இந்தியா

மோடி அரசுக்கு எதிராக... வரலாற்றில் கண்டிராத வகையில் தொடர் போராட்டத்தை மேற்கொள்ளும் விவசாயிகள்!

மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் சிங்கு எல்லைக்கு தமிழ்நாட்டிலிருந்து விவசாய சங்கத்தினர் சென்றுள்ளனர்.

மோடி அரசுக்கு எதிராக... வரலாற்றில் கண்டிராத வகையில் தொடர் போராட்டத்தை மேற்கொள்ளும் விவசாயிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் சிங்கு எல்லைக்கு தமிழ்நாட்டிலிருந்து விவசாய சங்கத்தினர் சென்றுள்ளனர். சிங்கு எல்லையில் விவசாயிகள் ஒன்பதாவது மாதமாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கி.வே.பொன்னையன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “இந்திய வரலாற்றின் புதிய அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் சிங்கு எல்லைக்கு இன்று சென்றோம். விவசாயிகள் சுமார் 15 கிலோ மீட்டர் நீளம் தங்களது டிராக்டர்களிலும், சாலையிலும் குடில்கள் அமைத்து இந்தியாவின் மிகப்பெரிய தேசிய நெடுஞ்சாலையை மறித்து ஒன்பதாவது மாதமாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உழவர்களின் போராட்டம் அதன் நீண்ட நெடிய வரலாற்றில் புன்னபுர வயலார் எழுச்சியாக, உழவர்களின் எழுச்சியாக, தெலங்கானா எழுச்சியாக, நக்சல்பாரி எழுச்சியாக, கோவை கட்டை வண்டி போராட்டமாக, பல்வேறு வடிவங்களை எடுத்து முன்னேறி வந்திருக்கிறது.

இந்த ஜனநாயகக் காலகட்டத்தில் ஒரு கார்ப்பரேட் மயப்படுத்தப்பட்ட பார்ப்பனிய பாசிச அரசை எதிர்த்து தனக்கே உரிய தனித்துவமான போராட்ட உத்திகளை வகுத்து நடைபெறுவதுதான் இங்கே கவனம் கொள்ளத்தக்கது.

மிகவும் கட்டுப்பாடான, வரலாற்றில் கண்டிராத முறையில் போராட்ட வடிவங்களை வகுத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயக வழியில் தேர்வு செய்யப்பட்ட அரசு, நாடாளுமன்றத்திலும் ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை, வீதியில் இறங்கி போராடி வருவதையும் மதிப்பதில்லை.

தேசிய நெடுஞ்சாலைகளை தங்குமிடமாக மாற்றிக்கொண்டு எட்டு மாதங்களையும் கடந்து போராடுகிற விவசாயிகள் என்ன மன உறுதியோடு இருப்பார்கள் என்பதை புரிந்துகொள்ள மறுப்பது ஹிட்லரின் புதிய வடிவம் தான்.

ஹரியானாவில் இருந்து பானிப்பட்டு வழியாக வருகிற இந்த மிகப்பெரிய தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் தளங்கள் அமைத்தும், நிரந்தரக் கொட்டகைகள் அமைத்தும் டிராக்டர் டிரெய்லர்களையே மிக வசதியான தங்குமிடம் ஆக்கிக்கொண்டு அவர்கள் தங்கி இருக்கின்றனர். சுகாதார வசதியான கழிப்பறைகள் தொலைக்காட்சிகள் இன்னும் பல வசதிகளை சாலைகுடில்களிலேயே அமைத்துக்கொண்டு மிக உறுதியாக காந்தியத்தின் புதிய பரிமாணமாக இந்தப் போராட்டத்தை அவர்கள் நடத்துகிறார்கள்.

இது பஞ்சாபியர்கள் அல்லது சீக்கியர்கள் போராட்டம் என்ற எல்லைக்குள் சுருக்கி விடவே முடியாது ஹரியானாவில் இருக்கிற மேற்கு உத்தரப் பிரதேசத்தில் இருக்கிற ஜாட் மற்றும் இஸ்லாமிய உழவர்களும் இதில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உழவர்களின் போராட்டத்தில் பட்டியலின மக்களின் ஆதரவு பெற்ற அமைப்புகளும் கலந்துகொண்டு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் தொலைவு என்பது கிட்டத்தட்ட கன்னியாகுமரி வரை 3 ஆயிரம் கிலோமீட்டர் இருக்கும் அங்கே இருந்து உழவர்கள் பெரும் திரளாக வந்திருந்து இந்தப் போராட்டத்தை ஆதரிப்பது தங்களுக்கு அளப்பரிய மகிழ்ச்சியையும், தெம்பையும், ஊக்கத்தையும் அளிப்பதாக எங்களைச் சந்தித்த பல்வேறு உழவர் அமைப்பினர் தெரிவித்தனர்.

பஞ்சாப் பகுதியைச் சார்ந்த ஒரு துணை ஆட்சியர் எங்களை சந்தித்து தமிழர்களின் வருகை இந்தப் போராட்டத்திற்கு புதிய பரிமாணத்தை அளித்திருக்கிறது; இந்தப் போராட்டம் நாடு தழுவிய உழவர்களின் போராட்டம் என்பதனை தென்கோடியில் இருக்கிற நீங்கள் வருகைதந்து இங்கேயே தங்கி முழக்கங்கள் எழுப்பி, உரையாற்றி கலந்து கொள்வதன் மூலம் உருவாக்கியுள்ளீர்கள் என்று தெரிவித்து எங்களோடு நீண்ட நேரம் பேசினார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories