மு.க.ஸ்டாலின்

“மதுரையைப் பாழாக்கிய செல்லூர் ராஜு, உதயகுமார்" - ‘தமிழகம் மீட்போம்’ கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் விளாசல்!

“ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசாக மாறியுள்ள எடப்பாடி பழனிசாமி அரசின் சில அமைச்சர்கள் கோட்டையைக் கொள்ளையர் கூடமாகவும், சில அமைச்சர்கள் மூடர் கூடமாகவும் மாற்றிவிட்டார்கள்”

“மதுரையைப் பாழாக்கிய செல்லூர் ராஜு, உதயகுமார்" - ‘தமிழகம் மீட்போம்’ கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“பணம் பாதாளம் வரை பாயும் என்ற மமதை எண்ணத்துடன் கொள்ளையடித்து, அதனைக் கொண்டு சட்டமன்றத் தேர்தலை வளைத்து விடலாம் என்ற அ.தி.மு.க.வின் பகல் கனவு மாபெரும் மக்கள் சக்திக்கு முன்னால் சிதைந்து சிதறிவிடும்” என மதுரை ‘தமிழகம் மீட்போம்’ கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (09-11-2020) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மதுரை மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“சான்றோரும் உண்டுகொல்; சான்றோரும் உண்டுகொல்;

தெய்வமும் உண்டுகொல்; தெய்வமும் உண்டு கொல்;

பெண்டிரும் உண்டுகொல்; பெண்டிரும் உண்டுகொல்; - என்று நீதிகேட்டு கண்ணகி கர்ஜித்த மண்ணில்,

ஜனநாயகம் உண்டுகொல்; ஜனநாயகம் உண்டுகொல்;

சமூகநீதி உண்டுகொல்; சமூகநீதி உண்டுகொல்;

ஆட்சி உண்டுகொல்; ஆட்சி உண்டுகொல்;

- என்று நீதியின் குரலை எழுப்புவதற்காக மதுரையில் இந்த மாபெரும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மண், இந்த மதுரை மண்! மதுரை நகரில் எழுந்தருளிய சோமசுந்தரப் பெருமான், தன்னை வழிபட்ட தொண்டர்களுக்கு தமிழ்ப்பாடல்கள் எழுதித் தந்ததாக குறுந்தொகை நூல் சொல்கிறது. இறைவனே, தமிழ்ப்புலவனாகக் காட்சி அளித்த மண்தான் இந்த மதுரை மண்! இறைவனின் பாடலில் பிழை கண்டுபிடித்து, 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று வாதிட்ட புலவர் நக்கீரர் வாழ்ந்த மண் இந்த மதுரை மண். அங்கே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!

மத்திய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் இரண்டு அரசுகளுமே தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து அநீதியை இழைத்து வருகின்றன. இது சரியா, முறையா, தர்மம்தானா என்பதைக் கேட்பதற்கான பொதுக்கூட்டம்தான் இந்த மதுரைப் பொதுக்கூட்டம்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் திருச்செந்தூரை நோக்கி நீதிகேட்டு நெடும்பயணத்தை மதுரையில் இருந்துதான் தொடங்கினார், நம் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்கள். தமிழ்நாட்டை தனது அன்பால் அறிவால் ஆண்ட தலைவர் கலைஞர் அவர்கள், மதுரையைத் தனது கால்களால் அளந்தார். அத்தகைய நீதியின் அடையாளமான மதுரை மண்ணில் 'தமிழகம் மீட்போம்' என்ற மாபெரும் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள ஆற்றல் மிகுந்த செயல்வீரர்கள் பி.மூர்த்தி, கோ.தளபதி, மு.மணிமாறன் ஆகிய மூவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மூவேந்தர் ஆண்ட மண் இந்தத் தமிழ் மண். மூர்த்தியும், தளபதியும், மணிமாறனும் மூவேந்தர்களாக இந்த மதுரை மண்ணை கழகத்தின் களமாக ஆக்கிக் காட்டி இருக்கிறீர்கள். நான் என்ன நினைக்கிறேனோ அதனை அப்படியே செய்து காட்டும் மதுரைத் தளபதிகளாக நீங்கள் செயல்பட்டு வருகிறீர்கள்.

வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல துரிதமாகவும், கூர்மையாகவும் செயல்பட்டு வருகிறீர்கள். உங்கள் மூவருக்கும் தலைமைக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த அக்டோபர் 30-ஆம் நாள், நான் மதுரை வந்தேன். கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் அதிகமாக வெளியூர் பயணங்கள் செய்ய இயலாத நிலையில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பசும்பொன் செல்வதற்காக மதுரை வந்தேன்.

''அன்றைய அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் ஒருமித்த இளவல் மாதிரி கம்பீரமாகக் காட்சி அளித்தார் தேவர் திருமகன்" என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நான் வருகை தந்தேன்.

பசும்பொன் தேவர் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், பார்வர்டு பிளாக் கட்சியில் தொடர்ந்தாலும் திராவிட இயக்கத்துக்கும் அவருக்கும் ஆழமான நட்பு இருந்தது. 1962 தேர்தல் நேரத்தில் அண்ணாவின் தூதுவராக, மதுரையின் தளகர்த்தர்களில் ஒருவரான எஸ்.எஸ்.தென்னரசு அவர்கள் பசும்பொன் தேவர் அவர்களைச் சந்தித்தபோது, “எல்லாக் கட்சிகளும் தலைவர், தொண்டன் என்று வலம் வரும்போது தி.மு.க. மட்டும் அண்ணன், தம்பி என்று சகோதரப் பாசத்துடன் கட்சி நடத்துகிறீர்களே?” என்று வியந்து கேட்டவர் தேவர் அவர்கள்.

திருச்சியின் தீரரான அன்பில் தர்மலிங்கம் அவர்கள் பசும்பொன் தேவர் அவர்களை ஒருமுறை சந்தித்துள்ளார். அப்போது தேவர் அவர்கள், ''இந்த நாட்டை ஒரு நாளைக்கு உங்கள் அண்ணாத்துரை தான் ஆளப் போகிறார்'' என்று சொல்லி இருக்கிறார்.

''எப்படி அய்யா? நீங்களா இதைச் சொல்கிறீர்கள்?" என்று அன்பில் அவர்கள் கேட்கிறார்கள். ''ஆமாம், நான்தான் சொல்கிறேன். இன்றைய அரசியல்வாதிகளில் இத்தனை பொறுமைசாலியான ஒருவரையும் காணோம்" என்று தேவர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதனை தேவர் அவர்கள் மறைந்த அன்று நடந்த இரங்கல் கூட்டத்தில் சொல்லி அழுதார் அன்பில் அவர்கள்.

1963-ஆம் ஆண்டு தேவர் அவர்கள் நிறைவெய்திய போது அண்ணா அவர்களும், கலைஞர் அவர்களும் அன்று கழகத்தில் இருந்த எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். போன்றவர்களும் பசும்பொன் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். "மண்ணுக்குள் கிடந்தவர்களை எல்லாம் மாணிக்கமாக்கிய மாபெரும் தேசியத் தலைவர்" என்று அண்ணா அவர்கள் அன்று பேசினார்கள்.

* இன்று பல்வேறு தரப்பினர் பசும்பொன் வந்து தேவரின் நினைவைப் போற்றுகிறார்கள் என்றால் 1969-ஆம் ஆண்டே பசும்பொன் வருகை தந்து நினைவிடத்தைப் பார்வையிட்டு அரசுத் தரப்பில் உதவிகளைச் செய்தவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

* 2007-ஆம் ஆண்டு பசும்பொன் தேவர் திருமகனார் நூற்றாண்டு விழாவை மாபெரும் அரசு விழாவாக நடத்தியவர் முதலமைச்சர் கலைஞர்.

* தேவர் நினைவகத்தில் அணையா விளக்கை அமைத்துக் கொடுத்தவர் முதலமைச்சர் கலைஞர்.

* தேவர் இல்லத்தை 10 இலட்சம் செலவில் புதுப்பித்தவர் முதலமைச்சர் கலைஞர்

* 9 லட்சம் மதிப்பில் நூற்றாண்டு விழா வளைவு, 9 லட்சத்தில் புகைப்படக் கண்காட்சி, 4 லட்சத்தில் நூலகம், 5 இலட்சத்தில் முடி இறக்கும் இடம், 5 லட்சத்தில் பால்குட மண்டபம், 5 லட்சத்தில் முளைப்பாரி மண்டபம் - என அனைத்தையும் அமைத்தவர், முதலமைச்சர் கலைஞர்.

* நினைவகத்தைச் சுற்றியுள்ள சாலையை கல் சாலையாக ஆக்கியவர் முதலமைச்சர் கலைஞர்!

* நினைவிடம் முன்பாக வாழ்ந்து வந்த ஆதிதிராவிட மக்களுக்கு 41 இலட்சத்தில் குடியிருப்புகள் கட்டித் தந்தவர், முதலமைச்சர் கலைஞர்.

* தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பசும்பொன் கிராமத்துக்கு மட்டும் மொத்தமாக 2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் பல்வேறு பணிகளைச் செய்தவர் முதலமைச்சர் கலைஞர்!

* மதுரையில் இன்று கம்பீரமாக தேவர் சிலை அமைந்துள்ளது. பி.கே.மூக்கையாத்தேவர் முயற்சியால் அமைக்கப்பட்ட அந்த சிலையின் திறப்பு விழாவை அரசு விழாவாக நடத்திக் கொடுத்ததும் - குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களை அழைத்து வந்ததும், விழாவுக்குத் தலைமை வகித்ததும் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

* மதுரை ஆண்டாள்புரம் பாலத்துக்கு "முத்துராமலிங்கத் தேவர் பாலம்" என்று பெயர் சூட்டியவர் முதலமைச்சர் கலைஞர்.

* காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் தேவர் பெயரால் ரூ.25 லட்சம் மதிப்பிலான அறக்கட்டளை உருவாக்கியவர் முதலமைச்சர் கலைஞர்!

* கழக ஆட்சி முதன்முதலாக உருவான போது பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பிரமுகர்கள், தங்கள் மக்களது கல்வி மேம்பாட்டுக்காக கல்லூரிகளைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டார்கள். அவை அனைத்துக்கும் அனுமதி வழங்கியவர், முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

அதில் குறிப்பாக, முக்குலத்தோர் சமூகம், தாங்கள் பெரும்பான்மையாக வாழும் இடத்தில் கல்லூரிகளை அமைக்கத் திட்டமிட்டனர். முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் அவர்கள் தலைமையில் தேவர் கல்விச் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் சார்பில் மேலநீலிதநல்லூரில் அமைந்த பசும்பொன் தேவர் கல்லூரிக்கு அனுமதி வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர். அதுமட்டுமல்ல, 44.94 ஏக்கர் நிலத்தை வழங்கியவர் முதல்வர் கலைஞர். ஆனால் அந்தக் கல்வி நிறுவனம் என்ன நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்டதோ அதைச் சீர்குலைக்கும் வகையில் சில தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரத்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் அந்தக் கல்லூரியில் நடந்த உதவிப் பேராசிரியர் நியமனம் மற்றும் பல்வேறு முறைகேடுகளுக்கு இந்த எடப்பாடி பழனிசாமி அரசு துணை போய்க்கொண்டு இருக்கிறது.

* கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு தர்மபரிபாலன ஸ்தாபனம் சார்பில் கமுதி தேவர் கல்லூரி அமைக்க அனுமதி வழங்கியவர், முதலமைச்சர் கலைஞர் அவர்கள்!

* உசிலம்பட்டியில் கள்ளர் கல்விக் கழகம் சார்பில் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர்!

* இவை அனைத்துக்கும் மேலாக 1989-ஆம் ஆண்டு "மிகவும் பிற்படுத்தப்பட்டோர்' என புது இடஒதுக்கீடு உரிமையை உருவாக்கி, கல்வி, வேலை வாய்ப்பில் இந்தச் சமூக மக்கள் முன்னேற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர் முதல்வர் கலைஞர் அவர்கள். இதில் சில மாவட்டப் பிரிவைச் சேர்ந்தவர்களையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழுந்துள்ளது. அதனை கழக அரசு பரிசீலித்து செயல்படுத்தும் என்ற வாக்குறுதியை இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

“வீரராகப் பிறந்தார், வீரராக வாழ்ந்தார், வீரராக மறைந்தார், மறைவுக்குப் பிறகும் வீரராகப் போற்றப்படுகிறார்” என்று பசும்பொன் தேவர் பற்றி கலைஞர் அவர்கள் பேசினார்கள். அத்தகைய தேசியத் தலைவருக்கும், அந்தச் சமூகத்துக்கும் கழக அரசு செய்த சாதனைகளைத்தான் நான் பட்டியலிட்டேன். இன்றைய இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதனைப் பட்டியலிட்டேன்.

சமூகம் என்றால் அது தனிப்பட்ட சமூகம் மட்டுமல்ல, தமிழினத்தில் இப்படி பல்வேறு சமூகங்கள் அடங்கி உள்ளன. இப்படி ஒவ்வொரு சமூகத்துக்கும் கழக ஆட்சியில், கலைஞர் ஆட்சியில் செய்து தரப்பட்ட திட்டங்களை என்னால் வரிசைப்படுத்த முடியும்.

