தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடந்துவரும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாட்சி, உலகின் பல நாடுகளின் பாராட்டையும், நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்று நாளும் உயர்ந்தோங்கி வளர்ந்து வருகின்றது
இரண்டு முக்கிய தகவல்கள்!
அதற்கான சான்றாவணம் போல் இரண்டு முக்கிய தகவல்களை நாம் சுட்டிக்காட்ட முடியும்.
1. ‘திராவிட மாடல்’ அரசின் காலை உணவுத் திட்டம் பள்ளி மாணவக் குழந்தைகளுக்கு (இது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளில் கூறப்படாதது என்றாலும், கூடுதலான சிறப்பான செயலாகும்).
இதன்மூலம் பிள்ளைகளின் பள்ளி வருகை, வகுப்பில் பசி, மயக்கம் அடையாமல் ஈர்ப்புடன் வகுப்புப் பாடங்கள் கற்றல் வாய்ப்பாகி, கல்வி வளர்ச்சியின் வரலாற்றில் புதிய மைல் கல்லாகி சாதனை புரிந்துள்ளது.
2. அமைதிப் பூங்காவாக திகழ்கின்ற காரணத்தால், வெளிநாட்டு முதலீடுகள், தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவிட பெரும் நிறுவனங்கள், வடநாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் இங்கே வந்து தொழிற்சாலைகளை அமைப்பதினால், பல லட்சம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு படித்து வேலை தேடும் இளைஞர்கள் பலருக்கும் பாலின வேறுபாடின்றி வேலை வாய்ப்புகள் அதிகரித்து, தமிழ்நாட்டின் வருமானம் பெருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாநில அரசின் பொருளாதாரக் கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பது மகத்தான அரசியல் பிழை!
இதைக் கண்டு மகிழ்ந்து, வரவேற்று ஊக்கப்படுத்தவேண்டிய ஒன்றிய அரசு, அதில் உள்ள ஆளுங்கட்சியான பா.ஜ.க. (இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.) எரிச்சலோடு, நிதிப் பங்கீட்டினை நியாயமாக தராது, மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் (Disaster) கால உதவிகளைக்கூட சரியாக போதிய நிதி வழங்காமல் வஞ்சித்து வருகின்ற கொடுமை.
சிறிதும் கூச்சநாச்சமின்றி அரசமைப்புச் சட்ட கூட்டாட்சி நிதிப் பகிர்வு சட்டங்கள் நியாயங்களையே பின்பற்றாமல் புறந்தள்ளி, நிதியைத் தராமல், மாநில அரசின் பொருளாதாரக் கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பது மகத்தான அரசியல் பிழையாகும்.
அரசமைப்புச் சட்ட நெறிகளையும், தத்துவங்களையும் கொச்சைப்படுத்தும் மலிவான அரசியல்!
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்றாகும்” என்பதை உணராமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஆட்சி தங்களது கொள்கையையொட்டி திறமையோடு சாதனைகளைச் செய்கிறதே என்ற மன நோக்காட்டினையே கொண்டு இப்படி நிதி தராமல் தாமதித்து ஏதோ பிச்சையிடுவது போல நடத்துவது, ஜனநாயகத்தையும், பிரமாணம் எடுத்துக்கொண்ட அரசமைப்புச் சட்ட நெறிகளையும், தத்துவங்களையும் கொச்சைப்படுத்தும் மலிவான அரசியல் கீழிறக்கமாகும்.
தமிழ்நாடு அரசுக்கு இழைத்த ஓரவஞ்சனை - பாரபட்சம்!
முன்பும், தேசியப் பேரிடர் நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதி உதவியை தரவில்லை என்ற நிலையில், பட்ஜெட் அறிவிப்பில் தமிழ்நாட்டை அப்பட்டமாக புறக்கணித்து, பட்டினி - பசியேப்பக்காரர்களை பாராமுகத்துடன், நாங்கள் புளியேப்பக்காரர்கள் பக்கமே இருப்போம்; காரணம், அவர்கள்தான் எங்களை ஆதரித்து முட்டுக் கொடுப்பவர்கள் என்பது போன்ற நிலைப்பாட்டைக் கொண்டு, நேற்றுமுன்தினம் ஒன்றிய உள்துறை அமைச்சர் மழை, வெள்ளம், புயல் தேசிய பேரிடர் நிதியினை கூடுதலாக கீழ்க்கண்ட 5 மாநிலங்களுக்கு அளித்திருப்பதில், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய்கூட ஒதுக்கவில்லை. இது திட்டமிட்டு தமிழ்நாடு அரசுக்கு இழைத்த ஓரவஞ்சனையான பாரபட்சம் அல்லாமல், அரசியல் பழிவாங்கும் வன்மத்தின் வெளிப்பாடு இல்லாமல் வேறு என்னவாம்?
இதோ பட்டியல்:
ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ரூ.1,554 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆந்திரா - ரூ.608 கோடி
நாகாலாந்து - ரூ.171 கோடி
ஒடிசா - ரூ.255 கோடி
தெலங்கானா - ரூ.232 கோடி
திரிபுரா - ரூ.289 கோடி.
தமிழ்நாடு மழை, வெள்ளம், புயலால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலம் என்றாலும், ‘ரொட்டி வரும்’ என்று எதிர்பார்த்திருந்த பட்டினியாளர்களுக்கு கற்களைத் தரும் கொடுமைபோல நிகழ்ந்துள்ளது! இது முதல் முறையல்ல!
தமிழ்நாடு தி.மு.க. அரசுக்கு ஒரு செயற்கை நெருக்கடியை ஏற்படுத்துகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
நியாயமாகத் தரவேண்டிய நிதிப் பங்கீட்டுத் தொகைகளையேகூட, வேண்டுமென்றே உரிய காலத்தில் தமிழ்நாட்டிற்குத் தராமல், ஒரு செயற்கை நெருக்கடியை தமிழ்நாடு தி.மு.க. அரசுக்கு ஏற்படுத்துவது!
ஒன்றிய அரசிடம் மாநிலங்கள் கேட்பது பிச்சையா? சலுகையா? இல்லையே! உரிமை! உரிமை!!
நியாயமான அடிப்படையில் தரவுகளைக் காட்டித்தானே இதற்கொரு முடிவு கட்ட தேசிய பேரிடர் நிவாரண நிதியை அளிக்கும் குழுவினர் அரசியலுக்கு அப்பாற்பட்டு நீதி, நேர்மை, பாதிப்பின் தன்மையை நடுநிலை நியாயத்துடன் (Objects) விருப்பு, வெறுப்பற்ற முறையில் மதிப்பீடு செய்து, அளிக்கவேண்டும்; தற்போதுள்ள அரசியல் சார்பு நிலை அடிப்படையை மாற்றினால் மட்டுமே சரியான நீதி பாதிப்படைந்தவர்களுக்குக் கிடைக்கும்.
திரு.பி.வில்சன் எம்.பி.,யின் வரவேற்கத்தக்க முயற்சி!
தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்குரைஞரும், சட்ட வல்லுநருமான திரு.பி.வில்சன் எம்.பி., அவர்கள் ஒரு தனி நபர் மசோதாவை, இந்தப் பேரிடர் நிதி வழங்கும் சட்டத் திருத்தமாக முன்பே ஒன்றை அளித்துள்ளார். அதை ஒன்றிய அரசு ஒதுக்கியே வைத்துள்ளது ஏனோ?
“The Disaster Management Act 2025” என்பதைத் திருத்திடவேண்டும் என்பதே அதன் நோக்கம்.
பிரதமரும், பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்களே இந்த தேசிய பேரிடர் நிவாரண நிதிக் குழு உறுப்பினர்களாக இருந்து, பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதை மாற்றி, பாதிக்கப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து, ஒரு பொதுமையை உருவாக்கி, 30 நாள்களுக்குள் உரிய நிதி அளிப்பதுபோன்ற பல கருத்தினை உள்ளடக்கியது அத் தனிநபர் மசோதா.
அதனை, பொதுவாக ஒருவகை அமைத்தலை வற்புறுத்தியுள்ளது. வரவேற்கத்தக்க முயற்சி!
இந்த நிதி அளிப்பை ஓர் ‘‘அரசியல் தூண்டிலாக்கி’’, விருப்பு, வெறுப்புகளின் வெளிப்பாடுகளாக்கி, நிதி நிர்வாகத்தின் நேர்மையை குலைக்கலாமா? கூட்டாட்சியின் இலட்சணமா? இது மக்களின் வரிப் பணம் வருவாய்மூலம் வருவது!
யாருடைய தனிப்பட்ட நன்கொடைமூலமும் அல்ல என்பதை உணர்ந்திடவேண்டும். இதனை பல கட்சிகளும், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அமைப்புகளும் வலியுறுத்தவேண்டும். இதுபற்றிய விரிவான விளக்கங்களையும், பரப்புரைகளையும் கற்றவர்களும், மற்றவர்களும் எடுத்துரைக்கவேண்டும்.
நாட்டு நலனை அலட்சியப்படுத்துவதாகும்!
இது ஓர் ஆளுங்கட்சிப் பிரச்சினை என்று அலட்சியமாய் எண்ணுவது நாட்டு நலனை அலட்சியப்படுத்துவதாகும்!
உரிமைகளைக்கூட சலுகைகளாகப்பார்ப்பதா? மாநிலங்களை, ஒன்றிய அரசு ஏதோ கப்பம் கட்டும் பழைய கால சிற்றரசுகளாகவும், தர்பார் நடத்தும் ஏகாதிபத்திய சக்ரவர்த்திகளாகவும், டெல்லி எஜமானர்கள் நினைத்துக் கொண்டு செயல்படுவது அரசமைப்புச் சட்டத்திற்கு நேர் முரணாகும்.
மக்களாகிய நமக்கு நாமே தந்த இந்த அரசமைப்புச் சட்டம் முழு இறையாண்மையை (மக்கள்) உடைய ஜனநாயக குடியரசு - Sovereign, Socialist, Secular Democratic Republic என்ற முகப்புரையை அவர்களுக்கு நினைவூட்டுவது மக்கள் கடமையாகும்.
மக்கள் சிந்திக்கட்டும்.