
பெண்கள் நலம், அனைவருக்குமான அடிப்படை வசதி, பொருளாதார முன்னேற்றம், குற்றமற்ற நாடு, ஊழலற்ற நாடு என மேடைக்கு மேடை பேசும் பா.ஜ.க.வினர் தான், மேற்குறிப்பிட்ட அனைத்திற்கும் எதிராக செயல்படுவதில் முதன்மையாளர்களாக இருக்கின்றனர்.
அதனை மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்தும் வகையில், உத்தரப் பிரதேசத்தின் பிரபல கொலை - கொள்ளைக்காரரும், அரசியலாளருமான அபாஸ் அன்சாரிக்கு வழங்கப்பட்டிருக்கிற பிணை (bail) அமைந்துள்ளது.
அபாஸ் அன்சாரி என்பவர் உத்தரப் பிரதேசத்தின் பிரபல ரெளடி மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்றவர். பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருக்கும் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியை சார்ந்தவர். இஸ்லாமிய சமூகத்தை சார்ந்திருந்தும், இஸ்லாமிய நலன் குறித்து பெரிதும் கவலை கொள்ளாதவர். அதன் காரணமாகவே, பல்வேறு குற்றங்களில் கவலை இல்லாமல் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், அவர் சட்டவிரோதமாக ஆயுதங்களை கையாண்டதாக கைது செய்யப்பட நேரிட்டது. எனினும் அதிலிருந்து சில மாதங்களில் தன்னை பா.ஜ.க. என்ற பாதை வழி, தன்னை காத்துக்கொண்டுள்ளார்.
குற்றவாளியாக ஒருத்தர் இருக்கிறார் என்றால், அவர் செய்த குற்றத்திற்கான தண்டனையை பெருமளவில் குறைக்க அல்லது முழுமையாக விடுதலை பெற, ஒரே ஒரு செயலை மேற்கொண்டால் போதுமானது. அது, பா.ஜ.க.வுடன் இணைந்து, பணியாற்றுவதே என்பதும் இந்நிகழ்வின் வழி அம்பலமாகி இருக்கிறது.
இந்த நிலை, பா.ஜ.க ஆளும் அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது என்றாலும், உத்தரப் பிரதேசத்தில் சற்று கூடுதலாகவே காணப்படுகிறது.

அபாஸ் அன்சாரி போன்று பிரிஷ் பூஷன், ஆஷிஷ் மிஷ்ரா போன்ற பலரும், பா.ஜ.க.வினால் ஏற்படுத்தப்படும் சட்ட ஓட்டைகளுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றனர். இவர்களுக்கிடையில் உள்ள சில ஒற்றுமைகள் என்னவென்றால், இவர்கள் அனைவரும் மாபெரும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், அதிகாரபலம் உள்ளவர்கள், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவை அனைத்தையும் கடந்து, பா.ஜ.க உடன் நெருக்கத்தில் உள்ளவர்கள்.
பிரிஜ் பூஷன், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த போது, பெண் வீராங்கணைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவர். பாபர் மசூதி இடிப்பில் முக்கிய பங்காற்றியவர். பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்குபவர்.
ஆஷிஷ் மிஷ்ரா, உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன். வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமைதி வழியில் பேரணி மேற்கொண்ட விவசாயிகளை மகிழுந்து ஏற்றி கொன்றவர்.
இவர்கள் எல்லாம், பா.ஜ.க.வை பொறுத்தமட்டில் நிரபராதிகள், பா.ஜ.க.வின் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் அனைவரும் குற்றவாளிகள், அடிமைகள்.
அதன் காரணமாகவே, உத்தரப் பிரதேசத்தில், பிரிஷ் பூஷன் போன்றோர் ஆட்சி செய்பவர்களாகவும், மக்கள் நலன் கருதி செயல்பட்டு வருபவர்கள் சிறையிலும் தங்களது வாழ்வை கழிக்கின்றனர்.








