அரசியல்

பாசிசத்தின் அழிவு நோக்கி, “உத்தரப் பிரதேசம்” : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

ஆதிக்க அதிகாரம் கொண்டு, மக்களை எவ்வாறு வேண்டுமானாலும், அடக்கி ஆளலாம் என்பதை, 21 ஆம் நூற்றாண்டிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது உத்தரப் பிரதேச பா.ஜ.க. அரசு.

பாசிசத்தின் அழிவு நோக்கி, “உத்தரப் பிரதேசம்” : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மனித குலத்தின் ஆதாரவேராக இருக்கும் காதலுக்கு சின்னம் அமைத்திருக்கும் மாநிலம். உலகின் அதிசயங்களை பார்க்க விரும்பும் எவராலும் தவிர்க்க முடியாத மாநிலம் என எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும், அதன் எதிர்மறை நிகழ்வுகளே உத்தரப் பிரதேசத்தை ஆட்கொண்டிருக்கிறது.

இந்தியப் பிரதமர் யார் என்று தீர்மானிப்பதில், முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக விளங்கும் உத்தரப் பிரதேசம், மக்களவையில் 80 தொகுதிகளை கொண்டு, தமிழ்நாட்டின் அதிகாரத்தை விட இரட்டிப்பு அதிகாரத்தை கொண்டுள்ளது.

எனினும், அதிகாரத்தை எவ்வாறு தவறாக பயன்படுத்தலாம், அதன் வழி எவ்வாறு வீழ்ச்சியடையலாம் என்பதே உத்தரப் பிரதேசத்தின் வரலாறாகவும் அமைந்திருக்கிறது.

நிலப்பரப்பில், 4 ஆவது இடத்தில் இருப்பினும், மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் உத்தரப் பிரதேசம், குற்றங்களிலும் முன்னிலையே வகித்து வருகிறது.

பாசிசத்தின் அழிவு நோக்கி, “உத்தரப் பிரதேசம்” : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

ஆங்கிலேயார் ஆட்சிக்கு முன், சுமார் 320 ஆண்டுகள் தில்லி சுல்தான்களாலும், பின் முகலாயர்களாலும் ஆட்சி செய்யப்பட்ட இப்பகுதி, ஆங்கிலேயர் ஆட்சியில் ஆக்ரா மாகாணம், வடமேற்கு மாகாணம், ஐக்கிய மாகாணம் என பல பெயர்களில் அடையாளப்படுத்தப்பட்டு வந்தது.

இதனையடுத்து, இந்தியா விடுதலையடைந்ததற்கு பின், 24 ஜனவரி 1950 அன்று, மாநிலமாக அங்கீகாரம் பெற்று, உத்தரப் பிரதேசம் என பெயரிடப்பட்டது.

இதிலிருந்து 2000 ஆம் ஆண்டு, உத்தராகண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டது.

எனினும், இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை (சுமார் 24 கோடி) கொண்ட மாநிலமாக விளங்கும் உத்தரப் பிரதேசத்திற்கு தான், இந்தியாவில் வேறெந்த மாநிலத்திற்கும் தரப்படாத சிறப்பு அதிகாரங்களையும், நிதிகளையும் வழங்கி வருகிறது ஒன்றிய பா.ஜ.க.

காரணம், இந்து சமய மூதாதையர்களின் பிறப்பிடம் என்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வினரால் அடையாளப்படுத்தப்படும் உத்தரப் பிரதேசம் தான், மதவாத அரசியலுக்கும் சரியான இடமாக அமையப்பெற்றிருக்கிறது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், இந்திய தேசியத்தின் சராசரியை விட, உத்தரப் பிரதேசத்தில் தான் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை விழுக்காடு அதிகம் உள்ளது.

மக்கள் தொகைக்கு ஏற்ப, அம்மாநிலத்தில், ஆகச்சிறந்த இஸ்லாமிய சமயம் சார்ந்த கட்டடங்களும் அதிகமாகவே இருந்து வந்தது. அதில், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் நினைவுக்கட்டிடமும் அடங்கியுள்ளது.

இந்நிலையில், காசி உள்ளிட்ட இந்து சமய ஆலையங்கள் இருக்கும் ஓர் இடத்தில், இஸ்லாமியர்களுக்கும் சம உரிமை வழங்கப்படுவதை பொறுத்துக்கொள்ளாத, இந்துத்துவவாதிகளான ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. இஸ்லாமிய சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்க பல்வேறு குறுக்கு வழிகளை கையாண்டு வருகின்றனர்.

அவற்றில் முதன்மை சிக்கலாக தென்படுவது பாபர் மசூதி இடிப்பு. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் கட்டப்பட்ட, இஸ்லாமிய மசூதி அமைந்திருக்கும் இடத்தில் தான், ராமர் பிறந்தார் என்றும், அங்கு தான் ராமருக்கு கோவில் கட்டப்பட வேண்டும் என்றும், இந்தியா விடுதலையடைந்ததிலிருந்து முழக்கங்கள் வலுத்தன.

