
ஆணாதிக்கத்தில் தோய்ந்த தொகுதி மறுவரையறை அதிகாரத்தைத் தக்கவைக்க இறுதித் திட்டம் - சித்தார்த் வரதராஜன்
“ஷாஇன்ஷா (மாமன்னர்), ஷா (மகா மந்திரி) ஆட்சியின் வஞ்சக உத்தியைப் பாராட் டித்தான் ஆக வேண்டும். தொகுதி மறுவரையறையை உள்ளே நுழைக்கப் பெண்கள் இடஒதுக்கீட்டை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது, பின்னர், விரிவாக்கப்பட்ட நாடாளுமன்றத்தைப் பயன்படுத்திப் பெண்கள் இடஒதுக்கீட்டின் புரட்சிகரமான மாற்றத்தைத் தட்டிப்பறிக்க முயல்வது –இவைதான் அந்த உத்தி,” என்கிறார் ‘தி வயர்’ இணையத்தள ஆசிரியர்.
மக்களவைத் தொகுதிகளின் தற்போதைய 543 என்ற எண்ணிக்கையை 850 என உயர்த்தும் மோடி அரசின் திட்டத்திற்கும், பெண்கள் இடஒதுக்கீட்டை அந்த விரிவுபடுத்தப்பட்ட மக்களவையோடு இணைப்பதற்கும் பின்னால் ஒரு ஆபத்தான அரசியல் நோக்கம் பதுங்கியிருக்கிறது. மக்கள்தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்குரிய இடங்களின் விகிதத்தை மாற்றுவதன் மூலம் 2029 மக்களவைத் தேர்தலில் எளிதாகப் பெரும்பான்மை பெறும் என்ற கணக்குப் போடுகிறது பாஜக.
இட ஒதுக்கீட்டின் லட்சியம் நீர்த்துப் போகச் செய்ய…
பிற்போக்குத்தனமான ஆண்கள் என்ற முறையில், நரேந்திரமோடியும் அமித் ஷாவும் வேறொரு ஆணா திக்க நோக்கத்தையும் மனதில் கொண்டுள்ளனர். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பதன் புரட்சிகர சாராம்சத்தை நீர்த்துப் போகச் செய்வதே அந்த நோக்கம். பெண்கள் இடஒதுக்கீடு என்றால் பெண்களுக்கா கக் குரல் கொடுப்பது மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் பாலினப் பாகுபாட்டின் காரணமாகத் தகுதியற்ற முறையில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள செல்வாக்குமிக்க ஆண்களை அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஆகும்.
பெண்கள் இட ஒதுக்கீடு தொகுதி மறுவரையறையுடனும், மக்களவை மற்றும் சட்டமன்றங்களைத் தேவையின்றி மிகப் பெரிதாக விரிவுபடுத்துவதனுடனும் இணைக்கப்படுகிறது. இதன் மூலம், மோடி அரசு சேவகம் செய்வது ஆணாதிக்கத்திற்கே. 543 இடங்களைக் கொண்ட அவையில் (தற்போது 86% இடங்களில் இருப்பது ஆண்கள்) மூன்றிலொரு பங்கைப் பெண்களுக்குத் தருவதன் நோக்கம் கட்சிகள் செல்வாக்கு மிக்க ஆண்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிப் பெண்களிடம் ஒப்படைக்கச் செய்வதாக இருக்க வேண்டும்.
ஆனால், அனைவரும் ஆசைப்படத்தக்க சொத்துக்களையும் எவருமே விரும்பாத குற்றப் பின்னணிகளையும் கொண்ட ‘பாகுபலிகள்’ அவையில் தொடர்ந்து நீடிப்பதோடு, அவர்களது சேக்காளிகள் மேலும் அதிகமாக உள்ளே நுழைவதை உறுதிப்படுத்தவே மோடி விரும்புகிறார். இது பெண்களுக்கு உரிய இடங்களை ஒதுக்கீடு செய்கிற வழிமுறை அல்ல.
முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் பெண்கள் உள்ளே நுழைவதால் ஆண்களுக்கு ஏற்படும் இடையூறான ஒவ்வாமையைச் சரிக்கட்டும் ஒரு முயற்சியே இது. தலித்துகளைக் கோவி லுக்குள் அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது, “தங்களுடைய” கோவில்கள் மீதான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்திக்கொள்ள சாதி இந்துக்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் போன்றதே இது.
கட்டப் பஞ்சாயத்து அவையாக
சுருக்கமாகச் சொன்னால், பெரிதாக்கப்பட்ட ஒரு மாளிகையில் பெண்கள் பகுதி என்பதாக உரு வாக்கப்படும் என்கிறார் மோடி. அந்த மாளிகையில் இப்போதிருப்பதை விட அதிகமான ஆண்கள் இருப்பார் கள், பெண்கள் மூன்றிலொரு பங்கு இருப்பார்கள் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், நாடாளுமன்றத் திலும் சட்டமன்றங்களிலும் ஆண்கள் அதிக இடத்தை யும் செல்வாக்கையும் ஆக்கிரமிப்பார்கள். அப்படி அமைகிறபோது, இன்று 362 ஆண்களுடன் 181 பெண்கள் இருப்பதை விட, நாளை 566 ஆண்களுடன் 284 பெண்கள் இருப்பது முற்றிலும் மாறுபட்ட விளை வையே ஏற்படுத்தும்.
பல ஆண் எம்.பி.க்களின் குழுவாத மனப்போக்கை யும், கட்டப் பஞ்சாயத்து போன்ற அணுகுமுறையையும் கருத்தில் கொண்டால், நெருக்கமான அளவைக் கொண்ட 543 உறுப்பினர் மக்களவையை விட, 850 உறுப்பினர்களுடனான மிகப் பெரிய அவையானது, பெண் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையிலும் ஒரு குழுவாகவும் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்குப் பெரும் சவாலான இடமாக மாறிவிடும்.

தொகுதி அளவு ஏன் முக்கியம்?
முன்மொழியப்பட்டுள்ள 131-ஆவது அரசமைப்பு சாசன சட்டத் திருத்தத்தின் முன்வரைவு வெளியாவ தற்கு முன்னதாக, ஒவ்வொரு மாநிலமும் தேர்ந்தெடுக் கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 50% உயரும் என்றும், இதன் மூலம் மாநிலங்களின் ‘குரல்’ பாதுகாக்கப்படும் என்றும் பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள முன்வரைவில் அத்தகைய ‘உறுதிமொழி’ ஏதுமில்லை. அந்த வாதமே சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. 40 எம்.பி.க்களைக் கூடு தலாகப் பெறக்கூடிய உத்தரப் பிரதேசத்தின் ஆதிக்கம், 14 எம்.பி.க்களைக் கூடுதலாகப் பெறக்கூடிய தமிழ்நாட்டை விட மிக அதிகமாக இருக்கும்.
அதாவது, அனைத்து மாநிலங்களுக்கும் 50% இடங்களை உயர்த்தினாலும், அது ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்தும் இந்தி பேசும் மாநிலங்களுக்கே கூடுதல் வலிமையைத் தரும். தற்போதுள்ள 543 எம்.பி.க்கள் என்ற ஏற்பாட்டிலேயே மோடி அரசு மக்களவைக்குரிய விவாதப் பண் பாட்டைப் படிப்படியாகச் சிதைத்துவிட்டது. இப்போது 300 பேரை உள்ளே கொண்டு வருவது அந்தச் செயல்பாடற்ற நிலையை இன்னும் அதிகரிக்கும்.
முந்தைய விரிவாக்கம்
இதற்கு முன் கடைசியாக 1973இல் மக்களவை இடங்க ளின் எண்ணிக்கை 522 என்றிருந்தது, 542 ஆக அதி கரிக்கப்பட்டது. அப்போது 1971 மக்கள் தொகை கணக் கெடுப்பின் அடிப்படையில் மிகச் சிறிய அளவிலேயே மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் செய்யப்பட்ட இந்த மாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடவில்லை. உத்தரப் பிரதேசம் தன் இடங்களை இழக்கவில்லை, தென் மாநிலங்களும் கிழக்கு மாநிலங்களும் முறையே மூன்று இடங்களையும் ஐந்து இடங்களையும் கூடுதலாகப் பெற்றன. இருந்தபோதிலும், இந்த நடவடிக்கையை மீண்டும் மேற்கொள்ள வேண்டாம் என்பதில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் உறுதியாக இருந்தன.
உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் மக்கள் தொகை தென் மாநிலங்களை விட வேகமாக வளர்ந்தாலும், 1971 கணக்கெடுப்பின்படி இடங்களை அதிகரிக்காமல் வைத்திருப்பதில் அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே ஒரு பொதுவான உடன்பாடு இருந்தது. அந்த முடிவில் ஒரு அறநெறி இருந்தது: வடக்கு மாநிலங்களுக்கு அதிக இடங்களை வழங்குவது, கல்வி யிலும் சுகாதாரத்திலும் பொது நலனிலும் முதலீடு செய்து மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களைத் தண்டிப்பதாகிவிடும். மாறாக, இந்தக் களங்களில் முதலீடு செய்யாத மாநிலங்களுக்கு வெகு மதி அளிப்பதாகிவிடும். இந்தியாவின் கூட்டாட்சி மாண்பு ஓர் அரசியல் ஒப்பந்தம்; மாநிலங்களின் பிணைப்பைச் சிதைப்பதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்ற புரிதல்கள் இருந்தன.
இந்தக் கூட்டாட்சித் தத்துவத்தைக் கடந்த பத்தாண்டுகளாகப் பல வழிகளிலும் பாஜக சிதைத்து வரு கிறது. இப்போது, தேர்தல் செயல்முறையிலும் தனது பிடியை இறுக்கமாக்கும் நோக்கில், மோடி அரசு தொகுதி மறுவரையறை எனும் தேன்கூட்டைக் கலைக்கத் துணிகிறது. 1971 மக்கள்தொகை அடிப்படையில் அதிகரிக்கப்பட்ட இடங்களை அப்படியே வைத்திருந்த தன் நோக்கம் முடிந்துவிட்டது என்றும், தற்போதைய மக்கள்தொகை மாற்றங்களும் நகரமயமாக்கலும் காரணமாக இடங்களை மாற்றியமைக்க வேண்டி யுள்ளது என்றும் மோடி அரசாங்கம் வாதிடுகிறது.

மறுவரையறைக்குப் பின்
அரசாங்கம் அமைக்கப் போகும் தொகுதி மறுவரையறை ஆணையம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 307 கூடுதல் இடங்களை மாநிலங்களு க்குப் பிரித்தளிக்கும். மக்கள்தொகையைச் சமன் செய்யும் விதியைப் பின்பற்றினால், 850 இடங்கள் கொண்ட மக்களவை எப்படி இருக்கும் என்பதை ஒரு கணக்கீடு காட்டுகிறது. தென்னிந்தியாவின் இடப்பங்கீடு 23.93%-லிருந்து 20.82%-ஆகக் குறையும்.
இது 3 சதவீதத்திற்கும் அதிக மான வீழ்ச்சியாகும். கிழக்கு இந்தியா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் ஆகியவையும் பாதிப்படையும். இந்தி பேசும் வட மாநிலங்களும், மைய மாநிலங்களும் மகாராஷ்டிரா, குஜராத் ஆகியவையும் பெரும் ஆதாய மடையும். பாஜக வலுவாக உள்ள மாநிலங்களே இதில் ஆதாயமடைகின்றன என்பது தற்செயலானதல்ல.
இதில் ஒளிவுமறைவுப் போக்கு இருப்பதிலும், முறையான கலந்தாய்வுகள் இல்லாததிலும், திடீரென நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டியிருப்பதிலும், இந்த ஏற்பாடுகளை வலுக்கட்டாயமாகத் திணிக்க மோடி அரசு முயல்வதுதான் உறுதிப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையிலான சமநிலையைப் பேணுவதில் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு ஒரு பங்கு உண்டு. ஆனால் அங்கும் மக்கள் தொகை அடிப்படையிலேயே இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. எனவே, மக்களவையில் குரல் வலிமை குறைகிற மாநி லங்களுக்கு மாநிலங்களவை எந்தப் பெரிய பாது காப்பையும் தந்துவிடாது.
நோக்கத்தில் உண்மையிருந்தால்...
இந்தக் குழப்பங்களுக்கு ஒரு சுமுகமான தீர்வை எட்டுவதில் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உண்மையில் ஆர்வம் இருந்திருந்தால், விரிவான விவாதங்களை அனுமதித்திருப்பார்கள். பல அரசியல் தலைவர்களும் அறிஞர்களும் நல்ல ஆலோசனை வழங்கியிருக்கிறார் கள். ஆனால், 2024 பொதுத்தேர்தலில் பாஜக சந்தித்த பின்னடைவுக்குப் பிறகு, மோடியும் அமித்ஷாவும் 2029இல் மீண்டும் ஆட்சிக்கு வர தேர்தல் முறையை எப்படியெல்லாம் மாற்றியமைக்கலாம் என்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.
வளைந்துகொடுப்பதாக விமர்சிக்கப்படும் தேர்தல் ஆணையம், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை அவர்களின் ஆயுதக் கிடங்குத் தளவாடங்கள் போல இருக்கின்றன. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் இதன் அடுத்த கட்ட மாகக்கூடும். ஒன்றைக் குறிப்பிட வேண்டும் – 850 இடங்களைக் கொண்ட மிகப்பெரிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் செலவுகளைச் சந்திக்கும் நிதி வலிமை பாஜக–விடம் மட்டுமே உள்ளது.
நன்றி: தி வயர் தமிழில் : அ.குமரேசன்
நன்றி: தீக்கதிர்






