ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கடந்த மாதம் 22-ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பின்னர் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதால் இருநாட்டு எல்லைகளிலும் போர் பதற்றம் சூழ்ந்தது. இந்த போர் பதற்றம் நீடித்து வந்த நிலையில் திடீரென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போர் நிறுத்தப்பட்டதாக அறிவித்தார். இதன் பிறகுதான் ஒன்றிய அரசே தாக்குதல் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ச்சியாக தன்னால்தான் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டது என கூறியுள்ளார். ஆனால் இதற்கு இதுவரை பிரதமர் மோடியோ அல்லது ஒன்றிய அரசோ விளக்கம் கொடுக்கவில்லை.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் நடந்த காங்கிரஸ் தொழிலாளர் மாநாட்டில் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை தாங்கள்தான் நிறுத்தியதாக அமெரிக்கா கூறிவருகிறது. டிரம்பிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது பிரதமர் மோடிஉடனடியாக சரணடைந்து விட்டார்.
பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் குணம் இதுதான். அவர்கள் மீது கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் போதும் பயப்படுவார்கள். ஆனால், காங்கிரசின் வரலாறு அப்படி அல்ல. அமெரிக்காவின் அச்சுறுத்தலையும் மீறி 1971-இல் இந்தியா பாகிஸ்தானை உடைத்தது. காங்கிரஸின் சிங்கங்கள், வல்லரசுகளுக்கு எதிராகப் போராடுகின்றன அவர்கள் ஒருபோதும் தலை வணங்குவதில்லை” என தெரிவித்துள்ளார்.