சாதியாக இருந்தாலும், மதமாக இருந்தாலும் அதைப் பற்றிப் பெருமையாக பேசுவதால் எதுவும் ஆகப்போவதில்லை. அந்த சாதியை - மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாம் என்ன உதவிகள் செய்தோம், எத்தகைய உரிமைகளை பெற்றுத் தந்தோம், அவர்களது உயர்வுக்காக என்ன பணிகளை ஆற்றினோம் என்பதுதான் முக்கியமானது.

அந்த வரிசையில் அனைத்து சாதியினர், மதத்தினர் உள்ளடக்கிய தமிழ்ச்சமூகத்தின் உயர்வுக்கும் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் அடித்தளமாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டது. அதனுடைய ஆட்சி என்பது அனைத்துத் தமிழர்களது மேன்மைக்கான ஆட்சியாகவே அமைந்தும் வருகிறது. நாளை மலர இருக்கிற கழக ஆட்சியும் அனைத்து தமிழ் மக்களின் அரசாகத்தான் இருக்கும்.

ஆனால் இன்றைக்கு ஒரு ஆட்சி இருக்கிறது. இந்த ஆட்சியை அ.தி.மு.க. ஆட்சி என்று கூடச் சொல்ல முடியாது. 30 பேர் கொண்ட ஒரு கும்பலின் ஆட்சி என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. மத்திய பா.ஜ.க. அரசு மூலமாக எந்த நன்மையையும் செய்ய வைக்கவும் முடியவில்லை.

மாநில சுயாட்சிக்காக எடப்பாடி பழனிசாமி வாதாடுவார் என்றோ, இந்தித் திணிப்பை எதிர்ப்பார் என்றோ, நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற்றுத் தருவார் என்றோ, புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பார் என்றோ, குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பார் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை.

இது எதையும் செய்ய மாட்டார். ஆனால் நான் எடப்பாடி பழனிசாமிக்கு வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை, மதுரையில் அமையும் என்று சொல்லப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட உங்களால் வர வைக்க முடியாதா என்பதுதான் என்னுடைய ஒரே கேள்வி!

2015-ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. அரசு செய்தது. அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை. 2018 ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை. திடீரென்று மண் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகும் எதுவும் நடக்கவில்லை. ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டது. 2019 ஜனவரி நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக மதுரை வந்தார் பிரதமர். அடிக்கல் நாட்டினார். இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. எதுவும் நடக்கவில்லை. அடிக்கல் நாட்டிய இடத்தில் அதற்குரிய தடம் கூட இல்லை. அடிக்கல் நாட்டியதைப் போல படம் காட்டினார்களே தவிர அடிக்கல் நாட்டவில்லை.

இப்போது கடந்த ஜூலை மாதம் அரசிதழில் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார்கள். இதுவும் எதற்காக என்றால், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. அதற்காக மொத்தமாக நாட்டு மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதைப் போல இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் விமான நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டிவியில் அடிக்கல் நாட்டியது போன்ற ஒரு காட்சியை காட்டி அடிக்கல் நாட்டி சென்ற மோடி அரசு 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்தான் மத்திய அரசின் அரசிதழில் வெளியிட்டது.

கழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, "செப்டம்பர் மாதத்தில் பணி தொடங்கும்" என்று பதில் சொல்லி இருக்கிறது மத்திய அரசு. செப்டம்பர், அக்டோபர் முடிந்து நவம்பர் மாதமும் வந்துவிட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அவருக்கு டிசம்பர் மாதம் பணி தொடங்கும் என்று பதில் சொல்லி இருக்கிறார்கள். எந்த டிசம்பர் மாதம் என்று தெரியவில்லை. 2020 டிசம்பரா? 2021 டிசம்பரா? 2022 டிசம்பரா? என்பது மோடிக்கு மட்டும்தான் வெளிச்சம்.

இதற்கு நிதி எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இதுவரை தெரியவில்லை. நிதி ஒதுக்காத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிர்வாகக் குழு உறுப்பினர்களை மட்டும் நியமித்துவிட்டார்கள். அதிலும் மதுரை மக்கள் பிரதிநிதிகளுக்கு இடமில்லை. மத்திய - மாநில அரசுகளுக்கு மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை என்பதற்கு ஒரே உதாரணம் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை! மத்திய - மாநில அரசுகள் எவ்வளவு பொய்யையும் கூசாமல் சொல்வார்கள் என்பதற்கும் எய்ம்ஸ் மருத்துவமனையே போதும்! இந்த ஒரே ஒரு சாதனையைக் கூடச் செய்து தர வக்கற்ற, வகையற்ற அரசாங்கம் தான் இந்த எடப்பாடி அரசாங்கம்!

ஆனால் கலைஞர் மதுரைக்கு என்ன செய்தார் என்று என்னிடம் கேட்டால், இன்று முழுவதும் சொல்வதற்கு என்னிடம் தகவல்கள் இருக்கிறது.

* நகராட்சியாக இருந்த மதுரையை 1971-இல் மாநகராட்சியாக மாற்றியது யார்? முதலமைச்சர் கலைஞர்!

* மாவட்ட நீதிமன்றம் அமைக்க அடிக்கல் நாட்டியவர் முதலமைச்சர் அண்ணா. திறந்து வைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!

* இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை அமைந்திருக்கிறது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் முதலமைச்சர் கலைஞர்.

சென்னை உயர்நீதிமன்றக் கிளை மதுரையில் அமைய வேண்டும் என்று முதன்முதலாக 1973-ஆம் ஆண்டு முயற்சித்தார் முதல்வர் கலைஞர். 1989-ஆம் ஆண்டும் முயற்சியைத் தீவிரப்படுத்தினார். 1996-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்த உத்தரவு பிறப்பித்தார். 5 கோடி ரூபாயை ஒதுக்கினார். மத்திய அரசு அமைத்த நீதிபதி ஜஸ்வந்த்சிங் கமிஷனும் இதனை ஏற்றுக் கொண்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்களிடம், மதுரையில் உயர்நீதிமன்றத்தின் கிளையைத் தொடங்கிடப் பரிந்துரைத்தார். இந்தக் கோரிக்கை உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு, அதை நிறைவேற்றிட அனுமதியும் பெறப்பட்டது. கழக ஆட்சியில்தான் 2000-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. விழாவில், அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் அவர்கள் கலந்து கொண்டார்கள். தென் மாவட்ட மக்களின் கனவை கலைஞர் நனவாக்கியதால்தான் இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மாபெரும் கட்டடமாக கம்பீரமாக நிற்கிறது.

* அந்தக் காலத்தில் சென்னை அண்ணா மேம்பாலம்தான் பெரிதாக அனைவராலும் சொல்லப்படும். அதேபோல் மதுரையில் இரண்டு பாலங்களை முதல்வர் கலைஞர் அமைத்தார்கள்.

* மதுரை சுப்பிரமணியபுரம் மேம்பாலம் கட்டப்பட்டு அதற்கு, "மதுரை முத்து மேம்பாலம்" என்ற பெயர் சூட்டியவர், முதலமைச்சர் கலைஞர்.

* ஆண்டாள்புரம் பாலத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்டியவர் முதலமைச்சர் கலைஞர்.

* மதுரை தெற்குவாசல் இருப்புப்பாதை மேம் பாலம் கட்டப்பட்டு தியாகி "என்.எம்.ஆர்.சுப்புராமன் மேம்பாலம்" என்று பெயர் சூட்டப்பட்டது.

* மானம் காத்த மருதுபாண்டியருக்கு சிலை அமைக்கப்பட்டது!

* தமிழைச் செம்மொழி என்று 100 ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவிய பரிதிமாற்கலைஞருக்கு மணிமண்டபம்

* "திராவிட மொழிநூல் ஞாயிறு" என்று போற்றப்பட்ட தேவநேயப்பாவாணருக்கு மணிமண்டபம்.

* மதுரா கோட்ஸ் மேம்பாலம், ஆனைக்கல் வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம், வைகை ஆற்றின் குறுக்கே 3 தரைப் பாலங்கள், வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம், செல்லூர் அருகே தத்தநேரி இருப்புப்பாதை உயர்மட்ட மேம்பாலம் ஆகியவை கழக ஆட்சியில் அமைக்கப்பட்டன.

* மதுரை வடபகுதியிலிருந்து 27 கிலோமீட்டர் முதல் ரிங்ரோடு

* மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ,

* மாட்டுத்தாவணியில் வணிக வளாகம், பூமார்க்கெட் , சென்ட்ரல் மார்க்கெட்

* மதுரை ரயில் நிலையம் அருகே எல்லீஸ் நகர் மேம்பாலம்.

* மதுரை மத்தியப் பகுதியில் மதுரை அண்ணா பல்கலைக்கழகம்

* இரண்டு பாலிடெக்னிக்குகள்

* வைகை இரண்டாம் குடிநீர்த் திட்டம் மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம்

* வாடிப்பட்டியில் கைத்தறி ஜவுளிப் பூங்கா

* இந்தியாவுக்கு வளம் சேர்க்கும் திட்டமாக விளங்கக்கூடிய சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்கவிழாவை நாம் நடத்தியதும் மதுரையில் தான்!

* மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றினோம். புதிய டெர்மினல் முனையக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, அவை திறந்து வைக்கப்பட்டதும் கழக ஆட்சியில்தான்!

* மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத்துக்கு 2007 இல் நான்தான் அடிக்கல் நாட்டி வைத்தேன்.

இப்படி எதையாவது இன்றைய ஆட்சியாளர்களால் வரிசைப்படுத்த முடியுமா?

மதுரைக்கு மோனோ ரயில் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். வந்ததா? இல்லை! தேவர் சிலை அருகே பறக்கும் பாலம் என்றார்கள். வந்ததா? இல்லை! ஆனால் மதுரையை இரண்டாவது தலைநகராக்கப் போகிறோம் என்ற காமெடியை மதுரை அமைச்சர்களாக இருக்கும் செல்லூர் ராஜுவும், உதயகுமாரும் விடவில்லை.

"கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவேன்" என்றானாம். அதைப் போல மதுரைக்கு சிறுசிறு நன்மைகளைக் கூடச் செய்து கொடுக்க முடியாத இவர்கள், மதுரையைத் தலைநகர் ஆக்குவேன் என்று வாய்ப்பந்தல் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

மதுரை வைகை நதியை லண்டன் தேம்ஸ் நதி போலவும், மதுரையை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைப் போலவும், இத்தாலியின் ரோம் நகரைப் போலவும் மாற்றுவேன் என்றும் செல்லூர் ராஜு சொன்னார்.

என்னைப் பொறுத்தவரையில் செல்லூர் ராஜுவுக்கு நான் சொல்வது, சிட்னியாக, ரோம் நகராக மாற்றவேண்டாம். இப்போது இருக்கும் மதுரையை மேலும் கெடுக்காமல் இருந்தாலே போதும் என்பதுதான் என்னுடைய மிகமிகத் தாழ்மையான வேண்டுகோள்.

செல்லூர் ராஜுவும், உதயகுமாரும் ஒட்டுமொத்தமாக மதுரையைப் பாழாக்கியவர்கள். இதை நான் சொல்லவில்லை. இங்குள்ள அ.தி.மு.க. தொண்டர்களிடம் விசாரித்தாலே சொல்லிவிடுவார்கள்.

இவர்கள் இரண்டு பேரும் தங்கள் துறையில் என்ன சாதனைகள் செய்தார்கள் என்றால் யாருக்கும் சொல்லத் தெரியாது. ஆனால் என்ன காமெடி செய்தார்கள், நகைச்சுவைப் பேட்டிகள், இன்றைக்குப் புதிதாக என்ன தத்துவ முத்துக்களை உதிர்த்துள்ளார்கள் என்று கேட்டால், மக்கள் வரிசையாக பட்டியல் போட்டுச் சொல்வார்கள்.

வைகை ஆற்று நீரை தெர்மகோல் கொண்டு மூடியது முதல் - நமக்கெல்லாம் கொரோனா வராது என்று கதை விட்டது வரை, முழுக்க முழுக்க காமெடி சேனல் நடத்திக் கொண்டு இருக்கிறார் செல்லூர் ராஜு.

குடிமகன்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன என்று சொன்னாரே, அதை கல்வெட்டாக செதுக்கி, அவரை அதற்குப் பக்கத்தில் உட்கார வைக்கலாம்.

இவர் ஒரு பேட்டி கொடுத்துவிட்டால் போதும், அடுத்த அரைமணி நேரத்தில் மைக் முன்னால் வந்துவிடுவார் உதயகுமார். இரண்டு பேருக்கும் எதில் போட்டி என்றால், பேட்டி கொடுப்பதில் போட்டி.

மதுரையை ரோம் ஆக்குவேன் என்று செல்லூர் ராஜு சொன்னதும், ஆர்.பி.உதயகுமார் சொல்கிறார், 'மதுரையின் வளர்ச்சியா? அமைச்சர் பதவியா என்றால், நான் மதுரையின் வளர்ச்சியில் தான் கவனம் செலுத்துவேன்' என்று சொல்லி இருக்கிறார். இந்த உலகமகா நடிப்பை இவர்கள் இருவரிடம்தான் பார்க்க முடியும்.

விஜயபாஸ்கரை, குட்கா விஜயபாஸ்கர் என்று சொல்வதைப் போல ஆர்.பி.உதயகுமாரை, பாரத் நெட் ஊழல் உதயகுமார் என்று அழைக்கலாம். சுமார் 2000 கோடி மதிப்பிலான திட்டத்தை தனது வசதிக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளப் பார்த்தார் உதயகுமார். கிராமங்கள் அனைத்துக்கும், 'இன்டர்நெட்' இணைப்பு வழங்குவதற்காக மத்திய அரசு 'பாரத் நெட்' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை 'ஆப்டிக்கல் பைபர் கேபிள்' என்ற கண்ணாடி இழை கம்பி வழியாக இணைக்க வேண்டும். இதற்காக சுமார் 2,000 மதிப்பிலான டெண்டர் கோரப்பட்டது.

சில நிறுவனங்களுக்கு சாதகமாக, டெண்டர் நிபந்தனைகளில் அமைச்சர் உதயகுமார் மாற்றம் செய்துவிட்டதாக செய்திகள் பரவின. நான் விரிவாக அறிக்கை வெளியிட்டேன். ஆனால் உதயகுமார் மறுத்தார். நான் சொல்வது தவறு என்றார். அமைச்சருக்கு விளக்கமான பதிலை அன்றைய தினம் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி அவர்களும் அறிக்கை மூலமாகக் கொடுத்தார்.

இந்த தகவல் கிடைத்ததும் இது பற்றி லஞ்ச ஒழிப்புத் துறையில் நம்முடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்தார். வழக்கம் போல லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. உடனே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம். டெண்டரே விடவில்லை, விடாத டெண்டரில் எப்படி முறைகேடு நடந்திருக்க முடியும் என்று நீதிமன்றத்திலேயே பொய் சொன்னார்கள்.

ஆனால் அடுத்த சில நாட்களில் அந்த டெண்டரையே நிறுத்தி வைக்க மத்திய அரசு சொல்லி விட்டது. தி.மு.க. ஏதோ பொய் சொன்னதாகவும், தி.மு.க.வுக்குப் பின்னடைவு என்றும் உதயகுமார் உத்தமரைப் போல பேட்டிகள் கொடுத்தார். ஆனால் அடுத்த சில நாட்களில் அந்த டெண்டரையே நிறுத்தி வைக்க மத்திய வர்த்தக அமைச்சகம் சொல்லி விட்டது. உதயகுமாரின் ஊழல் முகத்தை மத்திய அரசே கிழித்துத் தொங்கவிட்டு விட்டது. ஒப்பந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாததுதான் இந்த ஒப்பந்த ரத்துக்குக் காரணம் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.

தென்னக மக்களின் நல்வாழ்வுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்ட தியாகி உதயகுமார் இதற்கு என்ன சொல்வார்? என்ன விதிமுறைகளை, யாருக்குச் சாதகமாக மாற்றினார் என்பது அரசு அதிகாரிகளுக்கே தெரியும்.

இந்தக் குற்றச்செயலுக்கு உடன்பட மாட்டேன் என்று சொன்ன தொழில் நுட்பத் துறைச் செயலாளர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். அவர் இந்த வேலையே வேண்டாம் என்று போய்விட்டார். டான்பிநெட் நிர்வாக இயக்குநரும் மாற்றப்பட்டார். இப்படி தங்களது ஊழல் முறைகேட்டுக்கு உடன்படாத அதிகாரிகளைப் பழிவாங்கிக் கொண்டு இருக்கிறது இந்த அ.தி.மு.க. அரசு. நல்ல அதிகாரிகள் அனைவரும் அமைதியாகி விட்டார்கள். டம்மி பதவிகளை வாங்கிக் கொண்டு போய் அங்கு அமைதியாக உட்கார்ந்துவிட்டார்கள். தமிழ்நாட்டின் நிர்வாகத் துறையானது செயல்படாமல் ஆகிவிட்டது.

பணம் கொழிக்கும் டெண்டர்களுக்கு மும்முரமாக வேலைகள் நடக்கின்றன. கமிஷன் கிடைக்கும் திட்டங்களுக்கு மட்டுமே பில்கள் பாஸ் பண்ணப்படுகின்றன. பணிமாறுதல்கள் அனைத்தும் லஞ்சத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. இன்னும் சொன்னால் லஞ்சம் வாங்குவதற்காகவே பணிமாறுதல்கள் செய்யப்படுகின்றன.

