ராஜஸ்தான் மாநிலம் பளி என்ற பகுதியை அடுத்துள்ளது சாரதானா என்ற கிராமம். இங்கு சாந்தி தேவி என்ற 65 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். அந்த பகுதியில் கால்நடைகளை பராமரித்து விவசாயம் செய்து வரும் இவர், அக்கம்பக்கத்தில் இருக்கும் வயல்வெளிகளில் புற்கள் பறிக்க செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வயல் பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கே வந்த இளைஞர் ஒருவர் அந்த மூதாட்டியை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அவரை அருகில் இருந்த கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் மூதாட்டியின் உடலை அந்த இளைஞர் அறுத்து சாப்பிட தொடங்கியுள்ளார். இளைஞர் சாப்பிட்டு கொண்டிருந்தபோது அந்த பகுதியில் பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது இதனை கண்டு அதிர்ச்சியடைந்து கத்தி கூச்சலிட்டு தலைதெறிக்க ஓடினார்.
அந்த பெண் ஓடுவதை கண்ட அந்த பகுதி மக்கள் என்ன என்று விசாரிக்கையில், நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த ஊர் மக்கள் உடனே அங்கு வந்தனர். ஊர் மக்கள் வருவதை கண்ட அந்த இளைஞர், அங்கிருந்து தப்பியோட முயன்றார். இருப்பினும் அந்த இளைஞரை துரத்தி பிடித்த ஊர் மக்கள் கட்டிப்போட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததோடு இளைஞரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இளைஞர் மும்பை சேர்ந்த சுரேந்திர தாகூர் (24) என்பது தெரியவந்தது. மேலும் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தெருநாய் கடித்ததால் நோய் தொற்று ஏற்பட்டு அதற்கான உரிய சிகிச்சை எடுக்கப்படமால் மனநலம் பாதிக்கப்பட்டு இவ்வாறு நடந்துகொள்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளைஞருக்கு சிகிச்சையா நிறைவடைந்ததும் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர். கூலி வேலை பார்க்க சென்ற 65 வயது மூதாட்டியை கொன்று சாப்பிட்ட இளைஞரின் செயல் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.