மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட அரசு ஊழியரின் முன் ஜாமின் மனு மீதான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, குற்றவாளியைப் பார்த்து, ‘‘அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள நீங்கள் தயாரா? அதற்கு தயார் என்றால், மனுவை பரிசீலிக்கிறோம். இல்லாவிட்டால், நீங்கள் சிறைக்குப் போக வேண்டி இருக்கும்’’ என கூறினார்.
தலைமை நீதிபதி பாப்டேயின் இந்தக் கருத்து இந்தியா முழுவதும் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அன்னி ராஜா, கவிதா கிருஷ்ணன், கம்லா பாசின், மீரா சங்கமித்ரா, மைமூனா மொல்லா மற்றும் ஜாகியா சோமன் உள்ளிட்ட 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பெண்ணுரிமை ஆர்வலர்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேயின் கருத்தைக் கண்டித்து, கடிதம் எழுதியுள்ளனர்.
அவர்களது கடிதத்தில்,"பாலியல் குற்றவாளிகளுக்குத் திருமணம் என்பது பாலியல் வன்கொடுமைக்கான உரிமம் என்ற செய்தியை தலைமை நீதிபதி சொல்ல வருகிறாரா? அத்தகைய உரிமத்தைப் பெறுவதன் மூலம், பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தவோ அல்லது சட்டப்பூர்வமாக்கவோ முடியும் என்கிற நிலை உருவாகக்கூடும். இவ்வாறு கருத்து தெரிவித்த நீதிபதி பாப்டே பதவி விலக வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் எழுதியுள்ள கடிதத்தில், ''இதுபோன்ற கேள்விகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதை உணர வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்தால், ஜெயிலுக்கு போகாமல் தப்பி விடலாம் என்ற சிந்தனையை உருவாக்கி விடும். இத்தகைய கருத்துகள், பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துவிடும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நீதிபதியின் கருத்தை நடிகை டாப்ஸியும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தக் கேள்வியை யாராவது அந்தப் பெண்ணிடம் கேட்டார்களா? பாலியல் வன்கொடுமை செய்தவனை அந்தப் பெண் மணக்க விரும்புவாளா? இதெல்லாம் ஒரு கேள்வியா? இது தீர்வா அல்லது தண்டனையா?” எனப் பதிவிட்டுள்ளார்.
இப்படி, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேயின் சர்ச்சையான கருத்துக்கு இந்தியா முழுவதிலும் எதிர்ப்புக் குரல் வலுத்து வருகிறது.