
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சலாமாபாத் பகுதியைச் சேர்ந்த லியாகத் அலி (29). இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் தனது வங்கிக் கணக்கில் உறவினர் அனுப்பி இருந்த ரூ.10 ஆயிரம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றபோது, அவரது கணக்கில் 5 கோடியே 53 லட்சத்து 57 ஆயிரத்து 725 ரூபாய் எதிர்மறை இருப்பு (மைனஸ் பேலன்ஸ்) இருப்பதாகக் காட்டியதால் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, லியாகத் அலி பெயரில் சென்னை மின்ட் பகுதியில் உள்ள பரசுராமன் தெரு முகவரியில் M.S. Traders என்ற நிறுவனம் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வந்ததாகவும், 2024-2025 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி வரியாக ரூ.5 கோடியே 53 லட்சத்து 63 ஆயிரத்து 217 நிலுவையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், சென்னை புரசைவாக்கம் வணிகவரித் துறை உதவி ஆணையர் அலுவலகத்திலிருந்து வரி நிலுவை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வரி செலுத்தாததால் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த லியாகத் அலி, தனக்கு சென்னையில் எந்தவொரு வணிக நிறுவனமும் இல்லை என்றும், தனது ஆவணங்களை மர்ம நபர்கள் முறைகேடாகப் பயன்படுத்தி போலியான ஜிஎஸ்டி பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அன்றாடம் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வரும் தனக்கு, கோடிக்கணக்கில் வரி பாக்கி இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த லியாகத் அலி, தனது ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது வங்கிக் கணக்கில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அப்பாவி மக்களின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி போலி நிறுவனங்களைத் தொடங்கி கோடிக்கணக்கில் ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபடும் கும்பல் உள்ளதா என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
வாணியம்பாடியில் கூலித் தொழிலாளியின் ஆவணங்களைப் பயன்படுத்தி ரூ.5.53 கோடி ஜிஎஸ்டி மோசடி நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