உதயக்குமாரின் ஊழலைப் போல ஒவ்வொருவர் வண்டவாளமும் இன்று தமிழ்நாட்டு மக்களிடம் நாறிக் கொண்டு இருக்கிறது. எடப்பாடி அரசாங்கத்தின் ஊழல் நாற்றம், இன்றைய தினம் மரணக் குழி வரைக்கும் போய்விட்டது!

சமீபத்தில் மரணம் அடைந்தார் மாண்புமிகு அமைச்சர் துரைக்கண்ணு. ஜெயலலிதாவின் மரணத்தைப் போலவே, துரைக்கண்ணுவின் மரணத்திலும் மர்மம் உள்ளது. துரைக்கண்ணு எந்த தேதியில் மரணம் அடைந்தார் என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. அவர் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று நானே எனது விருப்பத்தைத் தெரிவித்து இருந்தேன். ஆனால் அ.தி.மு.க.வினர், துரைக்கண்ணுவின் உடலை வைத்து ஊழல் நாடகம் ஆடி இருக்கிறார்கள்.

அமைச்சர் துரைக்கண்ணுவிடம் அ.தி.மு.க. தலைமை கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து வைத்திருந்தது என்றும், அந்தப் பணத்தைக் கேட்டு துரைக்கண்ணுவின் குடும்பம் மிரட்டப்பட்டது என்றும், அதற்கு உத்தரவாதம் கிடைத்த பிறகுதான் மரண அறிவிப்பு செய்யப்பட்டது என்றும் ஊடகங்களில் வெளியான செய்திக்கு இதுவரை முதலமைச்சரோ, முந்திரிக் கொட்டை அமைச்சரோ பதில் சொல்லவில்லை. மவுனமாக இருப்பது ஏன்?

அரசாங்கச் சொத்தைக் கொள்ளையடித்து, மக்கள் வரிப்பணத்தைச் சுரண்டி, கஜானாவைக் காலி செய்து அந்தப் பணங்களை எல்லாம் பல்வேறு இடங்களில் எடப்பாடி கூட்டம் பதுக்கி வைத்துள்ளது என்பது இதன் மூலம் அம்பலமாகி உள்ளது.

துரைக்கண்ணுவுக்கு நெருக்கமான சிலர் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன? அமைச்சர் துரைக்கண்ணு வீட்டில் இருந்து மீட்கப்பட்ட பல நூறு கோடி பணம், இத்தகைய பணம்தான் என்று சொல்லப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்காக இதனை பல்வேறு இடங்களில் பிரித்து பதுக்கி வைத்துள்ளார்கள்.

அப்படியானால் இந்த நாட்டில் மத்திய அரசு என்ன செய்கிறது? வருமானவரித்துறை என்ன செய்கிறது? வருவாய் புலனாய்வுத் துறை என்ன செய்கிறது? உள்துறை என்ன செய்கிறது? அல்லது இந்தப் பணப் பதுக்கலுக்கும் மத்திய அரசுக்கும் மறைமுகத் தொடர்பு இருக்கிறதா என்று கேட்க விரும்புகிறேன்.

நீங்கள் எத்தனை கோடி பணம் எடுத்து வந்தாலும் தி.மு.க.வை வெல்ல முடியாது. திராவிட முன்னேற்றக் கழகம் மக்களின் மனங்களை வென்ற இயக்கம்!

பணம் பாதாளம் வரை பாயும் என்ற மமதை எண்ணத்துடன் ஆட்சியாளர்கள் நாள்தோறும் கொள்ளையடித்து, அதனைக் கொண்டு சட்டமன்றத் தேர்தலை வளைத்து விடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். மாபெரும் மக்கள் சக்திக்கு முன்னால், அ.தி.மு.க.வின் பகல்கனவு சிதைந்து சிதறிவிடும் என்பதை, 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும். வட்டியும் முதலுமாக, கூட்டு வட்டியையும் சேர்த்து, சட்டம் தன் கடமையைச் செய்யும்; அதன் கரங்கள் வேண்டுமளவுக்கு நீளும்!

மொத்தத்தில் ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு மாறிவிட்டது. கோட்டையை சில அமைச்சர்கள் கொள்ளையர் கூடமாகவும், சில அமைச்சர்கள் மூடர் கூடமாகவும் மாற்றிவிட்டார்கள்.

இந்தக் கோட்டையை மீட்கும் ஜனநாயகப் போர் தான் வருகின்ற சட்டமன்றத் தேர்தல். தமிழ்நாட்டின் மானம் காக்க அனைவரும் மருதுபாண்டியர்களாக எழுங்கள். கண்ணகியாக எழுங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்!”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories