உலகம் முழுவதும் தங்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தாலும், இந்தியாவில் தங்கத்துக்கான முக்கியத்துவம் இன்னும் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் நல்ல நாள், திருமணம் போன்ற விசேஷங்கள், அக்ஷய திருதியை போன்ற நாட்களில் கூட மக்கள் தங்கம் வாங்குவர். இப்படியாக தங்கத்தின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனினும் ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்கி வைப்பர். காரணம் எதாவது ஆத்திர அவசரத்துக்கு அதனை அடகு வைத்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று. அதன்படி தற்போதுள்ள நிலவரப்படி பலரும் அவசர பணத்தேவைக்கு தங்களிடம் உள்ள நகைகளை அடகு வைத்து பணத்தை பெற்று வந்தனர். இதில் தனியார் கடைகளில் வட்டி அதிகம் என்பதால், பலரும் வங்கிகளில் வைத்து வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு RBI புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஒருவர் தனது நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்தால், குறித்த காலக்கெடு முடியும் தருவாயில், அதற்கான வட்டியை மட்டும் கட்டிவிட்டு, நகையை மறு அடமானம் வைத்துக்கொள்ளலாம்.
ஆனால் இந்த மே மாதம் முதல் இந்த முறையை ரிசர்வ் வங்கி முற்றிலுமாக மாற்றியது. அதன்படி குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்குள் கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையை திருப்ப வேண்டும். அதற்கு அடுத்த நாளில்தான் அந்த நகையை சம்பந்தப்பட்டவரால் மீண்டும் அடமானம் வைக்க முடியும். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இது பெருவாரிய மக்களை பெருமளவு பாதித்தது. இந்த அதிர்ச்சியில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது ரிசர்வ் வங்கியின் மேலும் ஒரு அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, அதற்கான 9 அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளன.
அதாவது தங்கத்தை அடமானம் வைக்கும்போது வெறும் 75% மட்டுமே பணம் மட்டுமே பெற முடியும். மேலும் அடகு வைக்கப்படும் நகைகளுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என 9 அறிவிப்புகள் மக்கள் தலையில் தற்போது இடியாய் இறங்கியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு நிதியமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :
தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி.
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது. குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து, 75% தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும். அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும்.
அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையைக் கடந்த மாதம் RBI கொண்டு வந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். RBI உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.