ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களையே அமல்படுத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ’இந்து ராஷ்டிரம்’ என்ற கனவை நிறைவேற்றவே மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு செயல்படுகிறது.
இதனை உறுதி செய்யும் வகையில் தற்போது மீண்டும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது.
அதிலும் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அவசர அவசரமாக நள்ளிரவு 2 மணி விரை விவாதம் நடத்தி இஸ்லாமிய மக்களுக்கு எதிரான இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மக்கள் நாடுமுழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில், வக்ஃப் மசோதா நகலை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை நாங்கள் நிராகரிக்கிறோம் என முழக்கமிட்டு, பதாகைகளை ஏந்தி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் அஹமதாபாத்தில் சாலையில் அமைந்து இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலிஸார் அவலுக்கட்டாயமாக அகற்ற முயற்சித்தபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களான உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகிறது.