இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.
இந்நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர் ஆனந்த் மற்றும் கனிமொழி என்.வி.என் சோமு முறையே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு,
தமிழ்நாடு முழுவதும் மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதியில் கேலோ இந்தியா மையங்களை (கேஐசி) திறக்க அரசாங்கம் வகுத்துள்ள திட்டங்கள் குறித்து வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் அவர், கடந்த ஐந்து ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டிலும் இந்த மையங்களில் விளையாட்டு உள்கட்டமைப்பை நிறுவுதல், செயல்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதியின் விவரங்கள் என்ன என்றும் மேலும் இத்திட்டத்தின் நோக்கத்தை மேம்படுத்த ஒன்றிய அரசாங்கத்திடம் உள்ள திட்டங்கள் என்ன என்றும் கேட்டுள்ளார்.
ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான துயர் மிகுந்த சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து மாநிலங்களவையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் அவர் கேட்டுள்ளதாவது :
இந்த விபத்தில் இறந்தவர்கள் / காயமடைந்தவர்களின் எண்ணிக்கை என்ன?
பயணிகள் தவிர மற்றவர்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு எவ்வளவு?
இதுவரை ஒன்றிய அரசு ஏதேனும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா?
இந்த விபத்திற்கு காரணமாக யாரேனும் தனி நபர் அல்லது ஏதேனும் நிறுவனம் செய்த நாசவேலை வெளிச்சத்திற்கு வந்துள்ளதா?
இந்த விபத்துக்கு பொறுப்பானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து நிகழாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?