
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள மாநிலங்களவை எம்.பி பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியிலிருந்து வெற்றி பெற்று பின்னர் தவெக-விற்கு சென்று அமைச்சரவை பதவி வாங்கிய காங்கிரஸ் கட்சிக்கு அந்த மாநிலங்களை எம்.பி பதவியை ஒதுக்கியது தவெக.
காங்கிரஸ் சார்பில், மாநிலங்களவை எம்.பி பதவிக்கு முதல்வர் விஜயின் நெருங்கிய நண்பராண பிரவீன் சக்கரவர்த்தியை வேட்பாளாராக அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.
இந்நிலையில், தன்னை வேட்பாளாராக அறிவிக்க ஆதரவளித்த தவெக-விற்கும் காங்கிரஸ் தலைமைக்கும் நன்றி தெரிவித்து பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்” என பதிவிட்டார்.
இதில் செய்தி என்னவென்றால், இவரே தானாகவே இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக என அனைவரையும் இணைத்து தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணி என இவரே ஒரு பெயரை வைத்து வெளியிட்டார். இதுதான் தற்போது பெரிய பேசுபொருளாகியுள்ளது.
ஒரு அரசியல் கூட்டணி என்றால் கூட்டணி சேரப்போகும் கட்சிகளை அழைத்து ஒருமித்த கருத்து ஏற்படுத்தி, இந்தக் கூட்டணிக்கு இவர்கள் தான் தலைமை, இதுதான் நம்முடைய கொள்கை என நீண்ட நெடிய விவாதங்களுக்குப் பிறகு அனைவரது கருத்துக்களையும் கேட்டு பின்னர் அறிவிப்பார்கள். இதுதான் வழக்கமாக இருக்கும் ஒரு நடைமுறையும் ஜனநாயகப் பண்பும் ஆகும். ஆனால், அதனை காங்கிரஸிடம் எதிர்பார்ப்பது என்பது தவறுதான் இருப்பினும், ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மாநிலங்களவை எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டத்தும் தான், தான் என்ற பண்ணையார்த்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரவீன் சக்கரவர்த்தி.
மாநிலங்களவை இடத்தை ஒதுக்கியது தவெக, வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸ் கட்சி, இதில் எங்கிருந்து வந்தது புதிய கூட்டணி. இடது சாரிகளான CPI, CPIM கட்சிகள் மிகத் தெளிவாக நாங்கள் வெளியிலிருந்து தான் தவெக-விற்கு ஆதரவு தருகிறோம். பதவிக்காகவோ வேறு லாபத்திற்காகவோ இல்லை என மிகத் தெளிவாக கூறியுள்ளது. இதனை மீறியும் பிரவீன் சக்கரவர்த்தி பிற கட்சிகளின் அனுமதி இல்லாமல் இது போன்ற கூட்டணி என அறிவிப்பை சொல்லுகிறார் என்றால், ஆதரவு தெரிவித்த கட்சிகளை என்னவென நினைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆதரவு தெரிவித்துவிட்டதாலேயே இவர்கள் நம் கூட்டணி என முடிவெடுத்து விட்டாரோ? முதலில் கூட்டணியை அறிவிக்க பிரவீன் சக்கரவர்த்திதான் காங்கிரஸின் தேசியத் தலைமையா அல்லது மாநிலத் தலைமையா? என்ற கேள்வி எழுகிறது.
இந்த கூட்டணி அறிவிப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
CPI மூத்த தலைவர் முத்தரசன் இதுகுறித்து, தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தான் தொடர்கிறோம். அதே நிலை தான் இன்றும் தொடர்கிறது.
பிரவீன் சக்கரவர்த்தி பதிவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை நாங்கள் அந்த கூட்டணியில் இல்லை. பா.ஜ.க ஆட்சி வந்து விட கூடாது என்பதற்காக த.வெ.கவிற்கு வெளியிலிருந்து தான் ஆதரவு தெரிவித்துள்ளோம் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு தரப்பினரும் இதற்கு கடுமையான கண்டங்களை தெரிவித்தும் வருகின்றனர்.
இந்த திடீர் கூட்டணி என பிரவீன் சக்கரவர்த்தி அறிவித்துள்ளதற்கு, எதிர்வினையாற்றியுள்ள திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, “தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி” என அறிவிப்பு வெளியிட்டு உள்ள பிரவீன் சக்கரவர்த்திக்கும்
தமிழ்நாட்டுக்கும்,
சமூகநீதிக்கும்,
முற்போக்குக்கும்
ஏதேனும் 1% ஆவது சம்பந்தம் இருந்தால் யாராவது சொல்லுங்க…..
இவர் எப்போதாவது தமிழ்நாடு சார்ந்து…இடஒதுக்கீடு சார்ந்து…
முற்போக்கு சார்ந்து பேசி,எழுதி..
யாராவது பார்த்து இருக்கீர்களா???? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்சியமைக்க ஆதரவு என்றால், இவர்களே ஒரு கூட்டணியே தனியாக அமைத்துக் கொள்கிறது காங்கிரஸ். தனி ராஜாங்கம் என்பது காங்கிரஸோடு நிறுத்திக் கொள்வது அவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் நல்லது. கூட்டணி என பதவிக்காக சென்றவர்கள் புதிய கூட்டணியை அமைப்பதை பார்த்தால் மக்களே சிரிப்பார்கள் மறந்து விடக் கூடாது.






