உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி ஒருவர் தனது சொத்துகளை ராகுல் காந்தியின் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி புஷ்பா முன்ஜியால். முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியையான இவர் தனது 50 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துகளையும், 100 கிராம் தங்கத்தையும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.
புஷ்பா முன்ஜியால், டேராடூன் நீதிமன்றத்தில் தனது சொத்துகளின் உரிமையை ராகுல் காந்திக்கு அளித்து உயிலை தாக்கல் செய்துள்ளார்.
ராகுல் காந்தியின் எண்ணங்களால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், அதனால்தான் தனது சொத்தை அவருக்கு வழங்குவதாகவும், ராகுல் காந்தியும், அவரது யோசனைகளும் நாட்டுக்கு அவசியம் என்றும் புஷ்பா முன்ஜியால் கூறியுள்ளார்,
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரை நாட்டின் முன்னேற்றத்திற்காக ராகுல்காந்தியின் குடும்பம் பல தியாகங்களை செய்துள்ளதாகவும் புஷ்பா முன்ஜியால் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் பிரீத்தம் சிங்கை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து புஷ்பா முன்ஜியால் தனது உயிலை வழங்கினார்.