மு.க.ஸ்டாலின்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான அறப்போரில் அணி திரள்வோம்-உடன் பிறப்புகளுக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்

காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மடலில் வலியுறுத்தியுள்ளார்.

File image : MK Stalin
File image : MK Stalin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஹைட்ரோகார்பன் எதிர்ப்புக்குரல் டெல்லி வரை கேட்கட்டும். அறப்போர்க் களத்தில் கழகத்தின் அனைத்து அமைப்புகளையும் இணைத்துப் பெருந்திரளாகக் கூடுங்கள் என தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, அவர்களில் ஒருவனாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

“வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என தனது 14 வயது முதல் 94 வயதுவரை ஓயாமல் உழைத்த முத்தமிழறிஞர் கலைஞர் ஊட்டிய உணர்வுடன் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மொழிப்போர் தியாகிகளைப் போற்றும் வீரவணக்கநாள் பொதுக்கூட்டங்கள் நேற்றைய நாளில் (ஜனவரி 25) எழுச்சியோடு நடைபெற்றிருக்கின்றன.

தமிழ்மொழி – தமிழ் இனம் – தமிழ் நிலம் இவற்றின் உரிமைகளைக் காப்பதற்கும், எதிர்கால வளர்ச்சிக்குப் பாடுபடுவதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். தாய்மொழி காப்பதற்கு தாளமுத்து, நடராசனில் தொடங்கி எத்தனை யெத்தனை தங்கத் தமிழர்கள் தங்கள் இன்னுயிர் ஈந்தனர் என்கிற வீரவரலாற்றை அடித்தளமாகக் கொண்டது நம் இயக்கம். கீழப்பழுவூர் சின்னசாமி தொடங்கி பல தீரர்கள் தங்கள் தேக்குமர தேகத்தை தீயின் நாக்குகள் தின்று தீர்த்தாலும், இந்தி ஆதிக்கத்தின் விலங்குகளை ஒடித்து தமிழ் விடுதலை பெற வேண்டும் என உயிர் ஈந்தனர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு
எதிரான அறப்போரில் அணி திரள்வோம்-உடன் பிறப்புகளுக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்

பலர் நஞ்சு அருந்தி உயிர் விட்டனர். காவல்துறையின் துப்பாக்கிக்கு மார்பு காட்டி-மானம் காத்த மறவனாக மரணம் தொட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் சிவகங்கை ராசேந்திரன் முதல் துணைராணுவப் படையின் தாக்குதலுக்கும் அஞ்சாமல் உயிர்க் கொடை தந்து தமிழ் காத்த தீரர்கள் அனைவரும் நம் நெஞ்சில் நிலைத்திருக்கிறார்கள். வீரவணக்க நாளில் நான் உரையாற்றிடும் வாய்ப்பு பெற்ற மயிலாடுதுறை மண்ணில்தான், சாரங்கபாணி என்ற இளைஞர் தீக்குளித்து உயிர் ஈந்து தமிழ் காத்தார்.

மொழிப்போர் வீரர்களின் தியாகங்கள் வீணாகி விடக்கூடாது என்பதால் தான், பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் கழக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என இருமொழிக் கொள்கையை நிலை நாட்டினார். நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டினார். அவரின் அன்புத் தம்பியாம் நம் ஆருயிர்த் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழுக்கு செம்மொழித் தகுதி கிடைத்திடச் செய்தார். திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை நடைமுறைப் படுத்தினார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழக அரசு விழாக்களில் ஒலித்திடச் செய்தார். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தி, தமிழ்வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கினார்.

நம் தலைவர்கள் முன்னெடுத்த மொழிப்போர் இன்னும் முடிந்து விடவில்லை. மத்திய ஆட்சி மொழியாக தமிழ் அரியணை ஏறவேண்டும். நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக வேண்டும். கோவில்களின் கருவறை முதல் கோபுரம் வரை தமிழ் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி நாம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு
எதிரான அறப்போரில் அணி திரள்வோம்-உடன் பிறப்புகளுக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்

ஆனால், தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் அடிமை மந்தையிலிருந்து ஓர் அமைச்சர்-அதாவது தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரே இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் என இரட்டைவால் பிடித்துக் கொண்டிருக்கும் இழிநிலையைக் காண்கிறோம்.

மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்குள் எந்தவகையிலாவது இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணித்து, மெல்லத் தமிழ் இனிச்சாகும் என்ற நிலையை உருவாக்கிடத் துடிக்கிறது. ஒவ்வொரு முறையும் அதன் சதித்திட்டத்தை முறியடிப்பதில் முன்னணியில் நிற்பது திராவிட முன்னேற்றக் கழகம்தான். நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் ஊட்டிய உணர்வுடன் உங்களில் ஒருவனான நான், கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து அதனை வழி நடத்தி வருகிறேன். ஓயாது உழைத்த தலைவரின் வழியில், அன்னைத் தமிழ் காக்கும் நம் அறப்போர்க் களம் என்றும் தொடரும்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அதனை விரிவாக எடுத்துரைத்தேன். நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நமக்கு மகத்தான வெற்றியினைத் தந்த தொகுதிகளில் மயிலாடுதுறையும் ஒன்று. அது போலவே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மயிலாடுதுறையை உள்ளடக்கிய நாகை மாவட்டத்தில் கழகம் நிறைவான வெற்றியைப் பெற்றிருக்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள் அனைத்திலும் நாம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறோம். அந்த வெற்றிக்கு நன்றி சொல்லும் வாய்ப்பாகவும் மயிலாடுதுறையில் நடைபெற்ற வீரவணக்க நாள் கூட்டம் அமைந்தது.

நன்றி என்பது வெறும் வார்த்தைகளால் உச்சரிப்பதல்ல. நம்மை ஆதரித்த – நமக்கு வாக்களித்த – நம் மீது நம்பிக்கை வைத்த – நம்மை வெற்றி பெறச் செய்த மக்களின் பக்கம் நின்று அவர்களின் கோரிக்கைகளையும் தேவைகளையும் நிறைவேற்ற பாடுபடும் செயலுக்குப் பெயர்தான் நன்றி. நமக்கு வாக்களிக்காதவர்களும் நம்மீதுநம்பிக்கை கொள்ளச் செய்யும் வகையில் பாடுபடுவதே பொதுவாழ்வுக்கான இலக்கணம்.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு
எதிரான அறப்போரில் அணி திரள்வோம்-உடன் பிறப்புகளுக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்

நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் அதனைக் கற்றுத் தந்திருக்கிறார். எனவே தான், நன்றி என்பதை வார்த்தைகளில் மட்டும் சொல்லாமல் காவிரி டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியான விவசாயத்தைக் காத்திடுவதற்கான போராட்டத்தை அறிவித்திருக்கிறோம்.

நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணி எனப் புகழப்பட்ட மருதநிலத்து மண்ணை பாலை நிலமாக்கும் கொடிய திட்டத்தை மத்திய அரசு தன்னிச்சையாக – தான்தோன்றித் தனமாக செயல்படுத்த முனைந்துள்ளது. தன்னை விவசாயி என்று பசப்பும் வேடதாரியான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அடிமை அரசு, தமிழ்நாட்டை-குறிப்பாக காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் திட்டத்திற்குத் துணைபோய்க் கொண்டிருக்கிறது.

எங்கும் ஊழல், எதிலும் லஞ்சம் என்பதை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு ஆட்சியின் மிச்சக் காலத்தைக் கடத்த நினைப்பவர்களுக்கு மத்திய அரசின் கருணை தேவைப்படுவதால், தமிழ்நாட்டின் நலன்களையும் உரிமைகளையும் அடகுவைத்து தங்கள் ஊழல் சொத்துகளைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரின் பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தொடங்கி அனைத்து அமைச்சர்களின் துறைகளிலும் ஊழல் ஊற்றாகப் பெருக்கெடுத்து வழக்குகளாக மாறியிருக்கின்றன. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் மத்திய அரசுக்கு கால் பிடிக்கும் மாண்புமிகுக்கள் தமிழக மக்களின் உரிமைகள் பற்றி ஒருபோதும் கவலைப்படுவதில்லை.

காவிரி டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைச் செயல் படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. இத்திட்டத்தினால் காவிரி விளைநிலப் பகுதி பாலைவனமாகும் என்ற அச்சத்தினால் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களை ஒரு பொருட்டாகக் கூட நினைக்காமல், சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டு இத்திட்டத்தைச் செயல்படுத்தத் துடிக்கிறது.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு
எதிரான அறப்போரில் அணி திரள்வோம்-உடன் பிறப்புகளுக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்

வேதாந்தா குழுமமும் இதில் ஈடுபட்டிருப்பதால், அதிமுக அரசும் பதுங்குகிறது. திராவிட முன்னேற்றக் கழகமும் தோழமைக் கட்சியினரும் விவசாயிகளின் பக்கம் உறுதியாக நின்று, ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனப் போராடி வருகின்றன. தி.மு.கழகத்தின் தலைவர் என்ற முறையில் இதுகுறித்து நான் அறிக்கை வெளியிட்டதும், முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கு ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு எழுதுகிறார். இந்த ஆட்சியின் சட்டமன்றத் தீர்மானமே மத்திய அரசால் எந்த லட்சணத்தில் மதிக்கப்படுகிறது என்பதற்கு நீட் தேர்வு தொடர்பான தீர்மானமே சாட்சி. இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் என ஊடகச் செய்திக்காக ஒரு நாடகமாடுகிறார் விவசாயி வேடம் போட்டு தமிழக மக்களை ஏமாற்றும் எடப்பாடி பழனிசாமி.

அவருடைய அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கின்ற கருப்பணன், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தத் தேவையில்லை என மத்திய அரசுக்குக் கடிதமே எழுதிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார். கருத்துக் கேட்கவே தேவையில்லை என்கிறது மாநில அரசு. சுற்றுச்சூழல் அனுமதியே தேவையில்லை என்கிறது மத்திய அரசு. இரு அரசுகளும் கூட்டணி அமைத்துக் கொண்டு விவசாயிகளின் வயிற்றில் அடித்து வாழ்வாதாரத்தைப் பறிக்கிறது. இந்த வஞ்சகத்தையும் சதியையும் அம்பலப்படுத்தி, அ.தி.மு.க. ஆட்சி அமைந்த இந்த 8 ஆண்டுகளில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடி பாதிப்படைந்திருப்பதையும், நீர்நிலைகள் தூர்வாரப் படாததையும், விவசாயிகளின் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படாததையும் எடுத்துரைத்து, விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தை மீட்பதற்கு தி.மு.கழகம் தொடர்ந்துபாடுபடுகிறது.

கழக ஆட்சிக் காலத்தில் மீத்தேன் திட்டம் தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆய்வுப்பணிகள் தொடர்பான அந்த ஒப்பந்தத்தில், மக்களின் கருத்துக்கேட்பு –சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இடம் பெற்றிருந்தன. மக்கள் எதிர்க்கருத்து தெரிவித்திருந்தால் அப்போதே அந்த ஒப்பந்தம் இயல்பாக ரத்தாகியிருக்கும். ஆட்சி நிறைவடையும் காலம் என்பதால் ஒப்பந்தம் தொடர்பான எந்தப்பணிகளும் தொடங்கப்படாத நிலையிலேயே, தி.மு.க. மீது பழிசுமத்தி, விவசாய நிலங்களை வீணடிப்பதாகக் குற்றம்சாட்டி, பூதாகரமாக்கிய சில ஊடகங்கள் இன்று ஒட்டுமொத்த காவிரி டெல்டாவும் ஹைட்ரோகார்பன் மண்டலமாகும் நிலையில் மௌனித்துக் கிடப்பதன் மர்மம் என்னவோ!

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு
எதிரான அறப்போரில் அணி திரள்வோம்-உடன் பிறப்புகளுக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்

தி.மு.க.வைப் பொறுத்தவரை தமிழக விவசாயிகளின் நலன் காப்பதில், அவர்களுக்குத் துணைநிற்பதில் உறுதியாக இருக்கிறது. காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநிலஅரசு அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஹைட்ரோகார்பன் எடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் – ஒப்பந்தங்கள் – தனியார் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

அதற்கான அறப்போர்க் களம்தான் ஜனவரி 28ஆம் நாள். விவசாயிகளின் விரோதியான மத்திய பா.ஜ.க. - மாநில அ.தி.மு.க. அரசுகளைக் கண்டித்து 5 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. தஞ்சை வடக்கு - தெற்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பாகவும், புதுக்கோட்டை வடக்கு – தெற்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலிலும், கடலூர் கிழக்கு – மேற்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சலகம் அருகிலும், நாகை வடக்கு – தெற்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம், அவரி திடலிலும், திருவாரூர் மாவட்டக் கழகம் சார்பில், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் என எழுச்சிமிகு போராட்டங்கள் நடைபெற இருக்கிறது.

உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே.. உலகிற்கே சோறிடும் உழவர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம் இது. இந்த அறப்போர்க் களத்தில் கழகத்தின் அனைத்து அமைப்புகளையும் இணைத்துப் பெருந்திரளாகக் கூடுங்கள். தோழமைக் கட்சியினரைத் துணைக் கொள்ளுங்கள். விவசாயப் பெருமக்களைத் திரட்டுங்கள். இயற்கை ஆர்வலர்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள், சமூக நலத்தில் அக்கறையுள்ளோர் என அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுங்கள்.

விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கவும், காவிரி டெல்டா பாலைவனமாகாமல் பாதுகாத்திடவும், உணவுப் பொருள் உற்பத்தியா, ஹைட்ரோ கார்பனா என்ற கேள்விக்கு விடைகாணவும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிடவும் ஒன்று திரள்வீர். உரிமைக்குரல் எழுப்புவீர். கோட்டையில் கொலு பொம்மைகளாக வீற்றிருப்போரின் செவிகள் அதிரட்டும்! டெல்லிவரை எதிரொலிக்கட்டும்!” இவ்வாறு தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

banner

Related Stories

Related Stories