
சென்னை, தாம்பரம் பகுதியில் வசித்து வருபவர் சரித்திர பதிவேட்டு குற்றவாளி ஆரோக்கியதாஸ். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், பிரபல ரவுடி எருமையூர் மேத்யூ உள்ளிட்ட பல்வேறு சரித்திர பதிவேடு குற்றவாளிகளுடன் தொடர்பில் ஆரோக்கியதாஸ் இருப்பதாகவும், அந்த நட்பின் மூலம் வரதராஜபுரம், எருமையூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, மற்றும் தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மண் திருடி விற்பனை செய்தும், PERFECT TRANSPORT எனும் பெயரில் நிறுவனம் நடத்தி தொழிலதிபராக செல்வாக்குடன் வலம் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இவருக்கு சூர்யா என்று ஒரு மகனும், 17 வயதில் கல்லூரி படிக்கும் மகளும் உள்ளனர். இந்த சூழலில் காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரதராஜபுரம் பகுதியில் வசித்து வரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரும், இவரது மகளும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் பள்ளியில் இருந்தே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் இருவருக்கும் இடையே திடீரென ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அந்த மாணவி, மாணவனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் தன்னுடன் பேசுமாறும், காதலிக்குமாறும் மாணவிக்கு, அந்த மாணவன் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் தனது தந்தை ஆரோக்கிய தாஸிடம் மாணவி தெரிவிக்கவே, அவரும் மாணவனை எச்சரித்துள்ளார்.
எனினும் மாணவன், மாணவியிடம் மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சம்பவத்தன்று மாணவனை ஆரோக்கியதாஸ், அவரது மகன் சூர்யா, அடியாட்களுடன் வந்து காரில் மாணவனை கடத்தி கத்தியை காண்பித்து கல்லூரி மாணவனை அடித்து தாக்கியதோடு, துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர். மேலும் பல மணி நேரங்களாக காரில் சுற்றித்திரிந்து கல்லூரி மாணவனை துன்புறுத்தி, அதன் பின்னர் வரதராஜபுரம் சுங்கச்சாவடி அருகில் இறக்கி விட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து காரில் கடத்தி தன் மகனை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக கல்லூரி மாணவன் பெற்றோர் சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சரித்திர பதிவேட்டு குற்றவாளி ஆரோக்கியதாசின் வீட்டிற்கு சென்று, தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அதில் துப்பாக்கி கிடைக்கவில்லை.
இதையடுத்து ஆரோக்கியதாஸ் மற்றும் அவரது மகன் சூர்யாவை கைது செய்த போலீசார், கல்லூரி மாணவனை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலைலி, ஒரு சரித்திர பதிவேட்டு குற்றவாளியிடம் துப்பாக்கி எப்படி வந்தது? துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டியதாக கல்லூரி மாணவன் ஒரு நாளுக்கு முன்பாகவே புகார் அளித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் சோமங்கலம் காவல் துறையினர் காலம் தாழ்த்தி அலட்சியமாக இருந்தது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.






