
திருமணத்தின் போது நண்பர்கள், உறவினர்களால் வழங்கப்பட்ட பரிசு பொருட்களை பிரித்து பார்த்த போது அதில் இருந்த ஒரு பரிசை பிரித்த போது அது வெடித்து சிதறியதில் புது மணமகன் மற்றும் அவரது உறவுக்கார சிறுவனுக்கு கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த பகீர் சம்பவம் குஜராத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தின் மிந்தாபரி கிராமத்தில் கடந்த செவ்வாய் அன்று அரங்கேறியிருக்கிறது.
அதன்படி மிந்தாபரி கிராமத்தைச் சேர்ந்த லதேஷ் காவித் என்ற நபருக்கும், கங்காபுர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. அவர்களது திருமணத்தின் போது ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
அதனை கடந்த மே 17 அன்று காலை லதேஷும் அவரது உறவுக்கார சிறுவனான ஜியானும் (3) சேர்ந்து குடும்பத்தினர் முன்னிலையில் பிரித்து பார்த்திருக்கிறார்கள். அப்போது ஒரு பார்சலில் குழந்தைகள் விளையாட்டு பொருள் இருந்திருக்கிறது.
அதை பிரித்து இருவருக்கும் அந்த டாய் எப்படி செயல்படும் என்பதை அறிய ஆவலாக இருந்ததால் உடனடியாக அதனை சார்ஜ் செய்ய எத்தனித்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் திடீரென அந்த பொம்மை வெடித்ததில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
உடனடியாக நவ்சாரியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் லதேஷுக்கு தலை, கண்கள், கையிலும், ஜியானுக்கு தலை மற்றும் கண்களிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது.
இதனையடுத்து லதேஷின் உறவினர்களுக்கு, வெடித்து சிதறிய அந்த பரிசு மணப்பெண்ணுக்கு தெரிந்தவரான கொயம்பாவைச் சேர்ந்த ராஜு படேலிடம் இருந்து வழங்கப்பட்டது என தெரிய வந்திருக்கிறது.
அந்த ராஜு படேல் புது மணப்பெண்ணின் அக்காவும் ராஜுவும் காதலித்து வந்ததாகவும் அவர்கள் அண்மையில் பிரிந்திருக்கிறார்கள். அதன் காரணமாக அவர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே லதேஷின் திருமணத்தின் போது வெடி பொருட்கள் அடங்கிய பரிசை ராஜு கொடுத்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து, வன்ஸ்டா காவல் நிலைய போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








