இந்தியா

மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டு.. வீட்டை ஜப்தி செய்யச் சென்ற வங்கி மேலாளரின் செயலால் நெகிழ்ச்சி!

வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நபருக்கு வங்கி ஊழியர் ஒருவர் செய்திருக்கும் மனிதாபிமான செயல் அனைவரையும் நெகிழச்சியடைய வைத்துள்ளது.

மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டு.. வீட்டை ஜப்தி செய்யச் சென்ற வங்கி மேலாளரின் செயலால் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் முரஅரி சசி. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு தனது வீட்டை அடமானம் வைத்து எஸ்.பி.ஐ வங்கியில் ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதையடுத்து பல மாதங்களாக கடனை திருப்பிச் செலுத்தாமல், வட்டியும் கட்டாமல் இருந்துள்ளார்.

இதுகுறித்து அவருக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் அவரிடம் இருந்து வரவில்லை. இதனால் வங்கி நிர்வாகம் வீட்டை ஜப்தி செய்த முடிவு செய்துள்ளது. இதையடுத்து இதற்கான நோட்டீஸை எடுத்துக்கொண்டு வங்கி மேலாளர் முரஅரி சசியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டு இருந்தைப் பார்த்துள்ளார்.

மேலும், அவருக்கு உதவியாக அவரது வயது முதிர்ந்த தாய் மட்டுமே இருந்துள்ளார். அவர்கள் வீடும் பழுதடைந்த நிலையில் இருந்துள்ளது. அதில் கழிப்பறை வசதி கூட இல்லை. பிறகு சசியின் இந்த நிலையைப் பார்த்த வங்கி மோலாளர் வேதனையடைந்துள்ளார். பிறகு இதுகுறித்து மேலதிகாரிகளிடம் கூறி சசி கட்டவேண்டிய தொகையை குறைத்துள்ளார்.

அதோடு நிற்காமல், அந்தத் தொகையையும் வங்கி மேலாளர் தனது சக ஊழியர்களிடம் நன்கொடை பெற்று அந்தக் கடனை அடைத்துள்ளார். பிறகு சசியின் வீட்டை சரி செய்து, கழிவறை, சமையலறை உள்ளிட்டவற்றை கட்டிக் கொடுத்துள்ளார். வங்கி மேலாளரின் இந்த மனிதாபிமான செயலைப் பார்த்து கேரள மக்கள் ஆச்சரியமடைந்து அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

வங்கிக் கடனை அடைக்கக்கோரி தொந்தரவு செய்யும் வங்கி ஊழியர்கள் மத்தியில் இப்படியும் ஒரு வங்கி மேலாளரா என பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். மனிதர்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிடவே கூடாது என்பதற்கான சமீபத்திய உதாரணமாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories