கேரளாவில் தற்போது வளர்ந்து வரும் பிரபலமாக இருப்பவர் நடிகை நந்திதா சங்கரா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி வீடியோ, புகைப்படம் என வெளியிடுவது உண்டு. இவர் ஒரு மாடல் அழகியாவார்.
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நந்திதா, திருச்சூரிலிருந்து கொச்சி செல்வதற்காக பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது அருகில் சவாத் ஷா என்ற 28 வயது இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்துள்ளார். அருகே அமர்ந்திருந்ததால், அந்த இளைஞர் இவரிடம் பேச்சு கொடுத்தார். இருவரும் பேசி கொண்டே வந்த நிலையில், திடீரென அந்த இளைஞர் நந்திதா மேல் கை வைத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் மற்றோரு கையால் அவர் சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை கண்டதும் அதிர்ந்த நந்திதா, உடனே தனது மொபைல் போனில் இதனை வீடியோவாக எடுத்துள்ளார். மேலும் அவரிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சண்டையை கண்ட நடத்துநர், என்ன என்று அருகே வந்து கேட்கவே, நந்திதா நடந்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து ஓட்டுநர், மற்றும் நடத்துநர் உடனே அந்த இளைஞரை அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்க எண்ணினர். ஆனால் அந்த இளைஞர் பேருந்தில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனை கண்டதும், அந்த இளைஞரை அனைவரும் பிடித்து வைத்து போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து நந்திதாவும், அந்த இளைஞர் மேல் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அந்த இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், சாவத் ஷாவு தனக்கு ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் சாவத் ஷாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி ஜூன் 2ஆம் தேதி எர்ணாக்குளத்தில் உள்ள ஆலுவா சப்ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் சாவத் ஷா.
இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த சாவத் ஷாவுக்கு கேரளாவை சேர்ந்த ஆண்கள் சங்கத்தினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். மேலும் தன்னை பிரபலமாக்க வேண்டும் என்பதால் தான் அந்த பெண், சாவத் மீது புகார் அளித்ததாக ஆண்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டினர். பாலியல் குற்றத்தில் சிக்கி சிறை சென்ற நபருக்கு வரவேற்பளித்த ஆண்கள் சங்கத்தினருக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது.