இந்தியா

”மாநிலங்களுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும் ஒன்றிய அரசு” : மாநிலங்களவையில் திமுக MP வில்சன் குற்றச்சாட்டு!

மாநிலங்களுக்கு, ஒன்றிய அரசு நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது என தி.மு.க MP வில்சன் குற்றம்சாட்டியுள்ளார்.

”மாநிலங்களுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும் ஒன்றிய அரசு” : மாநிலங்களவையில் திமுக MP வில்சன் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய தி.மு.க MP வில்சன், "ஒன்றிய அரசினால் புறக்கணிப்பையும், ஏற்றத்தாழ்வையும் தமிழ்நாடு தொடர்ந்து சந்தித்து வருவதால், பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் முடங்கியுள்ளன.

புதிய ஜிஎஸ்டி நடைமுறையின் கீழ் வாக்குறுதியளிக்கப்பட்ட இழப்பீட்டு பொறிமுறை, 2022-ல் ஒன்றிய அரசால் திடீரென நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. செஸ் மற்றும் கூடுதல் கட்டண வரிகளை ஒன்றிய அரசு அதிக அளவில் சார்ந்திருக்கும் போக்கானது, பகிர்ந்தளிக்கக்கூடிய வரிகளில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு கிடைப்பதை கடுமையாக கட்டுப்படுத்தியுள்ளது. 2022-23 நிதியாண்டில், ஒன்றிய அரசு செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்கள் மூலம் ₹5.1 லட்சம் கோடியை வசூலித்தது.

இந்த வசூல் பங்கீடு செய்யக்கூடிய தொகுப்பில் சேர்க்கப்பட்டிருந்தால், தமிழகத்திற்கு ஒரு வருடத்தில் கூடுதலாக ரூ.20,800 கோடி கிடைத்திருக்கும். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3 சதவீதம் உச்சவரம்பு என்பது போன்ற மாநிலங்கள் கடன் பெறும் திறனுக்கான நியாயமற்ற வரம்புகள், கடந்த நான்கு ஆண்டுகளில் கடன் வாங்குவதில் ₹ 8,500 கோடி இழப்புக்கு வழிவகுத்துள்ளன. இது முக்கிய பொது உள்கட்டமைப்பு மற்றும் நலத்திட்டங்களுக்கு நிதியளிக்கும் தமிழ்நாட்டின் திறனை பாதிக்கிறது. 2023-24 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில், வெறும் 2.5% மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது, இது போதுமானதல்ல.

ஒன்றிய அரசால் நிதியளிக்கப்படும் திட்டங்களுக்கான சுமையை மாநில அரசின் மீது ஒன்றிய அரசு படிப்படியாக மாற்றி வருகிறது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் கூற வேண்டுமென்றால், மலிவு விலை வீடுகள் திட்டத்தில் (Affordable Housing in Partnership) ஒன்றிய அரசு ஒரு வீட்டிற்கு ரூ.1.5 லட்சமும், தமிழக அரசு ரூ .12-14 லட்சமும் பங்களிக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கான மொத்த ஒதுக்கீடு என்பது உத்தரபிரதேசத்திற்கான ஒரு வருட ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு சமமானதாக உள்ளது. போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் பல்வேறு முக்கிய ரயில்வே திட்டங்கள் முடங்கியுள்ளன.

தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளாக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் எதற்கும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. ராமேசுவரத்தை முக்கியச் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் திட்டத்திற்கு ரூ.99 கோடி, மாமல்லபுரம் கடற்கரை கோயில் நந்தவனம் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.30 கோடி, நீலகிரி மாவட்டம் பைக்காராவில் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டத்துக்கு 28.3 கோடி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களுக்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் ஒன்றிய அரசின் உடனடி கவனம் இதற்கு தேவைப்படுகிறது.

மேலும், பரந்தூர் விமான நிலையம், ஓசூர் விமான நிலையம், கிரீன்ஃபீல்ட் கடலூர் துறைமுகம், கோவை, மதுரை மற்றும் ஓசூர் மெட்ரோ திட்டங்கள், கோவை, திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்புதல் மற்றும் பணிகளை ஒன்றிய அரசு விரைவுபடுத்த வேண்டும். தமிழ்நாடு நீண்ட காலமாக இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாக இருந்து வருகிறது.

ஆயினும்கூட, மாநிலத்திற்கு உரிமையான நிதியினையும் மற்றும் ஆதரவையும் திட்டமிட்டு மறுப்பது மாநிலத்தின் நிதிநிலையை பெரிதும் பாதிக்கிறது. எனவே, இப்பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணும் வகையில், தமிழ்நாட்டிற்கு நியாயமான நிதிப்பங்களிப்பையும் - ஆதரவையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories