மு.க.ஸ்டாலின்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையால், மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே தமிழக மக்களுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது என தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Congress Manifesto
Congress Manifesto
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையால், மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே தமிழக மக்களுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது என தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில்

ஏற்கனவே வெளியிடப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பது மனமார்ந்த வரவேற்புக்குரியது; மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மாநிலங்களின் உரிமைகளை மதித்து - “மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி” என்ற கழகத்தின் உயிர்மூச்சான ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை அமைந்திருப்பது மிகுந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே தமிழக மக்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகவே நான் கருதுகிறேன்.

ஏழைகளுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் வீதம் வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச வருவாயாக வழங்கப்படும் என்ற திட்டம் இந்திய வரலாற்றில் மிக முக்கிய சாதனையாக அமையப் போகிறது. ஏழைகளை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் ஒரு அரசு, வருகின்ற ஜூன் 3 ஆம் தேதிக்குப் பிறகு மத்தியில் அமையப்போகிறது.தமிழக மாணவர்களின் கனவான “நீட்” தேர்வு ரத்து என்ற காங்கிரஸின் வாக்குறுதி எண்ணற்ற இளைஞர்களின் இதயத்தில் பால் வார்க்கிறது.

மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டிடும் வகையில் “பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்பதும், “பள்ளிக் கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்” என்பதும் மாநிலங்களின் தன்மானம் போற்றப்படும் அறிவிப்புகள். “விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்” என்பது கடனில் துடித்துக் கொண்டிருந்த நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் அறிவிப்பாக அமைந்துள்ளது.

இதுதவிர, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்” “ஜி.எஸ்.டி. சட்டம் மறு ஆய்வு செய்யப்படும்” “மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும்” “வேளாண்மைக்கு தனி நிதி நிலை தாக்கல் செய்யப்படும்” என்பன போன்ற காங்கிரஸின் வாக்குறுதிகளும் “நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்துள்ளது தி.மு.க.” என்று கேலியும், கிண்டலும் பேசியவர்களுக்குக் கெட்டியான வாய்ப்பூட்டு போட்டிருக்கிறது.

பாரம்பரியமிக்க மாநிலக் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு மத்தியில் ஆட்சியமைக்கப் போகும் இன்னொரு பாரம்பரியமிக்க தேசியக் கட்சியின் ஒப்புதல் கிடைத்திருப்பது ஏழரைக் கோடி தமிழர்களின் குரலுக்கு காங்கிரஸ் கட்சி அளிக்கும் மதிப்பிற்கும் ஒப்புதலுக்கும் மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது.

“தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு” “மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு” “பட்டியல் இன, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் இருக்கும் காலிப் பணியிடங்களை நிரப்புதல்” “கழிவு அகற்றும் பணிகள் மனித உடல் உழைப்பால் செய்யப்படுவதற்கு மூன்று வருடத்திற்குள் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” போன்ற முத்தான திட்டங்களும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முத்திரை பெற்றிருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் சென்று, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைப் பாதுகாக்கும் தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும் வழங்கியிருக்கிறது!ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே “சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம்” என்ற தலைவர் கலைஞர் அவர்களின் தாரகமந்திரத்திற்கும், பத்தாண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வழிகாட்டியாக இருந்து எண்ணற்ற சாதனைகளை நாட்டுக்கு அர்ப்பணித்த அன்னை சோனியா காந்தி அவர்களின் தொலை நோக்குப் பார்வைக்கும், இந்த நாட்டின் வருங்காலப் பிரதமர் திரு ராகுல் காந்தி அவர்களுக்கு ஏழைகளின் மீதுள்ள ஆழ்ந்த அக்கறைக்கும் சான்றாவணமாகத் திகழ்கிறது.

இனிமேலாவது நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அளித்துள்ளது என்று விதாண்டாவாதம் செய்வோர் அதுபோன்ற கருத்துக்களில் இருந்து விடை பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் சாத்தியக்கூறுகள் மிகுந்தவை என்றும், இந்த வாக்குறுதிகள் எல்லாம் நிச்சயம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தவுடன் ஜூன் மூன்றாம் தேதிக்குப் பிறகு ஒவ்வொன்றாக செயல்பாட்டிற்கு வரும் என்பதையும் ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் உள்ளது.

banner

Related Stories

Related Stories