன்பிறகு தான் அந்தக் காவல் நிலையத்தையே உள்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டுக்கு உயர்நீதிமன்றம் மாற்றியது. இதைப் போல அவமானம் என்ன வேண்டும்? மாஜிஸ்திரேட்டை போலீஸ்காரர்கள் மிரட்டுகிறார்கள் என்றால் சி.வி.சண்முகத்துக்கு வெட்கமாக இல்லையா?

தலைமைச் செயலகத்துக்குள் வருமான வரித்துறை நுழைகிறது. தலைமைச் செயலகத்துக்குள் துணை ராணுவம் நுழைகிறது. அமைச்சர் வீட்டுக்குள் சி.பி.ஐ. நுழைகிறது. டி.ஜி.பி.யையே சி.பி.ஐ. விசாரிக்கிறது. மாஜிஸ்திரேட்டே மிரட்டப்படுகிறார். அப்படியானால் இந்த நாட்டில் கிரிமினல்கள் கையில் கோட்டை போய்விட்டதா? குற்றப்பின்னணி கொண்டவர்கள் கையில் அதிகாரம் போய்விட்டதா?

காணொலி வாயிலாகப் பேசுவதால் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதைப் போல நான் சென்னைக்கும் சேலத்துக்கும் மட்டும் அலைந்தவன் அல்ல. தமிழ்நாட்டில் நான் போகாத ஊர் இல்லை, செல்லாத கிராமம் இல்லை என்கிற அளவுக்கு மக்களை அறிந்தவன்.

கொரோனா காலம் என்பதால் அரசின் கட்டுப்பாடுகளை மதித்து காணொலி மூலமாக கூட்டம் நடத்தி வருகிறோம். அதில் என்ன குறை கண்டுபிடித்தார் சி.வி.சண்முகம்?

பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கெடுக்கும் கூட்டங்களை இப்போது நடத்த முடியாது என்பதால் காணொலிக் கூட்டங்களின் மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்திக்கிறேன். சி.வி.சண்முகத்தின் ஆசையை நிறைவேற்றும் வகையில் விரைவில் மக்களை நேரடியாகச் சந்தித்து அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்களை, அமைச்சர்களின் வண்டவாளங்களை பொதுமக்கள் மத்தியில் எடுத்து வைப்பேன்.

தமிழகத்தின் உரிமையை அ.தி.மு.க. அரசு மீட்டுவிட்டதாக அமைச்சர் சி.வி.சண்முகம் சொல்லி இருக்கிறார். எந்த உரிமையை மீட்டார்கள் என்று தெரியவில்லை. அதைச் சொன்னால் நன்றாக இருக்கும்.

இவர்கள் தமிழகத்தின் உரிமையை மீட்கவில்லை. தங்கள் தலையை மீட்டுள்ளார்கள். பா.ஜ.க.வுக்கு அடிமைச் சேவகம் செய்யாமல் போயிருந்தால் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும், வேலுமணியும், விஜயபாஸ்கரும் சிறைக்குப் போயிருப்பார்கள்.

இவர்கள் தங்கள் வாழ்க்கையை மீட்டுக் கொண்டார்கள் என்று சொல்லலாமே தவிர, தமிழக உரிமைகளை மீட்டார்கள் என்று சொல்வது சி.வி.சண்முகத்தின் அடிமை மனோபாவத்தைக் காட்டுகிறது.

ஊழலுக்காக உரிமையை விலை பேசி விற்றுவிட்ட கூட்டம்தான் எடப்பாடி கூட்டம். அந்த எடப்பாடி கூட்டத்திடம் இருந்து கோட்டையை மீட்டு தமிழக உரிமைகளை மீட்கும் தீரர்களின் கூட்டம்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டம்.

வாருங்கள் களத்துக்கு! மீட்போம் தமிழகத்தை! என்ற சூளுரைத்து விடை பெறுகிறேன்! நன்றி. வணக்கம்!”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories