
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ரெப்போ விகிதத்தை இன்று (அக்.07) 0.25 புள்ளிகள் உயர்த்தி 5.50 சதவீதமாக அதிகரித்து RBI ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்துள்ளார். இது சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட உயர்வாகும்.
வங்கிகளுக்கு குறுகிய கால நிதித் தேவை ஏற்படும் போது, அவை இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து குறிப்பிட்ட பத்திரங்களை அடமானமாக வைத்து கடன் பெறுகின்றன. அந்தக் கடனுக்கு ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டி விகிதமே ரெப்போ வட்டி விகிதம் ஆகும். ரெப்போ விகிதம் மாறும்போது, வங்கிகளின் நிதிச் செலவிலும், அதன் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களுக்கான தனி நபர் கடன், வீட்டுக்கடன்,வாகனக்கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதங்களிலும் மாற்றங்கள் ஏற்படலாம்.
சமீப காலமாக உயர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு, மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்கள் உள்ளிட்ட காரணிகளால் பணவீக்கம் உயர்ந்துள்ளதாகவும், இதனடிப்படையில் ரெப்போ வட்டி விகிதன் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரெப்போ விகிதம் 0.25 புள்ளிகள் உயர்ந்தவுடன் அனைத்து வங்கிகளின் EMI-களும் உடனடியாக அதே அளவில் உயரும் என்று கூற முடியாது. வங்கிகள் தங்களது கடன் வட்டி விகிதங்களை எவ்வாறு மாற்றுகின்றன என்பதையும், கடன் எந்த அளவுகோலுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் பொறுத்தே உண்மையான தாக்கம் அமையும். மேலும் வங்கிகளில் சேமிப்புப் கணக்கு, வைப்புத் தொகை கணக்கிற்கான வட்டி வரவு உயரவும் வாய்ப்புள்ளது.






