
முரசொலி தலையங்கம் (25-11-2026)
காலத்தின் தேவை ‘குடிஅரசு'..!
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஏந்திய அறிவாயுதமான ‘குடிஅரசு' இதழ், அது வெளியான காலத்தில் எப்படி இருந்ததோ அதே வடிவத்தில் கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார்திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் - திராவிடநாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, தமிழ்நாட்டின் மிக மூத்த ஆய்வாளர் எஸ்.வி. ராஜதுரை உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கெடுத்து உரையாற்றி இருக்கிறார்கள்.
“திராவிட இயக்க வரலாற்றில் இது மிகமிக முக்கியமான நாளாக அமைந்துவிட்டது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவோ கனவுகளோடு குடிஅரசு இதழை நூறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். அதே இதழ், நூறு ஆண்டுகள் கழித்து அதே வடிவத்தோடு 43 தொகுதிகளாக வெளிவருவது திராவிட இயக்கத்தைச் சேர்ந்த நாம் ஒவ்வொருவரும் பெருமையும், பெருமிதமும் கொள்ளும் நாளாக இது அமைந்துள்ளது”என்று குறிப்பிட்ட தி.மு.க. தலைவர் அவர்கள்,
"கல்வியில் - வேலை வாய்ப்பில் - பணியிடங்களில் - வளர்ந்தவர்களுக்குக் கூட இந்தக் கடந்த கால வரலாறு தெரியவில்லை. பிள்ளைகளை நாம் பட்ட கஷ்டம் தெரியாமல் வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைப்பது சரியானதுதான். ஆனால் கடந்த காலம் தெரியாமல் வளர்த்து விடக் கூடாது”என்று குறிப்பிட்டார்கள்.
கடந்த காலம், கடந்த கால வரலாறு தெரியாத தலைமுறையாக இன்றைய தலைமுறை வளர்ந்து விடக் கூடாது. எத்தகைய தாழ்ந்த நிலையில் இருந்த இந்தச் சமூகத்தை தந்தை பெரியார் தனது எழுத்தால், பேச்சால், கருத்தால், போராட்டத்தால் மாற்றிக் காட்டினார் என்பதுஇன்றைய தலைமுறைக்கு உணர்த்துவதற்கு ‘குடிஅரசு' இதழ் இப்போதும் தேவைப்படுகிறது.
1925 ஆம் ஆண்டு வெளியானது ‘குடிஅரசு”. அதுவரை யாரும் பேசாத, பேசத் துணியாத, சிந்திக்காத, மூளையில் தோன்றாத கருத்துகளை பெரியார் அவர்கள் சொன்னார்கள். அனைவருக்கும் உறைக்கும் வகையில் சொன்னார்கள். திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.
“நானே எழுதி, நானே அச்சுக்கோர்த்து, நானே பிழைத்திருத்தம் செய்து, நானே அச்சிட்டு, நானே வெளியிட்டு, யாரும் வாங்காமல் படிக்காமல் போனாலும் நானே படிப்பேன். இதழை நடத்துவதை மட்டும் நிறுத்தமாட்டேன். ஏனென்றால் நான் இதழ் நடத்துவது இன்றைய மனிதர்களுக்காக மட்டுமல்ல, நாளைய இளைஞர்களுக்காக”என்று சொன்னவர் தந்தை பெரியார். இன்றைய இளைஞர்கள் படிக்க வேண்டும், அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ‘குடிஅரசு' இதழ் அச்சு மாறாமல் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.
‘தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா' என்றார் பாவலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இன்று கிடைத்த உரிமைகள், வளர்ச்சிகள், வசதிகள், வாய்ப்புகள் அனைத்தும் தானாய் மாறியதாக, கிடைத்ததாகப் பலரும் நினைக்கிறார்கள். இல்லை, இதற்குப் பின்னால் திராவிட இயக்கம் போன்ற பல்வேறு இயக்கங்கள் இருக்கின்றன. ‘குடி அரசு' போல் பல்வேறு இதழ்கள் இருக்கின்றன. பெரியாரைப் போல பல்வேறு தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.
திராவிட இயக்கம் - குடிஅரசு இதழ் - தந்தை பெரியார் ஆகிய மூன்றுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. யாரும் தொடப் பயந்தவைகளில் இம்மூன்றும் கை வைத்தது.
சமூக நீதி, சாதி ஒழிப்பு, மத எதிர்ப்பு, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, பார்ப்பனத்தன்மைகள் மீதான தாக்குதல், பெண்களுக்குச் சொத்துரிமை, தீண்டாமை ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, அனைத்து பொது இடங்களிலும் பட்டியலினத்தவர்க்கு தடை இருக்கக்கூடாது, நில உரிமை, விதவை மணம், பொதுவடைமை, பொது உரிமை என அந்தக் காலத்தில் பலரும் பேசப் பயந்த பேச்சுகளை பேசத் தொடங்கினார் தந்தை பெரியார்.

‘இதனால் எனக்கு கெட்ட பெயர் வரும், அவமானப்படுத்தப்படுவேன் என்று தெரியும். தெரிந்தே கை வைக்கிறேன். வேறு வழியில்லை. சமரசம், தயவு தாட்சண்யம் பார்த்தால் சீர்திருத்தவாதியாக இருக்க முடியாது. சீர்திருக்கம் செய்ய முடியாது, அத்தகைய சீர்திருத்தம் வெற்றி பெறாது' என்று சொன்னவர் தந்தை பெரியார்.
கசப்புக் கொள்கைகள் மூலமாக இனிப்பு விளைவுகளை ஏற்படுத்தினார் தந்தை பெரியார். அவர் தம் கொள்கைகளை ஆட்சி நிர்வாகத்தில் சட்டங்களாக ஆக்கியவர்கள் பேரறிஞர் அண்ணாவும், தமிழினத் தலைவர் கலைஞரும், திராவிட நாயகன் மு.க.ஸ்டாலினும்.
இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்க நூறு ஆண்டுகளுக்கு முன் அடித்தளம் அமைத்தது ‘குடிஅரசு' இதழ். அதை மீண்டும் பத்தக வடிவில் கொண்டு வருவது காலத்தின் தேவையாகும்.
கல்வி பெற்றவர்கள், - வேலை வாய்ப்பைப் பெற்றவர்கள், - அதிகாரம் பொருந்திய பதவிக்கு வந்தவர்கள், - குறிப்பாக பெண்ணினம் அடைந்த வளர்ச்சி, - ஒடுக்கப்பட்ட மக்கள் அடைந்த உயர்வுகள் அனைத்தையும் இன்று நம் கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறோம். படிக்கக் கூடாது என்று சொல்லப்பட்டவர்கள் - அனைத்துக் கல்வி நிலையங்களிலும் முதலிடத்துக்கு வந்து நிற்கிறார்கள். வீட்டை விட்டு வரக்கூடாது என்றுதடுக்கப்பட்ட பெண்கள் - இன்று உல- கத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். கோவிலுக்குள் கால் வைக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டவர்களின் கரங்கள் இன்று கருவறையில் வழிபாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. அனைத்திலும் முன்னேறி வருகிறது தமிழ்நாடு. இதை இன்றைய தலைமுறைக்கு உணர்த்தியாக வேண்டும்.
பகுத்தறிவு கொண்ட, சுயமரியாதை உணர்வு கொண்ட, ஜாதி ஏற்றத்தாழ்வு அற்ற, மத வேறுபாடுகள் அற்ற, பெண்ணுரிமை கொண்ட ஒருசமத்துவ, - சமதர்ம, - சகோதரத்துவ ‘குடிஅரசு' அமைக்க ‘குடிஅரசு' இதழ் தேவை.
நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு தேவை இருந்தது. நூறு ஆண்டுகள் கழித்தும் ஒரு தேவை இருக்கிறது. காலம் தமிழினத்துக்கான கொடையை உருவாக்கிக் கொடுத்துள்ளது.