1949ஆம் ஆண்டு, மசூதிக்குள் சிலரால் ராமர் சிலை வைக்கப்பட்டதாக, அப்போது வன்முறை வலுத்த போதும், அது குறித்த விசாரணை மேற்கொள்ளப்படாமல், அம்மசூதியை மூடியது அப்போதைய அரசு.

அதன் பிறகு, பெரிதளவில் வலுக்கப்படாத இச்சிக்கல், 1992-இல் வெடித்தது. பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி தலைமையில், ஆயிரக்கணக்கான இந்துத்துவவாதிகள் பாபர் மசூதியை முற்றுகையிட்டு, இடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தில், சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் இறக்கவும் நேரிட்டது.

பாசிசத்தின் அழிவு நோக்கி, “உத்தரப் பிரதேசம்” : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

மனித சமூகமே, வெட்கப்பட வேண்டிய, இவ்வகையான வெளிப்படை பாசிச செயல் அரங்கேறிய போதும் கூட, குற்றம் செய்தவர்களுக்கு அதற்குரிய தண்டனைகள் வழங்கப்படவில்லை.

மாற்றாக, மசூதியை இடிக்க முக்கிய காரணமாய் இருந்த அத்வானி, பிரிஜ் பூஷன் போன்றோர் மிகப்பெரிய பதவிகளுக்கு சொந்தக்காரர்களாக தான் உருமாறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 30 ஆண்டுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டும், இறுதியில் அநீதியே தலை தூக்கியது.

பாபர் மசூதியின் நிர்வாகிகள், முகலாயர் காலத்தில் கட்டி எழுப்பப்பட்ட மசூதியின் அதிகாரப்பூர்வ கோப்புகளை, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையிலும், எவ்வித ஆதாரமுமில்லாத ஆர்.எஸ்.எஸ் தரப்பினருக்கு ஆதரவாக, அங்கு தான் ராமர் பிறந்தார் என்று தீர்ப்பளித்து, அங்கு பாபர் மசூதி முழுமையாக இடித்து, ராமர் மசூதி கட்டிக்கொள்ளலாம் என ஒப்புதல் அளித்தது உச்சநீதிமன்றம்.

இதனையடுத்து, அவசர அவசரமாக மசூதியை இடித்து, அங்கு பிரம்மாண்ட அளவில் ராமர் மசூதியை கட்டி எழுப்ப, ஒன்றிய அரசே முழு வேலைகளையும் செய்தது.

கடந்த ஜனவரி 22 அன்று, ராமர் கோவில் கட்டிடம் முழுமையடையாத நிலையில், அதனை மோடி தலைமையில் திறக்கவும் செய்தது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க கும்பல்.

திறப்பு நிகழ்விற்காக, பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டு, தில்லியின் முதன்மை அரசு மருத்துவமனைகளுக்கும் அரை நாள் விடுமுறை விடுத்தது ஒன்றிய பா.ஜ.க.

இதனால், சுமார் 33,500 நோயாளிகளுக்கு சிகிச்சை தாமதமாகி கடும் அவதிக்குள்ளாகினர்.

ஒரு மதத்தின் ஆலயத்தை இடிப்பது தவறு என்ற சிறிதளவு குற்றவுணர்ச்சியும் இல்லாமல், ஒரு மத நிகழ்வை, ஒட்டு மொத்த மதச்சார்பற்ற நாட்டின் நிகழ்வாக மாற்றி, பல்வேறு கலவரங்களுக்கும் வித்திட்டது பா.ஜ.க.

திறப்பு நாளில், எண்ணற்ற சிறுபான்மையினர் கைதும் அரங்கேறியது. அது மட்டுமல்லாது, சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழங்க வேண்டும் என பாசிசக்காரர்களால் கட்டாயப்படுத்தப்பட்டது.

மற்ற மதத்தினர் இந்தியாவிலேயே இல்லாதது போல, நாடெங்கும் உள்ள பச்சை கொடிகளும், வெள்ளை கொடிகளும் நீக்கப்பட்டு, காவிகள் நிறுவப்பட்டன.

இஸ்லாமிய மசூதியை இடித்து கட்டப்பட்ட கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, கிறிஸ்தவ ஆலையங்களிலும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ ஒலிக்க செய்தனர், யோகி ஆதித்யநாத் சார்ந்துள்ள இந்துத்துவ குழுக்கள்.

இவ்வாறு ராமர் கோவில் திறப்பின் போது நிகழ்ந்த அட்டூழியங்களை பட்டியலிட இந்த ஒரு கட்டுரை போதாது.

இந்த சிக்கல் ஒரு புறம் இருக்க, பாபர் மசூதியை மட்டும் இடித்தால் போதாது, மதுரா மற்றும் ஞானவாபி ஆகிய மசூதிகளும் இந்துக்களுக்கே உரிமையுடையது என கூச்சலிட்டு வருகின்றனர் பா.ஜ.க.வினர். அவர்களின் கூச்சல்களுக்கு சாதகமான நடவடிக்கைகளும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், உத்தரப் பிரதேச பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கம், சிறுபான்மையினர்களை ஒழிப்பது மட்டுமல்ல, விவசாயிகளை ஒடுக்குவதும் தான், எதிர்மறை கருத்துகள் உள்ளவர்களை அடக்குவதும் தான் என அண்மை நிகழ்வுகள் தெரிவிக்கின்றன.

அதன் படி, நொய்டா நகரில், விவசாய நிலங்கள் கையகப்படுத்தம், விவசாயிகளுக்கு எதிரான வன்முறைகள் ஆகியவை அதிகரித்து வருகின்றன. பஞ்சாப் விவசாயிகள் ‘டெல்லி சலோ’ என்ற முழக்கத்தோடு போராடி வருவது போல, உத்தரப் பிரதேச விவசாயிகளும் தங்களின் வாழ்வாதாரத்தை காத்திட போராடி கொண்டிருக்கின்றனர்.

பாசிசத்தின் அழிவு நோக்கி, “உத்தரப் பிரதேசம்” : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

இது போல, இரு ஆண்டுகளுக்கு முன், மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து போராடியதில் உத்தரப் பிரதேச விவசாயிகள் பெரும் பங்கு உண்டு. ஆனால், அப்போதும் கூட, அமைதி வழியில் பேரணியாக சென்ற விவசாயிகளை மகிழுந்து ஏற்றி கொன்றார் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஷ்ரா மகன் ஆஷிஷ் மிஷ்ரா.

இச்சம்பவத்தில், விவசாயிகள் மட்டுமல்லாது ஒரு செய்தியாளரும் கொல்லப்பட்டார். எனினும், பா.ஜ.க.வின் வழக்கமான தந்திரத்தை வைத்து, அதிலும் பா.ஜ.க.வின் நிர்வாகிகள் தப்பித்து கொண்டனர்.

இத்தனை கொடுமைகளை இழைத்து வரும் உத்தரப் பிரதேச பா.ஜ.க அரசு எண்ணற்ற முதலீடுகளை பெறுவதாக, மோடியும், யோகியும் மாறி மாறி ஊடகத்தில் காட்சிப் படுத்தும் வேளையில், இந்தியாவில் பொருளாதாரம் பின்னடைய முக்கிய காரணியாகவும் உத்தரப் பிரதேசம் தான் இருந்து வருகிறது என உலகளாவிய பொருளியல் வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பொருளியல் வீழ்ச்சியால், வேலைவாய்ப்பின்மை அதிகரித்த நிலையிலும், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தாமல், வேலையின்றி திண்டாடும் மக்களின் நேரங்களை தான் வீணடித்து வருகிறது பா.ஜ.க.

உத்தரப் பிரதேசத்தின், துணை நிலை காவலர் பணியில் சுமார் 65,000 வெற்றிடங்கள் உள்ளன என்று மாநில அரசு அறிவித்ததையடுத்து, சுமார் 45 இலட்சம் பேர் அரசுப் பணிக்கான தேர்வை எழுதினர்.

இதனையடுத்து, 45 இலட்சம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களில், குறைந்தது 65 ஆயிரம் பேருக்காவது, பணி கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருந்தவர்களுக்கு, மேலும் ஒரு அடியாக, “தேர்வு முறையில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. ஆதலால், எழுதப்பட்ட தேர்வு கணக்கிடப்படாது. மீண்டும் தேர்வு நடத்தப்படும்” என தெரிவித்து, ஏமாற்றத்தை விளைத்துள்ளது அம்மாநில அரசு.

ஏற்கனவே, சிறுபான்மையினர்கள் தகுந்த இட ஒதுக்கீடின்றி திண்டாடி வரும் மாநிலத்தில், கிடைக்கின்ற வாய்ப்பிலும் பல்வேறு குழப்பங்களை உண்டாக்கி வருகிற மாநில அரசிற்கு, ‘தகுதியற்ற அரசு’ என்ற பெயர்சூட்டி, கண்டனத்தை வெளிக்காட்டி வருகின்றனர் மக்கள்.

அதன் ஒரு பகுதி தான் பெரியார் பிறந்த நாளை அங்கிருக்கும் தலித் அமைப்புகள் கொண்டாடிய நிகழ்வு. ஆனால் அதைக்கூட பொருத்துக்கொள்ள முடியாத பாசிசவாதிகள், அவர்களை ஒடுக்கி கைது செய்தது. இதன் வழி, காவிக்கு மாற்று கருப்பு தான் என்பதை உத்தரப் பிரதேச மக்கள் உணர்ந்து இருக்கின்றனர்.

இதன் வழி, பா.ஜ.க எனும் தகுதியற்றவர்களை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். பாசிச பிற்போக்காளர்களிடமிருந்து இந்தியாவை மீட்கும் பணிகளில் தங்களை ஈடுபடுத்த தொடங்கியுள்ளனர் என்பதற்கான எடுத்துக்காட்டாக தான் இந்திய கூட்டணிக்கு உத்தரப் பிரதேசத்தில் கிடைத்திருக்கும் வரவேற்பு காணப்படுகிறது.

banner

Related Stories

Related Stories